என் மலர்
சேலம்
- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
- மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட மாட்டாது. அதேசமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந்தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு இன்று முதல் அடுத்த மாதம் 9- ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
- இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
சேலம்:
சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சபரிநாதன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசில் சபரிநாதன் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும் மகளும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சுரேஷ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில் 2 மகள்களும் பரிதவிப்பில் உள்ளனர்.
- தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
சேலம்:
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பாரி, ராஜேந்திரன், மணிகண்டன், ரபார்ட் கிங்ஸ்லி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இதனிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 829 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 760 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 63.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 64.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.91 டி.எம்.சி.யாக உள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 424 கனஅடியாவும், ஆற்றில் தண்ணீர் திறப்பு 424 கனஅடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 98.58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 856 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரத்து 836 கனஅடி தண்ணீர் குடிநீர் மற்றும் வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
- சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. மேலும் சரக்கு ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்பட 3 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும், மற்ற வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கார்மெண்ட்ஸ், நூற்பாலை உள்பட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந்தேதிக்கு முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்து 12 நாட்கள் ஆகியும் வடமாநில தொழிலாளர்கள் இன்னும் தமிழகத்திற்கு திரும்பவில்லை. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இன்னும் பூட்டியே கிடக்கின்றன. அது மட்டுமின்றி மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைளில் உற்பத்தி சரிந்து 40 ஆயிரம் லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு பரிமாற்றம் தடைபட்டுள்ளது. சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களுக்கு சென்ற 30 ஆயிரம் லாரிகள் அங்கு பெய்யும் மழையால் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் தினமும் அதனை எடுத்து சென்ற 5 ஆயிரம் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக மழை மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பால் 80 ஆயிரம் லாரிகளும், 30 ஆயிரம் இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் தமிழக சரக்கு வாகனங்கள் லோடு கிடைக்காமல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளால் உரிமையாளர்களுக்கு வாடகை இழப்பு ஏற்பட்டு வாகனங்கள் பெயரில் வாங்கிய கடனுக்கு மாத தவணை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகிறார்கள்.
எனவே கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் தவணையை வசூலிப்பதில் கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் லாரி தொழிலை நசிவில் இருந்து காக்க காலாண்டு வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
- மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆனைமடுவு மற்றும் ஏற்காட்டில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் லேசான தூறலுடன் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணி நேரம் கனமழை கொட்டியது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். இந்த மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 35 மி .மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 18.2, வீரகனூர் 10, ஓமலூர் 7, காடையாம்பட்டி 4, கரியகோவில் 2, மேட்டூர் 1.6, எடப்பாடி 1.2, சேலம் 1 மி.மீ. என மாவட்டடம் முழுவதும் 80 மி.மீ. மழை பெய்துள்ளது.
- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
- இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிரா விடர்கள் மற்றும் பழங்கு டியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
- அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர்.
வாழப்பாடி:
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமம் வழியாக நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப்பெண் ஒருவர் வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர் மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.
கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். சில தினங்களில் அந்த மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும் குழந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இவரை அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர். இச்சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் சாமியையும் பிரதிஷ்டை செய்து எட்டிமரத்து முனியப்பன், லம்பாடி அம்மன் கோவில் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் குழந்தைகளின் அழுகையை அம்மன் கட்டுப்படுத்தி நோய்நொடி வராமல் பாதுகாப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதன்படி ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குழந்தையை அம்மன் சன்னதியில் படுக்க வைத்து குழந்தைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
- உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
- இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.
காக்காபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.
இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






