என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பழைய பஸ் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. 

    இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பழைய பாளையத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உருவாகும் எரிவாயுவை குழாய் மூலம் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு பழைய பாளையத்திலிருந்து மேமாத்தூர் வரை சுமார் 29 கி.மீ தூரத்திற்கு விளை நிலங்கள் வழியாக எரிவாயு எடுத்து செல்ல குழாய்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு விவசாயிகள், கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் போலீசாரை குவித்து கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்கள் வழியே அமைத்து வருகின்றனர்.

    இதனிடையே சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் உள்ள ஆற்றின் கரையை உடைத்து கெயில் நிறுவன ஊழியர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் கரையை உடைக்க விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை நிறுத்த கோரி வயலில் குவிந்தனர். இதனால் கெயில் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்தினர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், விவசாய நிலங்கள் வழியாக விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய்கள் பதிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ஆற்றின் கரையை உடைத்து குழாய் பதிக்கும் பணியில் ஈடுப்படுகின்றனர். இவ்வாறு கரையை உடைத்து குழாய் புதைத்தால் ஆற்றின் கரை பிடிப்பு இல்லாமல் மழை காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படும். இதனால் விவசாயம் பாதிக்கும், கிராமம் தண்ணீரில் மூழ்கும்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்காடு போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி அருகே நேற்று இரவு திடீரென மின்நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதில் 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே மணமேல்குடி அடுத்த கடலங்குடி பகுதியில் மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் துணை மின்நிலையங்களுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடலங் குடி மின்நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, பட்டவர்த்தி, திருமுல்லை வாசல், கொள் ளிடம், பழையாறு ஆகிய இடங்களில் உள்ள 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பிறகு மின்நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து சீரமைத்தனர். பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் சுமார் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதற்கிடையே மின் ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்ததால் மீண்டும் இரவு 11.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. பிறகு சுமார் 1½ மணி நேரம் கழித்து நள்ளிரவு 1 மணிக்கு மின்சாரம் வந்தது.

    இதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மற்றும் சுற்றியுள்ள 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் இன்று காலை 10 வரையிலும் மின்சாரம் வருவதும், அதன் பிறகு போவதுமாக இருந்தது.

    இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் சிரமப்பட்டனர். மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பழுதானதை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வேளாங்கண்ணி முதல் வேட்டைக்காரனிருப்பு வரை 10 கிராம மக்கள் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ள மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசிற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் கிராம மக்களால் நடைபெற்ற போராட்டத்தில், கிராமத் தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கைகோர்த்து நின்று மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    சீர்காழி அருகே தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வருவக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த முருகேசன் (வயது 70). இவரது குடிசை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகில் இருந்த சத்தியசீலன் (28), உத்திராபதி (45), முத்துகுமாரசாமி (27), விஜயபாலன் (24) ஆகியோரின் வீடுகளிலும் பரவியது. இதில் 5 குடிசை வீடுகளும் கொழுந்துவிட்டு எரிந்தது.

    தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனாலும் குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

    இந்த தீ விபத்தில் கிரைண்டர், மின்விசிறி, பீரோ, டி.வி., நகை, உணவு தானியங்கள், துணிகள், புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோகூர் பகுதியை சேர்ந்தவர் தம்பா (வயது 60) விவசாயி. இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன், மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன், மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

    தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
    கோடியக்கரை முனாங்காடு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலோரத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலிலிருந்து ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட வருகின்றன. கோடியக்கரை பகுதிக்கு வந்து கடற்கரையோரம் மண்ணைத் தோண்டி ஆமைகள் முட்டையிடுகிறது.

    நாய்கள் அவற்றை சாப்பிடாமல் பாதுகாக்க, வனத்துறையால் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு கோடியக்கரை, ஆறுகாட்டுத் துறை ஆகிய பகுதிகளில் வனத்துறையின் சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைத்து அதில் பாதுகாக்கப்படுகிறது.

    முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை எடுத்து கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டு 200 ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரித்த பின்பு கடலில் விடப்பட்டது.

    நேற்று கோடியக்கரை முனாங்காடு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆமைகள் ஆழ்கடல் பகுதியில் விசை படகில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கியுள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர். அழிந்து வரும் இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க மீனவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


    கடும் சிரமத்திற்கு இடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாகை வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி ஒருவர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

    அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் கடும் சிரமத்திற்கு இடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாகை வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி ஒருவர்.

    வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் சுபா. தமிழ்வழி கல்வியில் முழுவதும் பள்ளி படிப்பை முடித்தார்.

    விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பதையே சிறு வயதில் இருந்து லட்சியமாகக் கொண்டு உள்ளார்.

    இவரது கனவில் இடியாய் விழுந்தது நீட் தேர்வு மட்டுமல்ல பொருளாதாரமும் தான். கடும் சிரமத்தை சந்தித்து நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

    இதனால் எப்படியும் தனது டாக்டர் கனவை நிறைவேற்றலாம் என்று எண்ணியிருந்த அவருக்கு வீட்டின் பொருளாதார நெருக்கடியால் பின்வாங்கியுள்ளார்.


