என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள மருந்து கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவரான கருப்பையா என்பவரின் மகன் நாகராஜ்(27) என்பவருக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்து வந்ததும், சம்பவத்தன்று இருவரும் ஆலங்குடியில் இருந்து ஒன்றாக இணைந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நாகராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் விசாரணைக்கு பயந்து நாகராஜ் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது நாகராஜ் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை ஆலங்குடிக்கு வரவழைத்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்தூரி இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நாகராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது கஸ்தூரி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. கடந்த 28-ந்தேதி கஸ்தூரியை ஆலங்குடி ஆதனக்கோட்டை சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற நாகராஜ், அங்கு அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். அப்போது கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த நாகராஜ், போலீசாருக்கு தெரியாமல் இருக்க கஸ்தூரி உடலை சாக்குப்பையில் கட்டி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆற்றில் வீசி விட்டு, சென்னைக்கு தப்பி சென்றுள்ளார். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார்.
இதனிடையே கஸ்தூரியின் உறவினர்கள், நாகராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கஸ்தூரி உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 150 விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜாராம் (வயது 28), ராகுல் (23), பாலையா (60), லெட்சுமணன் (57), அருளரசன் (35), அருள் (40) ஆகிய 5 பேரும் கடலுக்கு சென்றிருந்தனர்.
அவர்கள் நள்ளிரவில் கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து கப்பலில் வந்தனர்.
அவர்கள் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டிற்கு சொந்தமான கடல் பகுதி. இங்கு மீன் பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த அனைத்து மீன்களையும் பறித்துக்கொண்டனர்.
பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களின் படகுடன் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பின்னரே தெரிய வரும்.
டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றத்திற்கு பிறகு கடந்த 22-ந்தேதி கடலுக்கு சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. அவர்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதற்குள் தற்போது மீண்டும் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது தினமும் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல் போன்றவை நடந்து வந்தன.
தற்போது அவர் பிரதமராக பதவியேற்ற மறுநாளே தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சம் தெரிவித்துள்ளனர். #Fishermenarrested
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.
கடந்த வாரம் பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது.
அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நேற்று, திருமணம் நடத்த திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. மணமகன் பாண்டியனை உறவினர்கள் அழைத்து வர சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டது.
தற்போது காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. வெளியே சென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதனால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை இரு வீட்டாரும் பேசி ஒத்தி வைத்து விட்டனர். மீண்டும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். இதற்கிடையே திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தகவலறிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். #DengueFever
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றிருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கை நெருக்கடி மூலம் வெளியேற்றி விட்டு தங்களின் ஆதரவாளரை சீன பேரரசின் விசுவாசிகள் ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.
இலங்கையில் தங்களுக்குத் தான் செல்வாக்கு உள்ளது என்பதை சீன பேரரசு, இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜ பக்சே, மீண்டும் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவார். மேலும் சீன பேரரசின் ஆதரவுடன் இந்தியாவிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கே ஒரு புறமும், மற்றொரு பகுதியில் சிறிசேனா மற்றும் ராஜபக்சேயும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சம்பந்தம் தலைமையிலான குழுவினர் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொலை நோக்கு பார்வையுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடும்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி மேடைக்கு வந்த போது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியிருந்தது. இது தனிநபர் அவமதிப்பல்ல. ஜனாதிபதிக்கு செய்யும் அவமதிப்பாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று இருக்கையில் அமர்ந்து அவரை அவமதித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால் மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று பேசி வருவதாகவும், நான் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும் தினந்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே வருகிறது.
இதுவரை எனக்கு விளக்கம் கேட்டு எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால் என்னையும் சேர்த்து 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன்.
அ.தி.மு.க. என்பது ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவன் நான் தான். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டு இன்று தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி உடையக் கூடாது என்று முதல் குரல் கொடுத்தவனும் நான் தான்.

பிரச்சினை எழுந்தபோது தற்போதைய ஆட்சி பலமாக இருந்ததால் நான் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினர் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.
அதற்கான காலம் கடந்து விட்டது. மீண்டும் அனைவரும் ஒன்று சேருவார்கள் என்ற நிலை இனியும் வராது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் கட்சியை காப்பாற்றி தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தோன்றவில்லை. அதையும் தாண்டி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்று சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Rathinasabapathy
புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்காக நல்வாழ்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். லாபத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைமையில் பா.ஜ.க.வுக்கு இல்லை.

இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளது மீண்டும் 2009ஐ ஞாபகப்படுத்துகிறது. இனப்படுகொலை சம்பவத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள். அதுபோன்ற சம்பவம் இனி நடக்க மோடி அரசு விடாது. ஏனென்றால் அவர் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்.
கடந்த மாதம் இந்தியா வந்த ராஜபக்சே 2009 போரின் போது காங்கிரஸ், தி.மு.க. அரசுதான் எங்களுக்கு உதவி செய்தது என்று கூறி அப்ரூவராக மாறி உள்ளார். இதற்கு தி.மு.க. - காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #Rajapaksa
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகாயி. இவர்களது மகள் ஷாலினி (வயது 3). நேற்று மாலை இவள், விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷாலினியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. நேற்றிரவு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நைசாக பேச்சு கொடுத்து, அவளை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரணை முடிவில் சிறுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சிறுமியின் பெரியப்பா மகளுக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






