search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சூரில் கடைகள் அடைப்பு
    X

    மஞ்சூரில் கடைகள் அடைப்பு

    • மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஏராளமானோர் தினசரி மது பாட்டில்கள் வாங்குவதற்காக மஞ்சூருக்கு வந்து செல்கின்றனர்.

    இவர்கள் மூலம் மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே வசிக்கும் சிலர் மதுக்கடையால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதியில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியது.

    இந்நிலையில் மதுக்கடையை மஞ்சூரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினால் தங்களது வியாபாரம் பாதிக்ககூடும் என்பதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து மஞ்சூர் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2 மணி நேரம் கடையடைப்பு நடத்தவும் தீர்மானத்தனர். இதன்படி மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    இதை தொடர்ந்து மஞ்சூரிலேயே மதுக்கடையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை கோரி வரும் 20ம் தேதி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.

    அரசு டாஸ்மாக் மதுக்கடையை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

    Next Story
    ×