என் மலர்
நாமக்கல்
- விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள்.
- அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30, 31-ந் தேதி மற்றும் நவம்பர் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களிலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மண்டபம், சத்திரம் மற்றும் வாகனங்கள் மூலமாக பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அன்னதானம் வழங்குவார்கள். அப்படி உணவு வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டவிதிகளின்படி உணவு தயாரிப்பதற்கான பதிவு சான்று பெற வேண்டும். அதன் பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும்.
மேலும் அன்னதானம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் பாக்கு மட்டைத் தட்டுகள், வாழை இலை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று பெற 04286-299429 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்று மார்பக புற்றுநோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
- நாமகிரிப்பேட்டையில் இருந்து புதுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பேளுக்குறிச்சி அருகே வேலப்பட்டியை சேர்ந்த தனது மாமனாரான கருப்பண்ணன் (65) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- குடிநீர் குழாய்கள் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள புதுப்பட்டி வாணி கிணறு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் பெட்ரோல் பங்க் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் நாமகிரிப்பேட்டையில் இருந்து புதுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பேளுக்குறிச்சி அருகே வேலப்பட்டியை சேர்ந்த தனது மாமனாரான கருப்பண்ணன் (65) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
குடிநீர் குழாய்கள்
புதுப்பட்டி செல்லும் வழியில் உள்ள ஈச்சம்பாறை அருகே சென்றபோது சாலையோரத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது மாரியபப்பன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்த கருப்பண்ணன் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது.
- தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதையடுத்து முட்டை விலை 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.96-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
- ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
- இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பம் எப்போதும் நடப்பட்டு இருக்கும். இதனால் இங்குள்ள அம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பூச்சாட்டுதல்
இக்கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திரு விழா தொடங்கியது.
இதையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் வெடித்து சிவன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை வழங்கி வணங்கினர். சுமார் 1 டன் அளவுக்கு பக்தர்கள், மண்டபக் கட்டளைதாரர்கள் அளித்த பூக்களால் அம்மன் மலர் குவியலுக்குள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாளை (26-ந் தேதி) கம்பம் நடும் விழா நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு குழந்தை வரம் வேண்டுவோருக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு பூவோடு பற்ற வைத்தல், விடியற்காலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது. 7-ந் தேதி இரவு கொடியேற்று விழாவும், 8-ந் தேதி காலையில் செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு அக்கினி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்கினி குண்டம் பிரவேசித்தல் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி வண்டிவேடிக்கை நடக்கிறது. 11-ந் தேதி இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. அன்று இரவு சப்தாபரணம், வாணவேடிக்கை, நாதஸ்வர கச்சேரி, நையாண்டி மேளதாளத்துடன் நடக்கிறது.
விழாவையொட்டி தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார், தக்கார் கீதாமணி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது. பண்டிகை காரணமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்திற்க்கு கொண்டுவரப்பட்டது.
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 8.52 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 635 தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.81-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.25.35-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் விற்பனையானது.
அதேபோல் 175.05 குவிண்டால் எடை கொண்ட322-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.79-க்கும், சராசரி விலையாக ரூ.84.89-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் என விற்பனையானது. ஒரே நாளில் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 14 லட்சத்து 26 ஆயிரத்து 752-க்கு விற்பனையானது.
- பரமத்திவேலூர் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
- கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணா நகர், சேளூர், பிலிக்கல்பாளையம், கோப்பணம்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பெரிய சோளிபாளையம், கபிலக்கு றிச்சி, இருக்கூர், கொத்த மங்கலம், தி.கவுண்டம் பாளையம், சிறு நல்லிகோவில், திடுமல், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பா ளையம், கபிலர்மலை, நன்செய்இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
வெல்லம் தயாரிக்கும் ஆலை
கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயி கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்பை விற்பனை செய்கின்றனர். இந்த ஆலைகளில் கரும்பிலிருந்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில் சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர்.
பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்குள் 13 ஏல மண்டிகள் உள்ளது. இங்கே குறிப்பிட்ட சில நபர்களே வெல்லம் விலையை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
தேசிய வேளாண்மை சந்தை
எனவே தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம் நடத்துவது போல் வெல்லத்தையும் ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் ஏல மண்டிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல் வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கரும்பு விலைகளை அவர்களே நிர்ணயம் செய்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இது குறித்து கரும்பு ஆலை வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் கூறியதாவது:-
ஏல மண்டியில் வெல்லம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விலை போகின்றது. ஆனால் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
விவசாயிகளை விட கமிஷன் ஏஜென்ட்களுக்கும், புரோக்கர்களுக்கும் அதிக அளவில் லாபம் ஈட்டுகின்றனர். வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சொற்ப லாபமே கிடைக்கிறது.
கலப்பட வெல்லம்
ஒரு சில கரும்பு ஆலை உரிமையாளர்கள் வெல்லம் தயாரிக்கும் போது அரசால் தடை செய்யப்பட்ட மலிவான சர்க்கரையை 1 கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கி வெல்லப்பாகில் கலந்து கலப்பட வெல்லத்தை 40 ரூபாய்க்கு விற்கின்றனர். அதேபோல் வெல்லம் தயாரிக்கும் பாகில் பல்வேறு வகையான ரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன.
கலப்பட வெல்லத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும். வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு தேசிய வேளாண்மை சந்தையில் வெல்லம் ஏலம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.
- இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 10-வது நாளை முன்னிட்டு பூச்சொறிதல் விழா நடைபெற்றது.
இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் எல்லையம்மன் கோவில் நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் நவராத்திரி 10-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
- காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
- சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தார் சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது.
- கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில், பெரியூர் உள்ளது. இந்த பகுதியின் வழியாக நாமக்கல் நகராட்சிக்கு புதியதாக அமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் உள்ளது. பெரியூரின் மத்திய பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் போன்றவை அமைந்துள்ள 4 ரோடு பகுதி உள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பெரியூர் நான்கு ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டிலும், நத்தமேடு செல்லும் ரோட்டிலும், குடிநீர் பைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
ஊரின் மத்தியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






