என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    கிழங்கு ஆலைகள்

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங் கொட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    ரூ.1000 சரிவு

    கடந்த வாரம் இந்த மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் கிழங்கு

    அதுபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்ந்து டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது.
    • இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த வெப்படை போலீசார் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்த கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கும். இறந்தவர் யார்?, எந்த ஊர், பெயர் போன்ற விபரங்கள் தெரியவில்லை.

    உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிப்பாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிப்பாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர். அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவரது பெயர்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விபரங்கள் தெரியவில்லை.

    அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பு செய்ய ரூ.95 ஆயிரத்துக்கு அனுமதி கோருவது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கோமதி உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

    நாமக்கல்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

    நாமக்கல்லில் சேலம் சாலை 4 தியேட்டர் அருகில் தொடங்கிய நடைபயணம் பிரதான சாலை, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் வழியாக பஸ்நிலையம் சென்றது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பஸ்நிலையம் அருகே திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசினார்.

    மந்திரவாதி

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாமக்கல்லில் பல இடங்களில் நீட் விலக்கு போஸ்டர் பார்த்தேன். தி.மு.க. எப்போதும் எந்த கதவை தட்ட வேண்டும் என்று தெரிந்தும், அந்த கதவை தட்ட மாட்டார்கள்.

    உதாரணமாக கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை என்றால், அந்த மாநிலத்துடன் பேச வேண்டும். ஆனால் அந்த மாநில முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதாமல், பிரதமர், ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவார். ஆனால் எங்கே கதவு திறக்காதோ அங்கே போவார். அதேபோல நீட்டை பொறுத்தவரையில், உங்களுக்கு மத்திய அரசு எதிரி என்று நினைத்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுங்கள்.

    நீட் வந்தபிறகு கிராமபுறத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு போகிறார்கள். ஆனால் தி.மு.க. நடத்தும் தனியார் கல்லூரிக்கு டொனேசன் வாங்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு முட்டையை தூக்கி செல்கிறார். முட்டை வைத்து மந்திரித்தால் நீட் காணாமல் போய் விடும் என்று முட்டை மந்திரவாதியாக செல்கிறார்.

    வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் ஊழலற்ற ஆட்சி நடத்தும் மோடிக்கு உங்கள் முழு ஆதரவை தர வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், இந்தியா கூட்டணிக்கும், பொய் சொல்ல கூடிய முதல்-அமைச்சருக்கும், ஊழல் செய்யும் தி.மு.க. அரசுக்கும் வாய்ப்பு அளிக்க கூடாது.

    பாதயாத்திரை செல்லும் இடம் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வருகிறார்கள். இதை பார்க்கும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்கிற எண்ணம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நிச்சயமாக பா.ஜனதா அதை செய்து காட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி. துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் ஷியாம்சுந்தர், மாவட்ட பொது செயலாளர்கள் முத்துக்குமார், ரவி, சேதுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராம்குமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்வாசன், ஆன்மீக பிரிவு பிரவீன்குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நடை பயணத்தில் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.89-க்கும், குறைந்தபட்சமாக 63.79- க்கும்,சராசரியாக ரூ.74.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 43 ஆயிரத்து 250- க்கு ஏலம் நடைபெற்றது.

    வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 900 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 86.89- க்கும் குறைந்தபட்சமாக ரூ 58.99- க்கும், சராசரியாக ரூ 74.09- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 3 லட்சத்து 88 ஆயிரத்து 369- க்கு ஏலம் நடைபெற்றது.

    • கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் துறையூர் சாலை கூலிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது தாய் சரஸ்வதி ரெட்டிபட்டி ஊராட்சி துணை தலைவராக உள்ளார். கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் லைட் கட்டுவதில் ஒரு தரப்புடன் முன்விரோதம் இருப்பதாகவும், அதன் காரணமாக ஆடுகளை கொன்று இருக்கலாம் எனவும், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் கொசுவலை பிடித்துக் கொண்டு கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் இங்குள்ள கடைகள், அரசு அலுவலகங்கள் முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால் தற்போது கொசு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
    • சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணம் தாட்கோ வழங்கும். விருப்ப முள்ளவர்கள் இதில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நவம்பர் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் அண்ணாமலை பேச உள்ளார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மதியம் 2 மணி அளவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள எல்.எம்.ஆர். தியேட்டர் அருகே நடைபயணத்தை தொடங்குகிறார்.

    பின்னர் சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோவில், சிங்கப்பூர் பிளாசா மற்றும் மணிக்கூண்டு வழியாக பரமத்தி சாலையில் தில்லைபுரம் வரை நடந்து செல்ல உள்ளார்.

    பின்னர் அங்கு மாலை 6 மணி அளவில் வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்களான சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் வி.பி.துரைசாமி, ரத யாத்திரையின் மாநில பொறுப்பாளர் நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் டாக்டர் ஷியாம் சுந்தர், லோகேந்திரன், மாநில மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    அதன் பிறகு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்செங்கோட்டிற்கு சென்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சேந்தமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் மாலையில் ராசிபுரம் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச உள்ளார். இதையொட்டி கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள உணவ கங்கள், பாஸ்ட்புட் கடைகள், மற்றும் பலகார கடைகள் பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் உத்தரவின் பேரில் பரமத்திவேலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள் மற்றும் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது உணவகத்தில் வைத்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாமிசங்கள் மற்றும்உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாதம் மற்றும் மீதமாகி போன உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தனர். ஆய்வுக்கு பின்னர் சில உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ×