என் மலர்
நீலகிரி
- இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஊட்டி:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.
தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.
நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.
அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.
இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.
ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.
இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
- கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது.
- மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உதகை:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண் தொழிலாளிகள் ஆவர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
#WATCH | Six construction workers died on the spot while undergoing house construction work at Lovedale, near Ooty in Tamil Nadu"Two workers with serious injuries taken to Ooty Government Hospital, one worker missing under the debris, rescue operations underway, say Police. pic.twitter.com/NkrUFxw0TU
— ANI (@ANI) February 7, 2024
- தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.
தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.
இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
- 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.
குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
- குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
- குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.
இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.
சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.
இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
- பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.
இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.
உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது.
- பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.
அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
உறைபனி மற்றும் கடுங்குளிரால் பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் சாலையோரங்களில் தீமூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.
குதிரை பந்தய மைதானம் மற்றும் ஊட்டியின் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை உறைபனி பெய்வதால், வீடுகளின் முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களில் ஒரு அங்குலம் வரை பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியின் நகராக ஊட்டி மாறிவருகிறது. இன்று வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து இருப்பதுடன், 72 சதவீதம் ஈரப்பதம் பதிவாகி உள்ளது.
மேலும் பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.
- உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
- வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நீர்பனியின் தாக்கம் தொடங்கி, பின்பு உறைபனியின் தாக்கம் தலைதூக்க ஆரம்பிக்கும்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூரில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று காலை 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீர்ப்பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் ஒருபக்கம் நீடித்து வரும் நிலையில் இன்னொருபுறம் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் உறைபனியின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
எனவே ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்தரைகளிலும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளை கம்பளி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
எனவே வாகன உரிமையாளர்கள் காலைநேரத்தில் வாகனம் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா, லவ்டேல் பட்பயர், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பச்சைபசேல் என காணப்படும் புற்கள் மீதும் உறை பனி படர்ந்து காணப்பட்டது.
குன்னூரில் வழக்கத்தை விட தற்போது கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ள தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூரில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
அதிகாலை நேரத்தில் தேயிலை பறிப்பதற்காக தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் நடு நடுங்க வைக்கும் உறைபனி காரணமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் முடங்கிப் போய் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பனி, உறைபனி என சீதோசன நிலை மாறி மாறி காணப்படுவதால் உள்ளூர் வாசிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
- சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
- எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலைஅடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அடுத்த ஜக்கலோடை கிராமத்துக்கு சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு கரடி வந்தது.
அங்குள்ள வீடுகளில் உணவு கிடைக்குமா? என தேடி அலைந்து திரிந்தது. அப்போது மாசிஅம்மாள் என்பவரின் வீட்டின் முன்பு நின்ற கரடி திடீரென கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது.
பின்னர் சமையலறையில் இருந்த நல்லெண்ணெயை ருசித்த குடித்துவிட்டு, அங்குள்ள பொருட்களை சூறையாடி சேதப்படுத்தியது.
பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த கரடி அதிகாலை நேரத்தில் மீண்டும் வந்த வழியாக காட்டுக்குள் புறப்பட்டு சென்றது.
அடுத்த நாள் காலையில் பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தபோது மாசியம்மாள் வீட்டின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்த விவரம் தெரியவந்தது. சம்பவத்தன்று மாசிஅம்மாள் வீட்டில் இல்லாததால், அவருக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
எங்கள் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலாவரும் கரடி தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இருப்பினும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
- சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
- சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
- போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊட்டி:
ஊட்டி அருகே எல்லநள்ளி, அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக்.
இவர் கேத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் அந்த பகுதியை சேர்ந்த கால்பந்து அணியில் விளையாடி வந்தார்.
கடந்த ஆண்டு ரித்திக் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ரித்திக்கின் உயிரிழப்பு அவரது பெற்றோர் மட்டுமின்றி, அவரது நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கால்பந்து போட்டியில் விளையாடும் போது, ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
தங்கள் ஆரூயிர் நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி நண்பருக்கு உருவசிலை செய்யும் யோசனை தோன்றியுள்ளது.
இதையடுத்து ரித்திக்கின் மார்பளவு உருவசிலையை வடிவமைத்து வாங்கினர். இதனை அவரது தாயிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அதன்படி அட்டுகொல்லை கிராமத்தில் ஏ.டி.கே. கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டி நடந்தது.
இந்த போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
போட்டியை காண வந்த அவர்களை, ரித்திக்கின் நண்பர்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில், ரித்திக்கின் நண்பர்கள், ரித்திக்கின் தாய் ரெஜினாவிடம் நினைவு பரிசு வழங்கினர்.
அதனை ஜான் திறந்து பார்த்த போது, அதில் ரித்திக்கின் மார்பளவு உருவ சிலை இருந்தது. இதை பார்த்ததும் ரெஜினா மற்றும் ஜான் இருவரும் கண்கலங்கினர். கண் கலங்கிய படியே தனது மகனின் உருவசிலை அளித்த நண்பர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த நண்பருக்காக, சக நண்பர்கள் மார்பளவு சிலையை உருவாக்கி, அவரது பெற்றோரிடம் வழங்கிய இந்த செயலானது அங்கு கூடியிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






