என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடல்நிலை சரியில்லாததால் கணவன் தற்கொலை; அதிர்ச்சியில் விஷம் குடித்து மனைவியும் மரணம்
- கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- தரையில் ஜெயமணி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரி பூசாரிபட்டிபுதூரை சேர்ந்தவர் அங்கமுத்து (60). சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயமணி( 57). கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அங்கமுத்துவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் மனைவி ஜெயமணி தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் தூக்குப்போட்டு அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். திடீரென தூக்கம் விழித்து பார்த்த ஜெயமணி கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கணவரை பிரிந்து வாழ விரும்பாத அவர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் விட்டத்தில் அங்கமுத்து தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தரையில் ஜெயமணி வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் அங்கமுத்து மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






