என் மலர்tooltip icon

    சேலம்

    • எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜக்கம்ம நாயக்கர் மகன் முத்துராஜ் (வயது 39). இவர் மாந்திரீகம் செய்து தாயத்து கட்டும் தொழிலும் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் ஜெயக்குமார் (37), மல்லூர் வேங்காம்பட்டி கீழ் தெருவை சேர்ந்த பூவரசன் (30), வேங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த ராஜா (28), அதே பகுதியை சேர்ந்த கணேசன் (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சம்பவத்தன்று இரவு முத்துராஜ் கடைக்கு சென்று விட்டு வந்தபோது மறைந்திருந்த ஜெயக்குமார் தரப்பினர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.

    இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம் பகுதி, ஸ்வர்ணபுரி, ஜங்சன் மெயின் ரோடு, பேர்லேண்ட்ஸ் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் குடும்பம், குடும்ப மாக பொதுமக்கள் புத்தாடை வாங்க துணிக்கடை களுக்கு திரண்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிக ளிலும் கூட்டம் அலை மோதியது. மேலும் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், 5 ரோடு, முதல் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலமும், போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர்.
    • வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை தரமான சேலைக்கு பெயர் போன ஊர். கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர்.

    அதோடு விசைத்தறி தயாரிப்பாளர், நூல் தயாரிப்பாளர், வார்ப்பு ராட்டை தொழிலாளி, நெசவு தொழிலாளி, வாஷிங் செய்பவர், அட்டை அடிப்பவர், டெக்ஸ்டைல் தொழில் செய்பவர் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சில வியாபாரிகள் சூரத்திலிருந்து தரமற்ற 2, 3 முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய சேலைகளை இறக்குமதி செய்து ரூ.300, ரூ.400 என்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கு இளம்பிள்ளை பகுதியில் சேலை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில் வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தரமற்ற சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை வாங்க பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றனர்.

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

    ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணபகவான் மரசிற்ப சாமிகளுக்கும், வன்னிமரத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அக்ரஹாரம் அம்மன் அன்னதானம் குழுவினரால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார்.
    • படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் ஒரு காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு சேலம் திரும்பினர்.

    கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் கருப்பூர் கரும்பாலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன் பகுதியில் இருந்த ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். ஆனால் கார் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காகமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    மேட்டூர்:

    சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி பஸ் நிலையத்தில் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், நங்கவள்ளி நகர செயலாளர் நடராஜ், மாதர் சம்மேளன மாவட்ட பொருளாளர் அம்பிகா, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் வேம்பன், விஜயமாணிக்கம், சாம்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி சந்திரன், சஞ்சீவி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
    • வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள வள்ளல் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி வீட்டுக்கு அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோஜ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் கஸ்பா திருமலைபட்டி தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37) என்பவரை இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
    • அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.

    சேலம்:

    ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.
    • இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 39). மாந்திரீகர்.

    நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வாழக்குட்டப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துராஜ் வீடு திரும்பவில்லை.

    கொலை

    இந்த நிலையில் எருமநாயக்கன்பாளையம் பகுதியில் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மர்ம சாவு என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் சம்பவ இடத்தை சேலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் கம்பியால் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கியுள்ளதாக தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் முத்துராஜ் மாந்திரீகம் செய்து குழந்தைகளுக்கு தாயத்து கட்டி வந்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 பேர் சிக்கினர்

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துச் சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தான் மாந்தீரிகரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். விசாரணை முடிவில் மாந்தீரிகர் கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது. 

    ×