search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பழைய பாளையத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உருவாகும் எரிவாயுவை குழாய் மூலம் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு பழைய பாளையத்திலிருந்து மேமாத்தூர் வரை சுமார் 29 கி.மீ தூரத்திற்கு விளை நிலங்கள் வழியாக எரிவாயு எடுத்து செல்ல குழாய்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு விவசாயிகள், கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் போலீசாரை குவித்து கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்கள் வழியே அமைத்து வருகின்றனர்.

    இதனிடையே சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் உள்ள ஆற்றின் கரையை உடைத்து கெயில் நிறுவன ஊழியர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் கரையை உடைக்க விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை நிறுத்த கோரி வயலில் குவிந்தனர். இதனால் கெயில் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்தினர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், விவசாய நிலங்கள் வழியாக விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய்கள் பதிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ஆற்றின் கரையை உடைத்து குழாய் பதிக்கும் பணியில் ஈடுப்படுகின்றனர். இவ்வாறு கரையை உடைத்து குழாய் புதைத்தால் ஆற்றின் கரை பிடிப்பு இல்லாமல் மழை காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படும். இதனால் விவசாயம் பாதிக்கும், கிராமம் தண்ணீரில் மூழ்கும்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்காடு போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×