என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூரில் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் பெருமாள் மேல வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38) மெக்கானிக். இவருடைய மனைவி ரேணுகாதேவி. கடந்த 11-ம் தேதி ரேணுகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இந்த நிலையில் ரேணுகா தேவி இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் செந்தில் குமாரை வீட்டில் இருந்து வெளியேற்றினர். நேற்று முன்தினம் இரவு கீழ மடவிளாகம் தெருவில் வசித்துவரும் ரேணுகா தேவியின் தாய்மாமன் தினேஷ்குமார் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நான் இங்கு படுத்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு தினேஷ்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த செந்தில்குமார் நள்ளிரவில் தினேஷ்குமார் வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. 

    இது குறித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ் பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
    நாகையில் கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் 2-வது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை கண்ட சக மீனவர்கள் படகின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மீனவர்கள் படகில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை பைபர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் இன்றும் 2-வது நாளாக 20 படகுகளில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலில் மூழ்கி சேதமடைந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஆனைக்கோவில் கிராமம் செட்டி தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் ஆதித்யன் (வயது 22).

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா மகன் மாரிமுத்து (20), ராமமூர்த்தி மகன் ஆதீஷ் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். மாரிமுத்து நாகையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஆதித்யன், மாரிமுத்து, ஆதீஷ் ஆகியோர் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் காரைக்காலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது பொறையாறு அருகே ஓழுகைமங்கலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதித்யன், மாரிமுத்து, ஆதீஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பஸ் டிரைவர் வாய்மேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தவறான தகவலை கூறி வருகிறார் என்று மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகளில் தண்ணீர் இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடும் கோடை காரணமாக ஒரு வாரம் கழித்து பள்ளிகளை திறக்க கேட்டு கொண்டோம். ஆனால் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து உடனே பள்ளிகளை திறந்தார்கள். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரையிலும் பள்ளி மாணவர்களுக்கு அரசு பாடப்புத்தகங்களை வழங்க வில்லை. ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.


    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் , ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த போக்கு காரணமாக அ.தி.மு.க. அரசு ஊழியர்களின் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

    இதேநிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 100 சதவீத வாக்குகளை இழக்க வேண்டி வரும். தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும். மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கை தான். இதனை எதிர்த்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்துவது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சார்பாக வருகின்ற 23-ம் தேதி நடைபெறுகின்ற மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது. இதுவரை நரேந்திர மோடியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் விரும்பாத நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த பிரச்சனைக்கும் தீர்வு முயற்சி செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையை அடமானம் வைத்து விட்டு வருகின்றனர்.


    இதனால் தமிழக மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சமூக பதற்றம் மற்றும் சாதிய மோதல்களை தூண்டிவிடும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி வருகிறார். அவர் இதுபோன்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் நிலங்களையும் யாரும் பறிக்கவில்லை. மாபெரும் வரலாற்று மன்னனை இழிவுபடுத்தி குறுகிய வட்டத்திற்குள் அடக்குவது ஏற்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    தடைக்காலத்தில் கடந்த 2 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். மீன்பிடி துறைமுகம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்வதால் நிறைய மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் இருந்து 42 படகுகள், கள்ளிவயல் தோட்டம் 15 படகுகள், மல்லிபட்டினம் துறைமுகத்திலிருந்து 4 படகுகள் என மொத்தம் 61 படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை அதிபயங்கரமாக வீசிய கஜா புயலால் விசைப்படகுகள் அனைத்தும் சேதமடைந்ததால் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் முழுவதும் சேதமடைந்த படங்களுக்கு ரூ.5 லட்சமும் அறிவித்தது.

    இதில் பகுதி சேதமடைந்த படகுகள் நிவாரணம் பெற்றுக்கொண்டு சீரமைத்தனர். முழுவதும் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் போதாது என விசைப்படகு மீனவர்கள் போராடி வந்தனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னரே நிவாரணத்தொகை கிடைத்தது. அதனால் மற்றவர்கள் படகுகள் தயார் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    அதிராம்பட்டினம் மீனவர்கள் இன்று காலையில் தங்களது படகுகளில் ஐஸ்கட்டி மற்றும் உப்பு, டீசல், மீன்பிடி வலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை தயார்படுத்தி படகுகளில் ஏற்றினர். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி பூஜை போட்டனர். இதனையடுத்து மீன்பிடி தொழிலை நம்பி இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலையில் கடலுக்குச் சென்றனர். கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்துக் கொண்டு நாளை காலை (16-ம் தேதி) கரை திரும்புவார்கள். 

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது மற்றும் வழக்குபதிவு செய்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயக்குனர் கவுதமன் சந்தித்தார்.

