என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கத்திரிபுலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது37) விவசாயி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராஜா, தேவேந்திரன் ஆகிய 3 பேரும் மது குடித்துவிட்டு பாட்டில்களை வழியில் போட்டு உடைத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ராமச்சந்திரனை அவர்கள் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ராமச்சந்திரன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் கரியாபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை தாக்கிய 3 பேரையும் கைது செய்தார்.
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகளால் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமருகல் வட்டாரத்தில் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. திருமருகல் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராம பகுதிகளில் வட்டார மருத்துவ அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகளை செய்து வருகின் றனர் .
திருமருகல் வட்டார அளவில் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, கணபதிபுரம், திருப்பயத்தங்குடி, திட்டச்சேரி ஆகிய 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் 16 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த துணை சுகாதார நிலையங்களில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருமருகல் ஒன்றியம் கீழப்போலகம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியர் எலிசபத் அப்பகுதி மக்களுக்கு மாத்திரைகளையும், கர்ப்பிணிகளுக்கு சத்து மாத்திரைகளையும் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த சிந்தாமணிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மனைவி மாலா (வயது 38). ராஜரெத்தினம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் மாலா தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாலா இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த காமாட்சி மகன் காளிதாஸ் (22) என்பவர் ஜன்னலை திறந்து மாலாவிடம் தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாலா வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டிய காளிதாசை கைது செய்தார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஹரிணி கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை ஹரிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .
இதற்கிடையே போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை பலியானதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கரன் (வயது 50).
இவர் சம்பவத்தன்று குத்துவக்கரையிலுள்ள ஒருவரது குடிசை வீட்டில் மின் சாதனம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பாஸ்கரன் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மாங்கானாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது பாஸ்கரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு முத்தாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி சத்யாதேவி (வயது 32). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ரோகித் (5), மோகித் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்யாதேவிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து சத்யாதேவி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சத்யாதேவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சத்யாதேவியின் உடல் நேற்று மாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டால் தான் சத்யாதேவி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக கூறி கீழநாஞ்சில் நாடு மெயின்ரோட்டில் பா.ஜனதா கட்சியின் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடிகண்ணன், மற்றும் சத்யாதேவியின் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மண்டல துணை தாசில்தார் வைத்தியநாதன், துப்புரவு ஆய்வாளர் பிச்சைமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி அரசு அலுவலர்கள் முன்னிலையில் மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலைமறியலால் தரங்கம்பாடி மெயின்ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில், சமூகபாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தொடர்புடைய துறையின் மூலம் உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும்.
குழந்தைகள் இல்லங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தொடர்புடையதுறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுவை நாகைக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் அய்யப்பன் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய அரசு அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன இயக்குனர்கள், குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சீர்காழி பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை சீர்காழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது கொள்ளிடம் அருகே உள்ள மேல வல்லம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 54) என்பவரின் வீட்டை இடி தாக்கியது.
இதில் வீட்டில் இருந்த சுந்தரமூர்த்தி, மற்றும் அவரது மனைவி எழிலரசி, மகள்கள் சுருதி (18), நிஷாந்தி (16) ஆகியோர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுந்தர மூர்த்தி வீட்டில் இடி தாக்கியதில் வீட்டில் இருந்த மின்அடுப்பு, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமானது.
கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் பகுதியிலும் இன்று காலை இடியுடன் மழை பெய்தது.
இதில் அப்பகுதியில் உள்ள 125 வீடுகளில் மின்சாதன பொருட்கள் கருகி எரிந்து சேதமானது. இதேபோல் அப்பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தையும் இடி தாக்கியது.
இதில் கோவில் சுவர்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. மேலும் அங்குள்ள மின்வயர்களும் சேதமானது. இடிதாக்கியதில் கோவிலில் சுவர் பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
சீர்காழி பகுதியில் இடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 36), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு 7.15 மணியளவில் கருப்பம்புலத்திலிருந்து மருவூர் தெற்கு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் வேதாரண்யம்- திருத்துறைப் பூண்டி சாலையில் உள்ள பன்னாள் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் நேருக்குநேராக மோதியது.
இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கடினவயலை சேர்ந்த பொன்னியின் செல்வன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் கிடைத்தும் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பொன்னியின் செல்வனிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பள்ளங்கோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. விபத்தில் பலியான பன்னீர் செல்வத்துக்கு கலைமகள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாற்றுத்திறனாளி பெண். அதே தெருவை சேர்ந்தவர் 9-ம் வகுப்பு மாணவர். இவர் குத்தாலம் பகுதி பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் 17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை காணாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் அப்பகுதி முழுவதும் தேடிவந்தனர். அப்போது அந்த மாணவனின் வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை மாணவன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று வெளியில் விடாமல் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வேலுதேவி வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி பெண்ணை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில் அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த 9-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.
மாணவருக்கு 18 வயது நிரம்பாததால் அவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இரவு கோவிலுக்கு எழுந்தருளிய முருகன் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றார்.
அப்போது முருகனின் சிலை முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பி வழிந்தது. அதனை அர்ச்சகர் துணியால் பலமுறை துடைத்தபோதும் தொடர்ந்து வியக்கும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்த பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






