என் மலர்
சிவகங்கை
- பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
- காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.
இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
- தேவகோட்டை அருகே தாய்-மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை தேடுதல் வேட்டை நடந்தது.
- போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி ஆகியோர் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தனர். இந்த சம்பவத்தில் வேலுமதியின் மகன் மூவரசு (வயது 12) என்ற சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனுக்கு மதுரை தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.
இந்த நிலையில் கண்ணங்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணின் திருமணத்திற்கு நகைகள் மற்றும் பணம் வழங்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.
கூட்டத்தில் அனைத்து நாட்டார்களும் மற்றும் கிராமத்தார்களும் பங்கேற்ற னர். அவர்கள் 2 பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும்.பா திக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையாக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தேவகோட்டை பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை விரை வில் கண்டுபிடிக்கவில்லை என்றால் தேவகோட்டையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொலையுண்ட 2 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். இதுபற்றி அறிந்த அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் மற்றும் கிராம மக்கள்அஞ்சலி செலுத்தி னர்.இதன் பிறகு கொலை யுண்ட கனகம், வேலுமதி உடல்களை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.
இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ ராஜ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த கண்ணங்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவகோட்டையில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதும், பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வீடுகளை தீயிட்டு கொளுத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டத.
- கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளை யான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுகுறித்து ஆய்வு செய்து அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயி களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளும் வகையில், இளையான்குடி வட்டத்திற்கு ட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பகுதிகளில் இது தொடர்பாக கணக்கெ டுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புக்கள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிடுவது மட்டுமின்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் சமுதாய பொங்கல் விழா நடந்தது. தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.
இதில் ஊராட்சி அலுவலகம் முன்பு 5 பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் தமிழரசி, மாசிலாமணி, மீனாட்சி, நேத்ரா, காளியம்மாள், கனிமொழி, பாண்டீசுவரி, வீரம்மாள், பால்ரூபதி, புவனேசுவரி, பாண்டியம்மாள், அம்பிகா, நாலுகோட்டை ஊராட்சி செயலர் சோனையா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், இணை இயக்குநர் நாராயணன், உதவிதிட்ட அலுவலர்கள் அன்புராஜ், குபேந்திரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- நெற்குப்பை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடடப்பட்டது.
- அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மன்ற தலைவர் அ.புசலான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன் புகையில்லா பொங்கல் குறித்து பேசினார். நகர் பகுதிகளில் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ மாட்டோம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவோம், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம், மின்சார கழிவுகளை பிரித்து எடுத்து ஒப்படைப்போம், நீர் வரத்து கால்வாய் பகுதிகளில் கழிவுகளை கொட்ட மாட்டோம், பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், மண்வளத்தை காப்போம், நோய் தொற்று பரவாமல் இருக்க காய்ச்சிய நீரை பருகுவோம், துணி பைகளை பயன்படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம், குப்பைகள் இல்லா தூய்மையான பேரூராட்சியாக மாற்றுவோம் போன்ற உறுதிமொழிகளோடு புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
- கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.
காரைக்குடி
காரைக்குடி வித்யாகிரி பள்ளி குழுமம் சார்பில் செஸ் போட்டியில் இந்திய அளவில் 79, தமிழ்நாடு அளவில் 28-வது இடம் பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர் பிரனேசுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் குழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, பள்ளிக்குழும தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகம்மது மீரா முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் போல் திகழ்வதற்கு, தனித்திறமைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறுவயதில் இருந்து செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020ல் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.
அதனைத்தொடர்ந்து, ஸ்வீடனில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் போட்டியில் பிரனேஷ் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின்
79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின்
28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இனிவரும்கா லங்களிலும் பிரனேஷ் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொ ணர்வதற்கு அடிப்படையாக இருந்த செஸ் கழக அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வித்யாகிரி பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் கடின பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, உறுதுணையாக இருந்து விடாமுயற்சியுடன் உலக சாதனை படைக்க செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக உள்ளனர்.
உலக அளவில் மொத்தம் 2,000 கிராண்ட் மாஸ்டர்கள் தான் உள்ளனர்.ஆனால் பிரனேஷ் தனது 16 வயதில் வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.இவரை போன்று பல்வேறு மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து உருவாக வேண்டும்.கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர் பிரனேசுக்கு வித்யாகிரி கல்வி குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் பழ.படிக்காசு, செஸ் கழக தலைவர் கருப்பையா, செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஹேம மாலினி சுவாமிநாதன் நன்றி கூறினார்.
