என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.
    • பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி அனிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (54). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரோஜாதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் கிரி தொழில் சம்மந்தமாக கோவைக்கு சென்றிருந்தார். அங்கு பணியை முடித்து விட்டு மீண்டும் நேற்று காலை கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.

    அப்போது நடு வழியில் பஸ் சென்ற போது ஒரு பக்கமாக சாய்ந்தபடி காணப்பட்ட கிரியை கண்டு சந்தேகம் அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரின் அருகே சென்று எழுப்ப முற்பட்டனர். ஆனால் கிரி எந்தவித அசைவும் இல்லாமல் சுயநினைவு இழந்தநிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முயற்சித்த நிலையில் நடுக்காட்டில் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.

    இதையடுத்து டிரைவர் நவநீதகுமார் பஸ்சை விரைவாக செலுத்தி மஞ்சூர் சென்றடைந்தபின் பிற பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் கிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மஞ்சூர் எஸ்.ஐ.தனபால் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஏராளமானோர் தினசரி மது பாட்டில்கள் வாங்குவதற்காக மஞ்சூருக்கு வந்து செல்கின்றனர்.

    இவர்கள் மூலம் மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே வசிக்கும் சிலர் மதுக்கடையால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதியில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியது.

    இந்நிலையில் மதுக்கடையை மஞ்சூரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினால் தங்களது வியாபாரம் பாதிக்ககூடும் என்பதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து மஞ்சூர் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2 மணி நேரம் கடையடைப்பு நடத்தவும் தீர்மானத்தனர். இதன்படி மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    இதை தொடர்ந்து மஞ்சூரிலேயே மதுக்கடையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை கோரி வரும் 20ம் தேதி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.

    அரசு டாஸ்மாக் மதுக்கடையை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

    • போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 4 பேர் காரில் வந்தனர். போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கேரள மாநிலம் வைத்திரி பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    அதனை கடந்த வாரம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க கோழிக்கோட்டில் இருந்து தமிழக எல்லையான சுல்தான்பத்தேரி, எருமாடு வழியாக இவர்கள் வைத்திரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார் பின்னர் கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினர்.

    • ஊராட்சி தலைவர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
    • இதுகுறித்து கொலக்கொம்பை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்து, ஊராட்சி தலைவரிடம் விசாரித்தனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலூர் கிராம ஊராட்சி.

    இந்த ஊராட்சியின் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரேணுகாதேவி(வயது48) உள்ளார். துணை தலைவராக தி.மு.கவை சேர்ந்த நாகராஜ் உள்ளார்.

    நேற்று தனது வீட்டில் இருந்த ஊராட்சி தலைவர் ரேணுகா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன உறவினர்கள், விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஊராட்சி தலைவர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்து, ஊராட்சி தலைவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறும்போது, மேலூர் ஊராட்சியில் துணை தலைவராக இருக்கும் நாகராஜ் என்பவர் எப்போதும் என்னிடம் மோதல் போக்கையை கடைபிடித்து வருகிறார். மேலும் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்யவிடாமலும் தடுத்து வந்தார். தொடர்ந்து அவர் இதுபோன்று செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதன்காரணமாக தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

    இதையடுத்து போலீசார் துணைத்தலைவர் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை துணைதலைவர் நாகராஜ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஊராட்சி தலைவருக்கு நான் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. சாலை அமைப்பதில் இரண்டரை லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெற்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதை திசை திருப்புவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார்.

    இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது குஞ்சப்பனை ஊராட்சி. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு மேலாடுபெட்டு பகுதியில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து சேதமடைந்து உள்ளது. சாலை சேதமடைந்த பணியை ஊராட்சிதலைவர் இமானுவேல் மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன.
    • சூறாவளி காற்று வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன.

    ஊட்டி;

    பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அய்யன்கொல்லி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்திசால், பாதிரிமூலா, காரக்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, கருத்தாடு, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. அதில் பட்டுப்போன மரங்களும் அடங்கும். சூறாவளி காற்று வீசும்போது, அந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கிறது. அவற்றின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் மின் விபத்து ஏற்படுகிறது. மேலும் சூறாவளி காற்று வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன. இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரவே அச்சமாக உள்ளது. எனவே முன்எச்சரிக்கையாக அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றனர்.

    • வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.
    • பீரோவுக்குள் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மிளகாய் பொடி இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 36 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றின் காரணமாக 35 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவா்களையும் சோ்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 36 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    • பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊட்டியில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

    ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னா் அவா் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு உயா்கல்வி பயில 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயா் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

    அத்துடன் தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. ெகாரோனா தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வாயிலாக மாணவா்கள் புரிந்துணா்வு–டன் படிக்கவும், அடிப்படை கணிதத் திறன்களை வளா்க்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாலை நேரங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மூலம் மாணவா்களின் வீடுகளுக்கு அருகிலேயே தன்னாா்வ–லா்களை கொண்டு வகுப்பு நடத்தப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகள், விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், மடிக்க–ணினிகள், மிதிவண்டி, சீருடைகள், பஸ் பயண அட்டை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, சத்துணவுடன் முட்டை போன்றவை வழங்கப்பட்டு, மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதும், கல்வி கற்கும் முறையும் ஊக்குவிக்கப்படுகிறது.

    எனவே பெற்றோா்கள் தங்களது பள்ளி வயது குழந்தைகள் அனைவ–ரையும் அரசுப் பள்ளிகளில் சோ்த்து அரசால் வழங்கப்ப–டும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியானது சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற–டைந்த–து. சுமாா் 75 ஆசிரி–யா்கள் விழிப்பு–ணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.
    • கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது.

    ஊட்டி;

    தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக சரக்கு லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூரில் இருந்து வெளிமாநிலத்துக்கு செல்வதற்காக சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. தொரப்பள்ளி அருகே லாரியின் செயல்பாட்டை டிரைவர் பரிசோதித்தார். தொடர்ந்து லாரியை திருப்ப முயற்சி செய்தார். அப்போது கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து லாரியை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

    இருப்பினும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் போலீசார் வராததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து பழுதான லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் 1 மணி நேர முயற்சிக்குப்பிறகு பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் லாரி எடுக்கப்பட்டு, போக்குவரத்து சீரானது.

    • கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    அபாயகரமான மற்றும் செங்குத்தாக சாலை செல்கிறது. இதனால் வாகனங்களை முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கி அனுபவம் இல்லாதவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வதால் கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

    இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குவிலென்ஸ் பொருத்தும் பணி நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இருபுறமும் சென்று வர அனுமதி உள்ளது.

    இந்தநிலையில் நேற்று கல்லட்டி மலைப்பாதையில் கார் ஒன்று பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், கார் சேதமடைந்தது.

    விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதன் மூலம் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களை, முன்கூட்டியே பார்த்து சிறிது தொலைவில் வாகனங்களை நிறுத்தி வழிகொடுக்க முடியும். மேலும் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்படாமல் இருக்கும். 36 கொண்டை ஊசி வளைவுகளில் புதிதாக குவிலென்ஸ் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொண்டை ஊசி வளைவுகளில் பொருத்தப்பட்ட குவிலென்சுகள் சேதமடைந்தது. அதனால் தற்போது புதிதாக குவிலென்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.

    காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்ததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி;

    நீலகிரி பந்தலூர், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பாலவாடி குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்தது.

    இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு யானை மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சைகொல்லி செல்லும் சாலையில் சென்றது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ×