என் மலர்
நீலகிரி
- ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது.
- பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஊட்டி
எப்பநாடு ஊராட்சியில் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு குத்துவிளக்கேற்றி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
ஒவ்வொரு குக்கிராமமும் வளா்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இப்பகுதி மக்கள் மின்சார வசதி வேண்டியும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், சாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனா். இவை அனைத்தும் கள ஆய்வு செய்து சீா் செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பொதுமக்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலா்களும், உள்ளாட்சித் துறை அலுவலா்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் குழந்தைகளின் நலன் கருதி இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை அதிகரிக்க வழிவகை செய்கிறது. அதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சாா்பில் உயா் ரத்தஅழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு இரண்டு மாதத்துக்கான மருத்துவப் பெட்டகத்தை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நம் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், நாம் இருக்கும் இடம் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற நிலையினை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, எப்பநாடு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை பாா்வையிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தினையும் வழங்கினாா். அதனை தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், எப்பநாடு ஊராட்சித் தலைவா் சிவகுமாா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் மரு.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா்.
- அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.
பின்னா், காயமடைந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது.
- நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேருராட்சிக்கு உட்பட்ட சோகத்துரை சக்கலட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம மக்கள் இணைந்து அனைவரும் பயன் பெரும் வண்ணம் நூலகம் தொடங்கப்பட்டது. முன்னதாக சக்கலட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊர் தலைவர் ராஜி, சிவயோகி, சிவக்குமார், பேருராட்சி வார்டு உறுப்பினர் நிரோஷா, ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நூலகம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
- தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.
- மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது
ஊட்டி
மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது
காந்திஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டி சேரிஙகிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கதர் துணியின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் காதிகிராப்ட் சென்று நிர்வாகிகள் அனைவருக்கும், காதி துணி வாங்கிக் கொடுத்தார்.
தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் மண்டல் தலைவர் பிரவீன்,பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், கார்த்திக், துணைத்தலைவர்கள் சுதாகர், ஹரி கிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் பிரேமி யோகன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன் ,மாவட்ட கூட்டுறவு துறை செயலாளர் விசாலி, மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கண்ணன், நகர செயலாளர் ராகேஷ். தடவியல் துறை மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்,
- நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
- காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.
ஊட்டி
நேபாளத்தை சேர்ந்தவர் ரமேஷ் பகதூர். (வயது 42)/இவர் தற்போது நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக கிளிப் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை அவரை தாக்க முயன்றது. காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்று முட்டி வீசியது.
இதில் அவர் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆயுத பூஜை தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.
- ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 10,000 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று இது 14,000ஆக அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்படும். கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றனா்.
கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது சீசன் தொடங்கிய நிலையில், தொடா்ந்து மழை பெய்து வந்ததால் நீலகிரி மாவட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வரவில்லை.
தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.
ஊட்டியில் பகலில் வெயிலும், இரவில் நீா்ப்பனியும் என இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் மத்திய பஸ் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதைத் தொடா்ந்து, போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ்பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், பர்லியார் பழப்பண்ணை என அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 10,000 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று இது 14,000ஆக அதிகரித்து காணப்பட்டது.
- நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- கடையில் இருந்த முட்டைகள் அனைத்து உடைந்து சிதறி கிடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனத்தை விட்டு வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து வீசி சூறையாடி வருகிறது.
மேலும் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.
மஞ்சூர் அருகே கண்டி பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் அவர் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அதிகாலை டீக்கடையை திறப்பதற்காக சசி கடைக்கு வந்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த முட்டைகள் அனைத்து உடைந்து சிதறி கிடந்தது. நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த கரடி கடையை உடைத்து உள்ளே நுழைந்து முட்டையை உடைத்து குடித்து சென்றது தெரியவந்தது.
100க்கு மேற்பட்ட முட்டைகளை கரடி உடைத்து குடித்துள்ளது. இதுகுறித்து சசி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே டீக்கடைகளை குறிவைத்து கரடிகள் தாக்கும் சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- ஜோதிமணி வசித்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது.
- குடோனில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆளரை கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் மனோகரன்.
இவரது மனைவி ஜோதிமணி (வயது34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இதையடுத்து மோசஸ் மனோகரனும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக ஜோதிமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான மோசஸ் மனோகரன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜோதிமணி வசித்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது அது மாயமான ஜோதிமணி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அருவங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்து பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்
- கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதுமே நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்படும்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சஜி மற்றும் திவ்யா ஆகியோர் தங்களது குடும்பத்தினர் 6 பேருடன் கார் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஊட்டி காமராஜர் சாகர் அணையை பார்வையிட சென்றனர்.அப்போது காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினர்.இதை பார்த்த பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியவர்கள், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள்,உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களிடமிருந்து அபராதமாக ரூ.57,500 வசூலிக்கப்பட்டது.
- குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
- 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
குன்னூர்
குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தின விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு என்ன தேவை என்று அவைகளை பூர்த்தி செய்து தருவதாக பேசினார். 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யாரேனும் மதுவை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார்(43) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 12 மது பாட்டில்கள் இருந்ததும். அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






