மஞ்சூர் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பெயிண்டர் சாவு

கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மஞ்சூர் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பெயிண்டர் சாவு
Published on

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி அனிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (54). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரோஜாதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கிரி தொழில் சம்மந்தமாக கோவைக்கு சென்றிருந்தார். அங்கு பணியை முடித்து விட்டு மீண்டும் நேற்று காலை கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.

அப்போது நடு வழியில் பஸ் சென்ற போது ஒரு பக்கமாக சாய்ந்தபடி காணப்பட்ட கிரியை கண்டு சந்தேகம் அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரின் அருகே சென்று எழுப்ப முற்பட்டனர். ஆனால் கிரி எந்தவித அசைவும் இல்லாமல் சுயநினைவு இழந்தநிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முயற்சித்த நிலையில் நடுக்காட்டில் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து டிரைவர் நவநீதகுமார் பஸ்சை விரைவாக செலுத்தி மஞ்சூர் சென்றடைந்தபின் பிற பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் கிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மஞ்சூர் எஸ்.ஐ.தனபால் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com