- மானாமதுரை அருகே முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
- காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேபரமக்குடி சாலையில் உள்ள குறிச்சியில் வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு காசியில் இருந்து பூஜித்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமன், நந்தி மற்றும் சீரடி சாய் பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம். கோவிலில் உள்ள வில்வம், வன்னி, மாமர இலைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.
இக்கோவிலை கட்ட ஏற்பாடு செய்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ஆண்டுக்கு 5 முறை காசி சென்று தங்கி தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்.
பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் காசியில் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்களோ அதுபோல தமது சொந்த ஊரில் அனைவரும் காசி விஸ்வநாதர் அருளால் முன்னோர்கள் ஆசியை பெற வேண்டும் என காசி விஸ்வநாதர் கோவிலை உருவாக்கி உள்ளார்.
இங்கு தை, ஆடி, மாஹாளயம் (புரட்டாசி) ஆகிய அமாவாசை தினங்களில் காலை 7 மணி முதல் 11 மணிவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தவிர பிரதோஷம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா 10 நாட்கள் மற் றும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, நவகிரக யாகங் களும் நடைபெறுகிறது.
முன்னோர்கள் ஆசி கிடைக்க பக்தர்களுக்கு தர்ப்பண பொருட்கள் எள், அகத்தி கீரை, பூ ஆகியவைகளை கோவில் நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வரு கின்றனர். காசி செல்ல முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதரை கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்யலாம்.
- சபரிமலையில் விளக்கு பூஜையை மானாமதுரை அய்யப்ப பக்தர்கள் நடத்தினர்.
- விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலைச் சேர்ந்த குருசாமிகள் சோடா மணி, அணைக்கட்டு பாண்டி ஆகியோர் தலைமையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டனர்.
இவர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பின்னர் சன்னிதானம் அருகே தாங்கள் கொண்டு சென்ற இருமுடிகளை பிரித்து அதில் இருந்த காமாட்சி விளக்குகளை எடுத்து வரிசையாக வைத்து விளக்குகளுக்கு முன்பு அமர்ந்து விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.
அதன் பின்னர் அய்யப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.
இது குறித்து குருநாதர்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி கூறுகையில், உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் சுபிட்சமாக வாழவும், கொடும் நோய்தொற்றுகள் அழியவேண்டியும் முதல் முறையாக சபரிமலையில் எங்கள் குழு சார்பில் விளக்கு பூஜை நடத்தினோம் என்றனர்.
- தாட்கோ மூலம் நடைபெறும் திறன் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இந்த திட்டத்தில் தகுதி யுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேசன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்பு டைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வித் தகுதியில் பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.2 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.
இந்த பயிற்சியை வெற்றி கரமாக முடிக்கும் பட்சத்தில் AEROSPACE SKILL SECTOR COUNCIL -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப் படும். இந்த பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First,Vistra, Air India போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான கலைத்திருவிழாவில் காஞ்சிரங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2-ம் பரிசு வழங்கப்பட்டது.
- இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று 2-ம் பரிசை வென்று திரும்பினர்.
அவர்களுக்கு கிராம பொதுமக்கள் சார்பிலும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திரு விழா நடத்தப்பட்டு, இதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கையை அடுத் துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தனர். அதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேரு விளை யாட்டு அரங்கில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஆசிரியர்கள், கிராம பொது மக்கள், வரவேற்றனர்.
சென்னையில் நடந்த கலைத்திருவிழாவில் 2-ம் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளை காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
- கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
- திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வேலுமதி அவரது தாயார் கனகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகத்தின் பேத்தி திருமணத்திற்கு வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் அந்த குடும்பம் திருமணத்தை நடத்த வழி தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் 5 நாடு கிராம மக்கள் சார்பில் அந்த குடும்பத்திற்கு உதவுவதற்கு தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் 5 நாடு அம்பலத்தார்கள் கலந்து கொண்டனர்.
இரட்டை கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீசுவரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து 3 ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் 18 வயது மேற்பட்டவர்களாகவும், 40 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி பெறும் அனை வருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலா ளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும். மேலும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையில் இருந்து உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து மைதானம் செல்லும் வழி, தோட்டக்கலை துறை அலுவலகம் அருகில், காஞ்சிரங்காலில் அமைந்துள்ள சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலக முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






