என் மலர்
சேலம்
- உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
- தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகிலேயே கால்நடை மருத்துவமனையும் செயல்படுகிறது. இங்கு நாய், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை கண்ட கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரகுபதி விரைந்து வந்தார். தீ ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் அவர் கூறுகையில், இந்த அலுவலகத்தில் நான் உள்பட 5 ஊழியர்கள் பணி புரிந்து வருகிறோம். காலை 8.30 மணியளவில் அலுவலகத்தில் கரும்பு புகை வந்துள்ளதை கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு சில ஆவணங்கள் எரிந்துள்ளது. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன.
மேட்டூர்:
தமிழ்நாட்டில் நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டில் ரூ.120 லட்சம் மதிப்பில் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது தாய் மீன்கள் முட்டையிட்டு முட்டையிலிருந்து வெளிவரும் நுண் மீன் குஞ்சுகளை பிற வகை மீன்களால் உண்ணப்படுவதால் மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன் இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து நாட்டின மீன்களை பாதுகாத்திட நாட்டின மீன்களை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் செயற்கை தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கண்டைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் போது மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்திடும்.
இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 3 லட்சம் மீன் விரலிகள். இவை 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேட்டூர் காவிரி ஆற்றில் 4 ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் இருப்புச் செய்யப்பட்டது. இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.70 லட்சமாகும்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.கோபால், தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியம், மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்குகிறது.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2016 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.5.10 கோடியில் திருப்பணிகள் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. 25-ந் தேதி முதற் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி யது. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
கும்பாபிஷேக விழா
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர் நேரு மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற கோட்டை மாரியம்மன் தங்க தேரோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. முதல் நாள் மண்டல பூஜை இன்று மாலை தொடங்கு கிறது. அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் - செல்வி சார்பில் கோட்டை மாரியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் சாமி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.
- அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
சேலம்:
சேலம் கோரிமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு கொட்டச்சேடு, அயோத்தியாப்பட்டணம் வழியாக கீழே இறங்கினர். அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.
- ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு மாதம் 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்காலிக தேர்வு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதலாக ஒரு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்குவதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ெதாடங்கப்பட உள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் 13 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டம் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் குறித்த விவரங்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை அடுத்த மாதம் 8-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
- நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.
தாரமங்கலம்:
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
விழிப்புணர்வு
ராகி, கம்பு, சோளம் குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பயிரிடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதனை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.
இதில் விவசாயிகள் சிறுதானிய உணவு வகை பயிர்களை நன்கு பராமரிக்க நுனி கிள்ளுதல், யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் கஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் கோபி, வேளாண் அலுவலர்கள் சதீஷ் பாபு. செல்வி, தில்லைக்கரசி, தொழில்நுட்ப மேலாளர் அகிலா மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
- சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
பெட்ரோல், டீசலுக்கு ஒரே விலை
இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுங்க கட்டண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் புதிய சுங்கச்சாவடிகள் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை மொத்த சுங்க கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சங்ககிரியில் லாரிகளுக்கு என தனியாக தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். லாரி தொழிலுக்கு என சங்ககிரியில் தனி நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிக்கும் பிரச்சனையிலிருந்து லாரி உரிமையாளர்களை காத்திட வேண்டும். லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் லாரி பார்க்கிங் அமைத்து கொடுத்தால் வாகனங்கள் சாலையோரம் நிற்காமலும், விபத்து ஏற்படாமலும் இருக்கும்.
ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம்.
- இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முறையாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் தொட்டில் கட்டி அவரை அழைத்து சென்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்த கிராம மக்கள் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தங்கள் கிராமத்தின் அவல நிலை குறித்து குமுறியுள்ளனர்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். கிராமத்தில் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படும் நேரங்களில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத காரணத்தால் தொட்டில் கட்டிதான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம். அப்போது அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்களித்தனர்.
அதன்பின்பு இதுவரை யாரும் எங்களை பார்க்க வரவில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
- விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் இன்று காலையில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 33) என்பவர் ஓட்டி வந்தார்.
வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
இதில் பஸ்சுக்குள் சிக்கி பயணிகள் வலியால் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு ஓடி வந்து கண்ணாடியை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த டிரைவர் உள்பட 14 பேரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. மேலும் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் கொடுக்காததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதையடுத்து கடந்த 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால்அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று காலை உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. அதன் பிறகு மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூைஜ, மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், குல பங்காளிகள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
- விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.
சேலம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1.01.2024- ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியி டப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 பேர் , பெண்கள் 14,50,621 பேர், இதரர் 271 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
1.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 - ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.04.2024, 1.07.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 9.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ப ட்டு 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






