என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகு தியில் விவசாயம், நெசவு பட்டு தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் அணைக்கட்டில் அண்ணா பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வரை பரமத்தி போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜேடர்பாளையம் பொறுப்பு பதவியில் உள்ளார்.

    இளம்பெண் கொலை

    ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் தீ வைப்பு சம்பவம், மரங்கள் வெட்டி சாய்ப்பு சம்பவம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் சந்திக்க 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமத்திக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கோரிக்கை

    மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி, கையெ ழுத்துக்காகவும் காத்திருக்கும் எப்.ஐ.ஆர். மற்றும் இதர கோப்புகள் கால தாமதமாக ஆகிறது. இதனால் நேர விரையம் ஆகின்றது. ஆகவே ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு நிரந்தர போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என 52 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு உறுதி

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் ஜேடர்பாளையம் அமைதியான ஏரியாவாக இருந்தது. மேலும் ஜேடர்பாளையம் சிறிய ஏரியாவாகவும் உள்ளது. அங்கு அதிக குற்றங்கள் பதிவாகவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இத்தகைய சூழ்நிலை உள்ளது. வரும் காலங்களில் அரசு உத்தரவுபடி தற்போது உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்ட ராக பதவி உயர்வு ஏற்படும்போது ஜேடர்பாளையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.

    • ழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.
    • அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப்பிர வேசத்திற்கு செல்வதற்காக திருச்செங்கோடு வந்து அங்கிருந்து பரமத்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    லாரி மோதியது

    அப்போது நல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது குமாரபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் (34) என்பவர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் குழந்தைவேலுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் அவரது மனைவி வளர்மதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரிதாபமாக இறந்தார்

    அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குழந்தைவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். சிறிது நேரத்திலேயே மனைவி கண் முன்னே அவர் பரிதாபமாக இறந்தார்.

    வளர்மதியை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    டிைரவர் கைது

    இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் லாரி டிரைவர் ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    • ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
    • ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    ஓவிய ஆசிரியர்

    இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

    இதுபற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போலீசுக்கு தகவல்

    இதுபற்றி தெரிய வந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி சுமன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனராசு, முத்து கிருஷ்ணன், மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    வாக்குவாதம்

    பொதுமக்கள் சமசரம் அடையாமல் ஆசிரியர் ராமமூர்த்தியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர். இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை ஒரு அறையில் இருந்து வெளியே கொண்டு வர முயன்றனர்.

    கைது

    இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். பின்னர் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர். பின்னர் வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

    சிறையில் அடைப்பு

    பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை சஸ்பெண்டு செய்யவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

    தற்கொலை

    இந்த நிலையில் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த மாரிமுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து தற்கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்ட சாதத்தை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் முழுகும் அளவிற்கு அன்னத்தை சாத்தினார்கள். பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து பரமேஸ் வரர் திருமேனியில் உள்ள அன்னத்தை எடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    மீதமுள்ள சாதத்தை அருகிலுள்ள காவிரி ஆறு மற்றும் நீர் நிலை களுக்கு கொண்டு சென்று நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினார்கள். அன்னாபிஷேக விழா வில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுபவர் களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதே போல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பழைய காசிவிஸ் வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீ ஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவபெரு மான் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி

    சேலம் மாவட்டம் வாழப் பாடி அருகே உள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், விலாரி பாளையம் மோட்டூர் சொர்ணாம்பிகை உடனுறை ஈஸ்வரமூர்த்தீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கைலாசநாதர் கோவில்

    திருச்செங்கோடு நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப் பழமையான சுகுந்தகுந் தலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கைலாசநாதர் சாமிக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னம் சாற்றப்பட்டு அன்னாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு 8 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்குமம், உள்ளிட்ட 18 வகையான மங்கல பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் .

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆலோசனை

    அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டி யன் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை தொடங்கப்பட்டு நாளை மறுநாள் மாலை வரை நடைபெறும். 1-ந்தேதி அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

    குடிநீர் வசதி

    பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழா நடைபெறும் 1-ந்தேதி அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை ஒன்று கோவில் அருகில் அமைக்க வேண்டும்.

