என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி பெண் தலைவர் தற்கொலை முயற்சி
- ஊராட்சி தலைவர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
- இதுகுறித்து கொலக்கொம்பை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்து, ஊராட்சி தலைவரிடம் விசாரித்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலூர் கிராம ஊராட்சி.
இந்த ஊராட்சியின் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரேணுகாதேவி(வயது48) உள்ளார். துணை தலைவராக தி.மு.கவை சேர்ந்த நாகராஜ் உள்ளார்.
நேற்று தனது வீட்டில் இருந்த ஊராட்சி தலைவர் ரேணுகா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன உறவினர்கள், விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஊராட்சி தலைவர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்து, ஊராட்சி தலைவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறும்போது, மேலூர் ஊராட்சியில் துணை தலைவராக இருக்கும் நாகராஜ் என்பவர் எப்போதும் என்னிடம் மோதல் போக்கையை கடைபிடித்து வருகிறார். மேலும் ஊராட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்யவிடாமலும் தடுத்து வந்தார். தொடர்ந்து அவர் இதுபோன்று செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதன்காரணமாக தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
இதையடுத்து போலீசார் துணைத்தலைவர் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை துணைதலைவர் நாகராஜ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஊராட்சி தலைவருக்கு நான் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. சாலை அமைப்பதில் இரண்டரை லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெற்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதை திசை திருப்புவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார்.






