என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 132 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் (வயது 47), சின்னையா (50), சுப்பிரமணி (45), மாரிமுத்து (38), பானி (30) ஆகிய 5 பேரும் ஒரு விசைப்படகில் கடலுக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே சுமார் 30 நாட்டிக்கல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான குட்டி ரோந்து படகு மின்னல் வேகத்தில் வந்தது. அதிலிருந்த கடற்படை வீரர்கள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஒருசில படகுகளை சுற்றி வளைத்தனர். உடனடியாக மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் வலைகளை வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஒரு படகை மட்டும் மறித்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிலிருந்த மீனவர்களை சிறைப்பிடித்தனர். நீங்கள் மீன் பிடித்தது எங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என்று கூறினர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக படகில் இருந்த செல்வம் உள்பட 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர். பின்னர் அவர்களையும், விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். இரவு அங்குள்ள காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பிற்பகலில் தெரிய வரும்.
டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம் என மீனவர்கள் வாழ்க்கை முடங்கி போய் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். அதற்குள் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம். எல்.ஏ.வுமான தமிமூன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கட்ட தூர்வாரும் பணிகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் செய்யவேண்டும். சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் கருத்துக் களைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்காமல் அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சபரிமலை கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெகனாவிற்கும், முஸ்லிம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவர் 2016-ம் ஆண்டு மதமாற்றம் ஆகிவிட்டார். மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நல்லது செய்தால் வரவேற்போம். குறைகளை சுட்டிக்காட்டுவோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அரசில் தொய்வு இருந்தது உண்மை. எடப்பாடி அரசு 6 மாதத்திற்குள் கவிழ்ந்து அனைவரும் நினைத்தது போன்று எனது எம்.எல்.ஏ. பதவியும் போய்விடும் என்று நான் பயந்தேன். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க. அரசு ஒன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடித்து வருகிறது.
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இன்னமும் 6 மாதம் கழித்துதான் கருத்து கூற முடியும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் நான் கோரும் கோரிக்கைகள் 90 சதவீதம் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காமராஜர் ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு தான் வந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் வரிப் பணத்தில் தான் சாலை பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே எந்த அரசு வந்தாலும் அதை நினைவில் வைத்துக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல . ஆனால் அவர் மன்னிப்பு கேட்டும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.
மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கண்டிப்பாக வெற்றி பெறப்போவது கிடையாது. மனிதநேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #thamimunansari #metoo
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.
தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரைகள் கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாத்திமா திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
நூர்ஜகானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், நூர்ஜகானை சோதனை செய்த மதுரை தனியார் மருத்துவமனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் நாங்கள் நூர்ஜகானுக்கு அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கூறமுடியும்.
இதேபோல நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான் என்ன காய்ச்சல் உள்ளது எனக்கூற முடியும். சோதனையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் இருவரையும் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தாய்-மகள் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #swineflu
திருவரங்குளம்:
திருவரங்குளம் பகுதியில் உள்ள வேப்பங்குடி, திருவரங்குளம், மாங்கனாம் பட்டி, கைக் குறிச்சி, வல்லத்திரா கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் பற்றிய ஆய்வுப் பணி நடை பெற்றது.
இந்த பணியில் திமுக தலைமை கழக அறிவிப்பின் படி ஆலங்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் தலைமையில், திமுக மேலிட பார்வையாளர் மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், கைலாசம், தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, துணைச் செயலாளர்கள் மெய்யர், விஜயன், ஊராட்சி செயலாளர் முருகன், கே.வி. கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன், திருவரங்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், திருவரங்குளம் தி.மு.க கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக வாக்காளர் சேர்த்தல், நீக்கல்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும்.
மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும்.

பின்னர், நேற்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சிவலிங்கம் மறைந்தது. கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு சிவலிங்கத்தை காண ஏராளமானோர் குவிந்து தரிசித்தனர். அப்போது, சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடினர்.
இது குறித்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் அமைப்பின் செயலாளர் எடிசன் கூறுகையில், எங்கள் அமைப்பின் சார்பில் மரபு நடைபயணம் மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுனையில் சிவலிங்கம் மூழ்கி இருப்பதை ஊர் மக்களிடம் தெரிவித்தோம். அதன் பிறகு, ஊரார் சார்பில் சுனையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது என்றார்.
இது குறித்து சித்தன்னவா சலை சேர்ந்த பூஜகர் சின்னத் தம்பி கூறுகையில், கடந்த 1992-க்கு பிறகு தற்போது தான் சுனையில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த இரு நாட்களாக இந்தப் பணி நடைபெற்றது.
நேற்று சுமார் 15 நிமிடம் மட்டும் பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன் பிறகு மழை பெய்து படிப்படியாக சிவலிங்கம் மறைந்து விட்டது. தண்ணீர் மூழ்கியே இருப்பதுதான் இதன் சிறப்பாகும். இதன் பிறகு மழை பொழியும். விவசாயம் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
விராலிமலை அருகே உள்ள கோனாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 33). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள பிரிவு சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பாக்கியராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ் படுகாயமடைந்தார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் புகழ்பெற்ற சிவன்கோவில் உள்ளது. இங்கு கடந்த 9-ந்தேதி இரவு அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார். இதைக்கண்ட பொதுமக்கள் திருடன்...திருடன்... என சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பிய வாலிபர் திருவரங்குளம் மாவு மில்லின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு எந்த பொருட்களும், பணமும் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரும், மாற்றுத்திறனாளியுமான செல்வராஜ் வீட்டிற்குள் சென்று வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை திருடினார். மேலும் செல்வராஜின் 3 சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு, போலீஸ் கண்ணில் சிக்காமல் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து திருவரங்குளம் பாரதியார் நகரில் உள்ள புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது செல்வராஜ் வீட்டில் திருடிய 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை கோவிலின் வெளிப்பகுதியில் உள்ள மரக்கிளையில் வைத்துள்ளார். பின்னர் ஜன்னலை உடைத்து அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்தார்.
இந்தநிலையில் கோவில் அருகே செல்வராஜ் வீட்டில் திருடப்பட்ட 3 சக்கர வண்டி நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட போலீசார், அவனை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் அரிவாளை காட்டி. மிரட்டி தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் மரக்கிளையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் திருட வந்த வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தப்பி ஓடிய போது அந்த மோட்டார் சைக்கிளையும் விட்டு சென்று விட்டார். அதையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கர்மியா தெருவை சேர்ந்த முகமது தமீம் (வயது 29) என்பவர் 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் நேற்று கூத்தாநல்லூர் சென்று அங்கு பதுங்கி இருந்த முகமது தமீமை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அடையார் புற்றுநோய் மையம் இணைந்து நிலைய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை முகாம் கல்லூரி முதல்வர் ராமர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ஆறுமுகக்குமரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கி கூறுகையில், இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகின்றனர்.
புகையிலை பயன்பாட்டில் ஆண்கள் 43, பெண்கள் 16 சதவிகிதம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் சுமார் 2500 பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோயினால் உயிரிழக்கின்றனர். இளையோர்களான நீங்கள் முதலில் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தமாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கத்தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் கலந்து கொண்டு பேசும் போது, புகைப்பழக்கம் புகை பிடிப்பவரை மட்டுமல்லாது அவர் உடனிருப்பவரையும் பாதிக்கிறது. புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லாமல், இருதய நோய், நரம்பு தளர்ச்சி, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.
மேலும் ரத்தக்குழாய் அடைப்பால் கை, கால், இழப்பு மற்றும் ஆண்மை குறைபாடு ஏற்படலாம். எனவே புகையிலை, பாக்கு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் உபயோகத்தை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். முகாமில் பயிற்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். முடிவில் அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். #tamilnews
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். சிறுவர் சீர் திருத்த பள்ளியில் 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.
போலீசார் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில அறைகளில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி கூறும் போது, இது வழக்கமான சோதனை, எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றார்.






