என் மலர்tooltip icon

    சேலம்

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது.
    • பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    சேலம்:

    மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாண்டும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அதன்படி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.

    • ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நாளை (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
    • இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நாளை (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இன்று காலை விநாயகர் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதையடுத்து நாளை காலை 6 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து அழைத்து வருதல், 7 மணிக்கு மங்கள இசை, 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதையடுத்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

    • சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரு வுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்தி டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது.
    • அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மோகன் சேலம் மநாகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது-

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எனக்கு சொந்தமாக ரூ.60 கோடி மதிப்பில் 2 ஏக்க ர் விவசாய நிலம் உள்ளது. இதில் தற்போது தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலத்தை ஜெயராமன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்.

    இந்தநிலையில் அந்த நிலத்தை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். நேற்று அவர் உள்பட 20 பேர் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்போவதாக கூறி எனது விவசாய நிலத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதனை தடுத்து நிறுத்திய நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.

    அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எனவே அத்து மீறி விவசாய விளை நிலத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.  

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
    • 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம், பழைய பென்சன் திட்டம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி இன்று காலை கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திடீரென அப்பகுதியில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 132 பேரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருணம மண்டபத்தில் அடைத்தனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தாரமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் போலீசார் சோதனை செய்வதை அறிந்து அதன் உரிமையாளர்களான சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), லிங்கராஜ் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கண்ணனுக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவருக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கண்ணன் சிறுவாச்சூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் பழுது நீக்கும் ஊழியராக (வயர் மேன்) பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கண்ணன் வழக்கம்போல் நேற்று மாலை சிறுவாச்சூர் ராஜீவ் நகரில் உள்ள மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.

    வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
    • படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×