    அரங்கநாதர் கோவில் முன்பு 108 ஆன்புலன்ஸ் சேவை முதலுதவி வசதிகளுடன் அதிகாலை 3 மணி முதல் வைத்திருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா

    தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கோவில் வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் இளையராஜா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா ஸ்ரீநிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    கிழங்கு ஆலைகள்

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங் கொட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    ரூ.1000 சரிவு

    கடந்த வாரம் இந்த மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிவடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் கிழங்கு

    அதுபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்ந்து டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது.
    • இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வெப்படை போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் பின்புறம் முட்புதரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த வெப்படை போலீசார் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்த கிடந்த பெண்ணுக்கு சுமார் 60 வயது இருக்கும். இறந்தவர் யார்?, எந்த ஊர், பெயர் போன்ற விபரங்கள் தெரியவில்லை.

    உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிப்பாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிப்பாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர். அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவரது பெயர்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விபரங்கள் தெரியவில்லை.

    அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பு செய்ய ரூ.95 ஆயிரத்துக்கு அனுமதி கோருவது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கோமதி உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

    நாமக்கல்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 88-வது சட்டசபை தொகுதியாக நாமக்கல்லில் நடைபயணம் மேற்கொண்டார்.

    நாமக்கல்லில் சேலம் சாலை 4 தியேட்டர் அருகில் தொடங்கிய நடைபயணம் பிரதான சாலை, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் வழியாக பஸ்நிலையம் சென்றது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பஸ்நிலையம் அருகே திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசினார்.

    மந்திரவாதி

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாமக்கல்லில் பல இடங்களில் நீட் விலக்கு போஸ்டர் பார்த்தேன். தி.மு.க. எப்போதும் எந்த கதவை தட்ட வேண்டும் என்று தெரிந்தும், அந்த கதவை தட்ட மாட்டார்கள்.

    உதாரணமாக கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை என்றால், அந்த மாநிலத்துடன் பேச வேண்டும். ஆனால் அந்த மாநில முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதாமல், பிரதமர், ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவார். ஆனால் எங்கே கதவு திறக்காதோ அங்கே போவார். அதேபோல நீட்டை பொறுத்தவரையில், உங்களுக்கு மத்திய அரசு எதிரி என்று நினைத்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுங்கள்.

    நீட் வந்தபிறகு கிராமபுறத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு போகிறார்கள். ஆனால் தி.மு.க. நடத்தும் தனியார் கல்லூரிக்கு டொனேசன் வாங்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு முட்டையை தூக்கி செல்கிறார். முட்டை வைத்து மந்திரித்தால் நீட் காணாமல் போய் விடும் என்று முட்டை மந்திரவாதியாக செல்கிறார்.

    வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் ஊழலற்ற ஆட்சி நடத்தும் மோடிக்கு உங்கள் முழு ஆதரவை தர வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், இந்தியா கூட்டணிக்கும், பொய் சொல்ல கூடிய முதல்-அமைச்சருக்கும், ஊழல் செய்யும் தி.மு.க. அரசுக்கும் வாய்ப்பு அளிக்க கூடாது.

    பாதயாத்திரை செல்லும் இடம் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வருகிறார்கள். இதை பார்க்கும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்கிற எண்ணம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நிச்சயமாக பா.ஜனதா அதை செய்து காட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி. துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் ஷியாம்சுந்தர், மாவட்ட பொது செயலாளர்கள் முத்துக்குமார், ரவி, சேதுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராம்குமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்வாசன், ஆன்மீக பிரிவு பிரவீன்குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நடை பயணத்தில் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.89-க்கும், குறைந்தபட்சமாக 63.79- க்கும்,சராசரியாக ரூ.74.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 43 ஆயிரத்து 250- க்கு ஏலம் நடைபெற்றது.

    வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 900 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 86.89- க்கும் குறைந்தபட்சமாக ரூ 58.99- க்கும், சராசரியாக ரூ 74.09- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 3 லட்சத்து 88 ஆயிரத்து 369- க்கு ஏலம் நடைபெற்றது.

    ×