என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மானாமதுரை தொகுதி
தொடர்ந்து நான்கு முறை அதிமுக கைவசம் இருக்கும் மானாமதுரை தொகுதி கண்ணோட்டம்
தொடர்ந்து நான்கு முறை அதிக வெற்றி பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவரை அதிமுக களம் இறக்க, திமுக முன்னாள் அமைச்சரை களம் இறக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்மணக்கும் தொகுதியாகும். இங்கு உலக புகழ்மிக்க மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடம் இசை கருவி மானாமதுரை மண்ணில் செய்யப்பட்டு உலகம் முழுவதும் கர்நாடக இசை கலைஞர்களால் வாசிக்கப்படுகிறது.
இந்த தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சம அளவில் உள்ளனர். 1952 முதல் 3 முறை காங்கிரஸ் கட்சியும், சுதந்திரா கட்சி 2 முறையும், தி.மு.க. கூட்டணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிக முறை அ.தி.மு.க. வெற்றி கண்டுள்ளது.
2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல், 2019 இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நெட்டூர் எஸ். நாகராஜனே தற்போது மீண்டும் களம் காண்கிறார். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2011-ம் ஆண்டு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2006-ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்த தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார்.
மானாமதுரை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,26,144. பெண் வாக்காளர்கள் 1,28,131. மொத்தம் 2,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான் குடி ஆகிய தாலுகாக்களும், ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஜங்சன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக மானாமதுரை உள்ளது.
1952-ல் இருந்து 1971 வரை பொது தொகுதியாகவும், 1977-ல் இருந்து இப்போது (2021) வரை தனி தொகுதியாகவே உள்ளது. 2011-ல் தொகுதி மறு சீரமைப்பில் இளையான்குடி தொகுதியும் மானாமதுரையோடு சேர்க்கப்பட்டது. மானாமதுரை தொகுதியில் தனியார் கல்லூரிகள் மட்டும் உள்ளது. அரசு கல்லூரிகள் ஏதும் கிடையாது. கடந்த 4 சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு கொடுக்கப்படுகிறது தவிர இதுவரை அரசு கல்லூரிகள் வரவில்லை.
வானம் பார்த்த மானாமதுரையில் மிக முக்கிய தொழில் விவசாயம் ஆகும். ராமபிரான், அனுமனுக்கு உபதேசம் செய்த புண்ணிய பூமி மானாமதுரை ஆகும். கங்கை போல் வைகை நதி வடக்கு தெற்காக பாயும் இடத்தில் மானாமதுரை உள்ளது.
தமிழகத்தில் விவேகானந்தர் சொற்பொழிவு நிகழ்த்திய இடமாக மானாமதுரை உள்ளது. சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள் பிறந்து வாழ்ந்த இடம் மானாமதுரை தொகுதியில் உள்ள கட்டிக்குளத்தில் உள்ளது. அனைவரும் வந்து செல்லும் ஆன்மீக பகுதியாக மானாமதுரை திகழ்ந்து வருகிறது.
இதேபோல் மானாமதுரை பூர்விக வைகை பாசன பகுதியாகும். இங்கு விவசாயிகளுக்கான வைகை நீர் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. இந்தப்பகுதியில் வசிக்கும் பலர் மதுரை சென்றுதான் வேலை செய்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் எஸ். நாகராஜன், திமுக வேட்பாளர் தமிழரசி
மதுரை- மானாமதுரை தனி பஸ் போக்குவரத்து கிடையாது. ராமேசுவரம், பரமக்குடி, கமுதி பஸ்களில் மதுரைக்கு நின்று சென்று பயணிக்கும் நிலைமைதான் இன்றும் உள்ளது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மானாமதுரையில் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் வேலை வாய்ப்பை உருவாக்கும் எந்தவித பெரிய தொழிற்சாலைகள் இதுவரை வரவில்லை.
அதேபோல் திருப்புவனம் பகுதியில் இதுவரை பஸ் நிலையம் இல்லாதது மிக வேதனையாக உள்ளது. மிளகாய் விளைச்சலுக்கு பெயர் பெற்ற இளையான்குடி பகுதியில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்கூடம், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூபட்டப்பட்ட வேளாண்மை மையம் ஏதும் இல்லாததால் விவசாய பொருட்களை உரிய விலையில் விற்பதற்கு விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மானாமதுரை தொகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பூர்வீக பாசன பகுதியான மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி விவசாயிகளுக்கு முழுமையான நீர்பாசன வசதி விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட நிலையங்கள், மதுரை- மானாமதுரை நேரடி அரசு பஸ், சிவகங்கை, சென்னைக்கு மானாமதுரையில் இருந்து கூடுதல் பஸ் போக்குவரத்து.
மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் திட்டத்துக்கு கூடுதல் தடுப்பணைகள், ஆன்மீக பகுதியான மானாமதுரை, தாயமங்கலம், மடப்புரம், கட்டிக்குளம், குறிச்சி, லாடனேந்தல், திருப்புவனம் பகுதியில் நவீன சுகாதார வளாகங்கள், பக்தர்கள் தங்குமிடம் அமைக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம் செய்து புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2019 இடைத்தேர்தல்
நாகராஜன் (அ.தி.மு.க. வெற்றி)- 85228
காசிலிங்கம் (தி.மு.க.)- 77034
மாரியப்பன் கென்னடி (அ.ம.மு.க.)- 20395
சண்முகப்பிரியா (நாம் தமிழர்)- 9315
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-
1952- கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)
1957- சிதம்பர பாரதி (காங்கிரஸ்)
1962- சீமைச்சாமி (சுதந்திர கட்சி)
1967- சீமைச்சாமி (சுதந்திர கட்சி)
1971- சோனையா (தி.மு-.க.)
1977- பாரமலை (காங்கிரஸ்)
1984- பாரமலை (காங்கிரஸ்)
1989- துரைபாண்டி (தி.மு.க.)
1991- சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
1996- தங்கமணி (இ.கம்யூ.)
2001- பாரமலை (அ.தி.மு-.க.)
2006- குணசேகரன் (அ.தி.மு.க.)
2011- குணசேகரன் (அ.தி.மு.க.)
2016- மாரியப்பன் கென்னடி (அ.தி.மு.க.) தகுதி நீக்கம்
2019- நாகராஜன் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
Next Story






