என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூர் அருகே காரில் 1440 மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் அறிவுறுத்தலின்படி மது கடத்தலை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை நாகூர் போலீசார் மேல வாஞ்சூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்2 பேர் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும், இவர்கள் திருத்துறைப்பூண்டிக்கு காரைக்காலிலிருந்து 30 அட்டை பெட்டிகளுக்குள் 1440 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் ஜவுளிக்கடையில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு புனுதீஸ்வரர் கோவில் வடக்கு வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் கூறைநாடு வண்டிக்காரத் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு கடை ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையன் கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டான். 12-ந்தேதி காலை கடையை திறக்கவந்த வெங்கடேசன் கடையில் வைத்திருந்த பணம் கொள்ளை போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கடையில் திருடிய நபர் அதே கடையில் சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்தவர் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த செல்லையன் மகன் கார்த்திக் 3 மாதம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். அதற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை வேலையைவிட்டு நிறுத்தி விட்டதாகவும், இதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஜவுளிக்கடைக்குள் புகுந்து பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவியை ஒரு மாதமாக கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த தம்பதியினர் நாகை வேளாங்கண்ணியில் ஒரு தனியார் விடுதி அருகில் தங்கியுள்ளனர். இவர்கள் வேளாங்கண்ணி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தம்பதியினரின் 14 வயது மகள் புதுச்சேரி விடுதியில் தங்கி அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக வேளாங்கண்ணியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இவர் ஏப்ரல், மே விடுமுறையான இரண்டு மாதம் தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது பெற்றோர் தனது மகளை வீட்டில் விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவி அருகில் உள்ள தாஸ்(வயது 41) என்பவர் வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை சூர்யா பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை தனது நண்பர்களிடம் சூர்யா கூறினார். இதை சூர்யாவின் நண்பர்கள் ரூபன் காரல் மார்க்ஸ்(22), கோகுல்(19), வீரையன்(19) ஆகியோர் மாணவியை மிரட்டி வரவழைத்து பல நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வி‌ஷயம் தாசுக்கும் தெரிய வந்தது. இதனால் அவரும் இந்த 4 வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மாணவியை ஒரு மாதமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்து 5 பேரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    இதற்கிடையே பள்ளி விடுமுறை முடிந்ததால் மாணவி புதுச்சேரிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தப்பட்டது. அப்போது மாணவியிடம் பெற்றோர் அதட்டி கேட்டபோது, வேளாங்கண்ணியில் ஒரு மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடந்தது.

    இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் , பாலியியல் பலாத்காரம் செய்த சூர்யா, ரூபன் காரல் மார்க்ஸ், கோகுல், வீரையன், தாஸ் ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகூரில் காரில் ஆடுகள் கடத்திய 4 வாலிபர்களை வாகன சோதனையின்போது கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து காரையும் ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திட்டச்சேரி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் 3 ஆடுகள் இருந்தது. விசாரணையில் வடக்கு பால்பண்ணைச்சேரி சிவசத்திநகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது மகன் தமிம் அன்சாரி (வயது 28) மற்றும் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜகபர் சாதிக் மகன் முஹம்மது செய்யது (23), வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெரு சேர்ந்த மாயி மகன் தனுஷ் (19), செல்வகுமார் மகன் மகேந்திரன் (23) ஆகியோர் ஆடுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரையும், ஆடுகளையும் பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.

    மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலியான சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    கடலூர் மாவட்டம் வாக்கூரை சேர்ந்தவர் ராஜ முருகன்(வயது50). இவர் கீரப்பாளையம் மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். ராஜமுருகனின் மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அவர் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

    நேற்று முருகனும், அவரது உறவினர் சக்திவேல் என்பவரும் நாகை மாவட்டம் சீர்காழிக்கு வந்து விட்டு இரவு 12 மணி அளவில் புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொணடு இருந்தனர். காரை ராஜ முருன் ஓட்டி சென்றார். அப்போது கார் டயர் திடீரென வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜ முருகனும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். ராஜ முருன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேலை மீட்டு சிகிச்சைக்குகாக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பலியான ராஜ முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    நாகையில் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் ராமர் மடம் கீழ் சந்து பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 51). இவர் நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமுதா. நாகையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் நகைகள் மற்றும் 1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள்- பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து இளமாறன் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிஷான் திட்டத்தில் பாரபட்சமின்றி விவசாயிகளை சேர்க்கக்கோரி வாய்மேடு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாய்மேடு:

    கிஷான் திட்டத்தில் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். இந்த திட்டத்தில் பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் அறிவொளி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாவட்டகுழுவை சேர்ந்த வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கிஷான் திட்டத்தின் மூலம் நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கான ஆவணங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை வங்கி தகுதியான விவசாயிகளை பதிவு செய்யாததை கண்டித்தும், மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி விவசாய கடன், யூரியா, டி.ஏ.பி. உரங்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கிளைசெயலாளர்கள் இளவரசன், செந்தில் குமார், ஆனந்தன்உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே பெண் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த முட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 53). இவர் நேற்று மாலை முட்டத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று வயலில் மயங்கி விழுத்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கீழ்வேளூர் திருகண்ணாகுடி முதலியார் தெருவை சேர்ந்த தனசேகரன் (வயது 55) கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு பஸ்நிலையம் வந்தார். அப்போது அவர் திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர்.

    இதுகுறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    வேதாரண்யம், செம்போடை, தென்னாடர், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இடி- மின்னலுடன் ஒருமணிநேரம் மழை பெய்தது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதையொட்டி நாகை- தஞ்சை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மையம் புல்புல் புயல் எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டு துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களது விசைப்படகுகளையும், பைபர் படகுகளையும் கரையில் நிறுத்தி விட்டு படகு பராமரிப்பு, வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையே கரியாபட்டினம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது.வேதாரண்யம், செம்போடை, தென்னாடர், வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இடி- மின்னலுடன் ஒருமணிநேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளிலும் மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தொடர்ந்து மீன்பிடித் தொழில் முடங்கி உள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நாகை அருகே சொகுசு காரில் ரூ.1 லட்சம் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் சோதனை சாவடியில் நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் உள்ள மேல நாகூர் அருகே மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரை சோதனை செய்ததில் 1920 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து நடத்திய விசாரணையில் காரில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சிலம்பரசன் (வயது 30) என்பதும் , அவர் திருத்துறைப்பூண்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1920 மதுபாட்டில்கள் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம் அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வேட்டை சாரனிருப்பு, கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது62) இவர் கோவில் பத்து பஸ் நிறுத்தத்தில் இரவு பஸ்கக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன்(29) என்பவர் முத்துவிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த முத்து நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வேட்டை காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநானம் வழக்கில் பதிவு செய்து மருது பாண்டியனை கைது செய்தார்.

    மயிலாடுதுறை அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் பிரேம்குமார்.

    இவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் தொல்லை குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன மாணவி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் இன்று பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு ஆசிரியர் பிரேம்குமாரை திடீரென பிடித்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரேம்குமாரை பிடித்து மயிலாடுதுறை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளிக்கூடத்துக்கு பூட்டி போட்டு பூட்டினர்.

    இந்த சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    ×