    தற்போது மாணவி சுபா தனது மருத்துவ கனவை மறந்து தாய் தந்தையோடு இணைந்து விவசாயப் பணியை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கஜா புயலினால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனதால் நாகை மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப சூழலை நினைத்தே மாணவி சுபா, தாயுடன் இணைந்து விவசாய பணியை மேற்கொண்டு வருகிறார்.

    நான் சிறு வயதிலிருந்தே டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தேன். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பொருளாதார சூழ்நிலையில் மருத்துவ படிப்பு கனவு கானல்நீராகி விட்டது. இதனால் தாய்- தந்தையுடன் இணைந்து விவசாய வேலையை செய்து வருகிறேன். வீட்டு செலவுக்காக தாயுடன் 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறேன். கஷ்டத்தில் வாழ்ந்து வரும் எனக்கு அரசு உதவி செய்தால் மருத்துவ படிப்பை தொடர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி சுபாவின் தாய் வள்ளி கூறியதாவது:-

    எனது மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இருமகள்களின் படிப்பு செலவிற்காக நிலம் மற்றும் வீட்டின் பத்திரங்களை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து கடும் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.



    கடந்த ஆண்டில் கஜா புயலால் எங்களது மரம் செடி, கொடிகள் அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் விவசாயமும் முற்றிலும் பொய்த்து போனதால் வருவாய் இழந்து, 100 நாள் வேலைக்கு சென்று வருகிறேன்.

    தற்போது மகளின் மருத்துவ கனவையும் சிதைத்து அவளையும் 100 நாள் வேலைக்கு அழைத்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    கடும் சிரமத்திற்கு இடையே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் இந்த சூழலில், நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் இருக்கும் நாகை மாணவிக்கு தமிழக அரசு உதவ முன் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கிராம பெண்கள் தண்ணீரை தேடி காலிக்குடங்களுடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் தண்ணீருக்காக பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகவும் அவதியடைந்து வருகின்றன. இதனால் அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவித்தாலும் நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்துக்கு சென்று விட்டதால் குடிநீர் பஞ்சத்தை போக்க வழியில்லாமல் இருந்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட திருமருகல், நெய்க்குப்பை, வேலங்குடி, கரம்பை ஆகிய 5 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்து வந்ததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதனால் நேற்று 5 கிராம மக்களும் ஒரே இடத்தில் திரண்டனர். பின்னர் தண்ணீர் கிடைக்காமல் பக்கத்து கிராமங்களை தேடி செல்லும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் கிடைக்கும் ஊரில் சிறிது நாட்கள் வரை குடியேறலாம் என்று முடிவு செய்தனர்.

    இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த கிராமமக்கள், அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் அதிகாரியின் ஜீப்பை மறித்து தரையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்தார். இதனால் சுமார் 2 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    கிராமப்புறங்களில் கடும் குடிநீர் ஏற்பட்டு உள்ளது. குடிநீர் பிரச்சினை குறித்து ஏற்கனவே 5 கிராம மக்களும் கலெக்டரிடம் புகார் அளித்தோம். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் இருந்ததால் வேறு வழியின்றி போராட்டம் நடத்தினோம்.

    குடிதண்ணீருக்காக நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டியது உள்ளது. வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்தால் , 5 கிராம மக்களும் ஊரை விட்டு வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தரங்கம்பாடி அருகே காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை புலிகண்டபுத்தூரை சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 24). பி.காம். படித்துள்ளார். இவர் பொறையாறில் உள்ள கல்லூரியில் படித்த போது செம்பனார்கோவிலை அடுத்த கிடங்கல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அதே கல்லூரியில் படித்துள்ளார். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மணிகண்டன் வெளிநாடு சென்று 2 ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த மாதம் 9-ந் தேதி வெளிநாட்டில் இருந்து கிடங்கல் வந்து காதலியின் வீட்டு மாடியில் தங்கி இருந்துள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பும் போது தனது தாய் இறந்து விட்டதாத கூறி தன்னுடன் வேலை பார்க்கும் சிலரிடம் பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வெளிநாட்டில் மணிகண்டனுக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர் சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது உயிருடன் இருக்கும் தனது தாய் இறந்து விட்டதாக மணிகண்டன் தன்னிடம் பொய் சொல்லி பணம் வாங்கி வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் வெளியில் சிலரிடம் கூறியதால் மணிகண்டன் அவமானம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த மணிகண்டன் தனது காதலி வீட்டு மாடி அறையில் தூக்குப்போட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தெரியவந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    காதலி வீட்டில் காதலன் தற்கொலை செய்த சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த 8 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்தலை தடுக்க கோரி நாகை மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன் அறிவுறுத்தலின் படி சிறப்பு தனிப்படை பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ராஜேஷ் தலைமையில் இன்று நள்ளிரவு நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

    அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேர், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை அங்கே விட்டு விட்டு அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பித்து சென்று விட்டனர். இதையடுத்து  2 மோட்டார் சைக்கிள் மற்றும் 3 சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதை தொடர்ந்து நாகூர் அடுத்த முட்டம் பகுதியில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் வாகன சோதனை தொடர்ந்து மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு சவுக்காடு வழியாக தப்பித்து சென்று விட்டனர். 

    இதை கண்ட போலீசார் அந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவர்கள் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் கொண்ட 6 மூட்டை சாராயத்தையும் கைப்பற்றினர்.
    ×