    பின்னர் கரியாப்பட்டினம் செண்பகராய நல்லூரில் எண்ணெய் நிறுவனம் சார்பில் ஆழ்துளை ஆய்வு கிணறு அமைக்கப்பட்டிருந்த வளாகத்தில் எஞ்சியுள்ள கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

    பின்னர் இயக்குனர் கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் திருக்கார வாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரையில் 474 சதுர கிலோ மீட்டர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த 2-வது கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மாநில அரசு அதை ஆதரித்துள்ளது. மக்கள் கருத்தை அறியாமல் செயல் படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கரியாப்பட்டினம் மக்கள் மீது போலீசார் அத்து மீறியுள்ளனர். 40 பெண்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து அவமானப்படுத்தி இன்னும் அவர்கள் கையெழுத்து போட அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் காவல் துறையின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

    பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் எந்த திட்டங்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் தற்போதைய அரசு அதற்கு நேர் மாறாக உள்ளது.

    தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு ஹைட்ரோ கார்பன் நீட் போன்றவைகளை தி.மு.க. தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகையில் இன்று அதிகாலை தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்தன.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வ.உ.சி தெருவில் உள்ள ராவணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டில் இருந்து பயங்கர சத்ததுடன் தீப்பிழம்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டின் சுவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.

    மேலும் அருகில் உள்ள பரமு மற்றும் லட்சுமிஅம்மாள் ஆகியோரது வீட்டிற்கும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் உள்ள அனைத்து பொருட்களும் , ஒரு இருசக்கர வாகனமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. 

    தகவலறிந்து 2 வாகனங்களில் வந்த  தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வி‌ஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது35) நகை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30) மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்வரன்(11). நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி திறந்து 10 நாட்களாகியும் இன்னும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஜெகதீஸ்வரன் கல்வி கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கூறியுள்ளது.

    வீட்டிற்கு வந்த ஜெகதீஸ்வரன் தனது பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி தினமும் கேட்டு வந்துள்ளான்.

    நகைத்தொழிலாளியான செந்தில்குமார் போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடன் தர யாரும் முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளியில் படிக்கும் தனது ஒரே மகனுக்கு தன்னால் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே என்ற வேதனையில் இருந்த செந்தில்குமார், தனது மனைவியுடன் இது குறித்து புலம்பியுள்ளார்.

    படித்து போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தங்களது ஒரே மகனுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே இதற்கு மேல் உயிருடன் இருந்து என்ன பயன்? என்ற வேதனையில் நேற்று மதிய உணவுடன் வி‌ஷத்தை கலந்து மூவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள பரிதாபமாக இறந்தனர்.

    செந்தில்குமார் நேற்று வேலைக்கு வராத காரணத்தினால் அவர் வேலை செய்யும் நகை கடை உரிமையாளர் ஒரு பையனை செந்தில்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். வீட்டிற்கு வந்த பையன் 3 பேரும் வீட்டில் வி‌ஷமருந்தி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தான்.

    பின்னர் இதுபற்றி அவர் இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்த தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே வேதனையில் இருந்த தாய் -தந்தை இருவரும் வி‌ஷம் சாப்பிடுவதற்கு முன்பாக தங்களது ஒரே மகனுக்கு போலீஸ் உடையை அணிவித்து வி‌ஷத்தையும் ஊட்டி உள்ளனர். போலீஸ் உடையுடன் பள்ளிச்சிறுவன் தனது பெற்றோர்கள் மடியில் இறந்து கிடந்தது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கதற வைத்தது.
    நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் மணல் காற்று வீசியதால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி, பூவைத்தேடி, காமேஸ்வரம், புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, ஆகிய கடலோர பகுதிகளில் காலை முதல் புழுதி காற்று வீசுகிறது.

    இதனால் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் மணல் காற்று வீசி வருவதால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்படுகின்றனர் இதனால் முகத்தில் துணியை கட்டி செல்கின்றனர்.

    மேலும் மணல் வந்து வீடு முழுவதும் படர்ந்துள்ளது. வீட்டின் கூரைகள் சேதமடைகிறது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள உதயாதித்தமங்கலத்தை சேர்ந்த கமலக்கண்ணனின் மனைவி தேவி (வயது 29) என்பவரும் இந்த தேர்வினை எழுதினார்.

    நிறைமாத கர்ப்பிணியான தேவிக்கு, தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அறிந்த தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக அவரை, திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர்.

    பின்னர் அவர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தேவிக்கு இது தான் முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. உரிய சமயத்தில் முதலுதவி சிகிச்சையளித்து உதவிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

    மயிலாடுதுறை அருகே சுய உதவிக்குழு தலைவி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மயிலாடுதுறை: 

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி லலிதாலட்சுமி (வயது 28). இவர், மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லலிதா லட்சுமி, மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக, கடைசி மாத தவணை தொகையை செலுத்துவதற்கு சில நாட்கள் காலதாமதமானது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி லலிதாலட்சுமியின் தாய் வீட்டுக்கு சென்றனர். அப்போது நிதி நிறுவன ஊழியர்கள், கடன் தவணை தொகையை கேட்டு அங்கிருந்த லலிதாலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.


    இதனால் அவமானம் அடைந்த லலிதாலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய லலிதாலட்சுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது லலிதாலட்சுமியிடம் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார். அன்று இரவே லலிதா லட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்தார்.

    நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் லலிதா லட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன மேலாளர் விஜய், ஆடிட்டர் கோபிநாத், ஊழியர்கள் ரெங்கராஜ், சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×