என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவில் பூசாரி தியாகராஜன் நேற்று காலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மதிய நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் சன்னதி முன்பு இருந்த உண்டியலை பெயர்த்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    மாலையில் கோவிலுக்கு வந்த தியாகராஜன் உண்டியல் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணங்கோட்டையில் கடந்த 11-ந் தேதி 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தாய், மகள் கொலை செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மர்மநபர்கள் காம்பவுன்டு சுவர் ஏறி திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி நாய்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.

    கடந்த சில மாதங்களாகவே தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை-கொள்ளை, வழிப்பறி, நகைபறிப்பு போன்றவை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு இதுபோன்ற துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்.
    • காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாள் ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர்.

    தொடர்ந்து விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் மதுரை அண்ணாநகரை சேர்ந்த அருட்செல்வன் மனைவி நித்யஸ்ரீ என்ற மங்கையர்கரசி(வயது 38). வாடிக்கையாளர்கள் ஏகலைவன்(42), காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேலாளர் கண்டனூரை சேர்ந்த பூமதி(36), வாடிக்கையாளர் காமராஜ்(41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமயைாளர் சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்துள்ளன. வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது. தற்போது 2 மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

    அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகங்கையில் 120 அரங்குகளுடன் 2-வது புத்தகத் திருவிழா நடக்கிறது.
    • வருகிற 27-ந் தேதி முதல் 11 நாட்கள் நடக்கிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகரில் நடைபெற உள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத்திருவிழா தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 11 நாட்கள் புத்தக்கத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதில் கலந்து கொள்வதன் மூலம் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும், வாசிப்புத்திறனை ஊக்குப்படுத்துவதற்கென அடிப்படையாகவும் இருக்கும்.

    மாணவ, மாணவிகள் சேமிப்பின் மூலம் தாங்கள் விரும்புகின்ற சிலவகையான புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவியாக இந்த புத்தகத் திருவிழா அமையும். மேலும், இதில் நடைபெறும் பல்வேறு போட்டிகளின் மூலம் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கும் விரும்பும் புத்தகமே பரிசாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கல்லூ ரிகளில் இருந்து எளிதில் வந்து செல்வதற்கென போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது. நாள்தோறும் பல்வேறு வகையான திறன்வளர்ப்புப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் 110 அரங்குகள் புத்தக விற்பனைக்கும், 10 அரங்குகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலும் அமைக் கப்படுகிறது.

    பண்டையகால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள், கோட்டைகள், அரண்மனை மாதிரிகள் இடம்பெற்று சிவகங்கையில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவிற்கு சிறப்பு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று வருகிற 27-ந்தேதி அறிவிக்கப்படும். அங்கு நானே போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றதாகும்.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

    தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
    • இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.

    கடந்த 2019-20, 20-21, 2021-22 கல்வி ஆண்டு களுக்காக தொடர்ந்து 3 வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் மாணவ- மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வற்புறுத்தி வந்தனர். அதனை ஏற்று அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது.

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வரவேற்று பேசினார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டம், 4 அறிவியல் முனை வர் பட்டமும், 647 முனைவர் பட்டமும் (பி.எச்டி) வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மத்திய கல்வி மந்திரியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரியுமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து ெகாண்டனர்.

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்க ளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    • எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
    • வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

    திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
    • இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் Medical Assistant (Male Candidates) பணிக்கு, சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தை சேர்்ந்தோர்்களுக்கான, ஆட்சோ்ப்பு பணி சென்னை தாம்பரத்தில் உள்ள எண் 8, Airman Selection Centre, Air Force Station-ல் வருகிற 1.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த வா்களுக்கு 1.2.2023, 2.2.2023 மற்றும் 7.2.2023, 8.2.2023 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆட்சோ்ப்பு பணி நடைபெற உள்ளது. மணமாகாத ஆண்கள் 27.6.2002 முதல் 27.6.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும். மணமான ஆண்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியில் 10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்கள் தோ்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ,B.Sc (பார்மசி), படிப்பில் தோ்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    உடற்தகுதியில் Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding + 3.50 D including Astigmatism, Colour vision CP -III எனவும் இருக்க வேண்டும்.இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் போக்குவரத்து காவல் நிலையம், காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. தேவர் சிலை அருகில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலை, கல்லூரி சாலை வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை வலம் வந்தனர். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கண் பரிசோதனை செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், அரசு போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் நலங்கிள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் தொடர்ந்து நடந்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்களை போலீசார் குற்றவாளிகளை பிடிக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாட்டார்கள், நகரத்தார்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதற்கு சான்றாக பழங்கால வீடுகள் அரண்மனை போல் காட்சியளித்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் பூட்டி கிடக்கும் வீடு களை குறிவைத்து கொள்ளையிலு ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்று விடுகின்றனர்.

    ஆறாவயல் கிராமத்தில் உள்ள முதல்-அமைச்சரின் உறவினர் வீட்டில் கதவை உடைத்து தங்கம் மற்றும் வைர நகைகள் திருடிய சம்பவம் நடந்தது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. கோட்டூர் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

    தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் பேராசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அண்ணா சாலை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறவினர் வீட்டில் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன. அருகில் உள்ள வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டது.

    மனைவியை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு வந்து பார்த்தபோது வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரங்காடு பகுதி யில் வங்கி பணியாளர் வீட்டில் பகல் நேரத்தில் 48 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. மேலும் இடையன்காளி கோவில், முத்து பெரியநாயகி கோவில், இரவுசேரி காளியம்மன் கோவில், கற்படை அய்யனார் கோவில் உள்பட சில கோவில்களில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. இங்கு கண்காணிப்பு காமிரா இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது மர்மமாக உள்ளது.

    தேவகோட்டை நகரில் வளர்ந்து வரும் பகுதியான ராம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது. அவ்வாறு பொருட்கள் இல்லாத ராணுவ வீரர் வீடு உள்பட பல வீடுகளுக்கு கொள்ளையர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் நடந்தது.இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க படாமல் உள்ளனர். இதற்கு போலீ சாரின் மெத்தனமே முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகள், பேரன் ஆகியோரை அரிவாளால் வெட்டி வீட்டில் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் உட்பட 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட தாய்-மகள் இறந்து விட்டனர். பேரன் ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதில் குற்றவாளிகளை வருகிற 31-ந்தேதிக்குள் போலீசார் கைது செய்யாவிட்டால் 1-ந்தேதி கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இருந்தபோதிலும் கொலை யாளிகள் இன்னும் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை.

    இது கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    ×