என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "huge debt burden"

    • ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.

    ராசிபுரம்:

    தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டம் 91-வது தொகுதியாக ராசிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

    ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தொடங்கிய யாத்திரையானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்று புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது.

    பின்னர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்று பேசினார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நரேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை பேசியதாவது:-

    ஆட்சி தத்தளிக்கிறது

    கடந்த தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., கடந்த 30 மாதத்தில் 20 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலை போல தி.மு.க. ஆட்சி தத்தளிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் 3-வது அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. ரூ.5½ லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒவ்வொருவர் தலையிலும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

    இப்போது இருந்து கடனை வாங்காமல் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தாலும் அதை அடைக்க 35 ஆண்டுகளாகும். ஆனால் கடன் வாங்காமல் அரசை இயக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.

    எதிர்காலம் பாதிப்பு

    டாஸ்மாக்கால் இளை ஞர்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு டாஸ்மாக் மூலம் ரூ.44 ஆயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்கவும் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவும் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    பல்லடத்தில் 4 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அரசு நஷ்டஈடு வழங்குகிறது. அதை வாங்குவதற்கு கூட அங்கு ஆள் இல்லை. ஆனால் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற ஆட்சியை இந்திய துணை கண்டத்தில் பார்த்ததில்லை. ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க தேவையான முயற்சியை எடுப்போம்.

    மருத்துவ கல்லூரிகள்

    நீட் வந்தால் தி.மு.க.வினரின் கல்லூரிகளில் கேபிடேஷன் வைத்து சீட் விற்க முடியாது. தமிழகத்தில் தி.மு.க. தற்போது 6-வது முறையாக ஆட்சி செய்கிறது. இதுவரை அவர்கள் 5 அரசு கல்லூரிகளை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

    பிரதமர் மோடி ஒரே முறையில் 11 மருத்துவ கல்லூரி களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளார். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளனர். இதில் இருந்தே அவர்களின் நீட்டுக்கான எதிர்ப்பு புரியும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    முடிவில் ராசிபுரம் நகர தலைவர் வேலு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், வெளிநாடு வாழும் தமிழர் பிரிவு நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×