search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் உடை அணிந்த மகன் ஜெகதீசனுடன் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமார்- லட்சுமி.
    X
    போலீஸ் உடை அணிந்த மகன் ஜெகதீசனுடன் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமார்- லட்சுமி.

    பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் விரக்தி: மனைவி- மகனுடன் தொழிலாளி தற்கொலை

    மகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வி‌ஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது35) நகை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30) மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்வரன்(11). நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி திறந்து 10 நாட்களாகியும் இன்னும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஜெகதீஸ்வரன் கல்வி கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கூறியுள்ளது.

    வீட்டிற்கு வந்த ஜெகதீஸ்வரன் தனது பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி தினமும் கேட்டு வந்துள்ளான்.

    நகைத்தொழிலாளியான செந்தில்குமார் போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு கடன் தர யாரும் முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளியில் படிக்கும் தனது ஒரே மகனுக்கு தன்னால் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே என்ற வேதனையில் இருந்த செந்தில்குமார், தனது மனைவியுடன் இது குறித்து புலம்பியுள்ளார்.

    படித்து போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தங்களது ஒரே மகனுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே இதற்கு மேல் உயிருடன் இருந்து என்ன பயன்? என்ற வேதனையில் நேற்று மதிய உணவுடன் வி‌ஷத்தை கலந்து மூவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள பரிதாபமாக இறந்தனர்.

    செந்தில்குமார் நேற்று வேலைக்கு வராத காரணத்தினால் அவர் வேலை செய்யும் நகை கடை உரிமையாளர் ஒரு பையனை செந்தில்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். வீட்டிற்கு வந்த பையன் 3 பேரும் வீட்டில் வி‌ஷமருந்தி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தான்.

    பின்னர் இதுபற்றி அவர் இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்த தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே வேதனையில் இருந்த தாய் -தந்தை இருவரும் வி‌ஷம் சாப்பிடுவதற்கு முன்பாக தங்களது ஒரே மகனுக்கு போலீஸ் உடையை அணிவித்து வி‌ஷத்தையும் ஊட்டி உள்ளனர். போலீஸ் உடையுடன் பள்ளிச்சிறுவன் தனது பெற்றோர்கள் மடியில் இறந்து கிடந்தது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கதற வைத்தது.
    Next Story
    ×