என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மணல்மேடு அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மணல்மேடு:

    நாகை மாவட்டம், மணல்மேடு அருகே பொன்மாசநல்லூரில் நேற்று பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென மயிலாடுதுறை-சேத்தூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 2018-19-ம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். ஆனந்ததாண்டவபுரத்தில் இருந்து சேத்தூர் வரை 5 கி.மீ தொலைவில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். பொன்மாசநல்லூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதனை தொடர்ந்து சிறைப்பிடித்த அரசு பஸ்சை விடுவித்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    நாகை:

    வெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்தது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.
    வேதாரண்யம் அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோவில் பத்து, மேலகாடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 58) விவசாயி. இவர் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து விவசாயி மீது மோதிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.

    இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்தினால் அது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும். ஆள்கடத்தலுக்கு துணைபோகும்.

    கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு தமிழக அரசு மனைபட்டா வழங்க வலியுறுத்தி டிசம்பர் 26-ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதை ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களின் உரிமை. தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறுவது தமிழகத்தில் உள்ள அரசியலை அவர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. அதே சமயம் தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கவில்லை. ஆளுமை என்பது முக்கியமல்ல எதிர்க் கட்சியும் ஆளும் கட்சியும் எத்தகைய கொள்கைகளை கடைபிடிக்கின்றன என்பது தான் முக்கியம்.

    கோத்தபய ராஜபக்சே

    இலங்கை அதிபர் தேர்தலில் வலதுசாரி ஆதரவுடன் பிரதமராகி உள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் சுயாட்சி வழங்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசு, தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய, மாநில அரசுகள் பேசி சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை வரவேற்கிறோம்.

    மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பியும் டெல்டா பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாத காரணத்தால் கடலில் வீணாக போய் கலக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினி - கமல் அரசியலில் இணைவது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதன்பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், ரஜினி- கமல் அரசியலில் இணைவது பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

    இதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்து கூறியதாவது:-

    அமைச்சர் ஓஎஸ் மணியன்


    பாலும், மோரும் இணைந்தால் தயிராகும். ரஜினி, கமலும் இணைவது முறிந்த பாலும், திரிந்த தயிரும். இது இணையும் போது தயிர் ஆகாது. இதுதான் அவர்களுடைய இணைப்பு.

    அ.தி.மு.க. எப்போதுமே உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால் அவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.

    முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பது குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. உண்மை நிலை கோர்ட்டு மூலம் மக்களுக்கு தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடன் நெருக்கடியால் கூட்டுறவு சங்க இயக்குனர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேதராசன் (வயது 58). இவர் அப்பகுதியில் உள்ள மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேதராசன் சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் நெருக்கடியால் தொடர்ந்து வேதனை அடைந்தார்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு வேதராசன், தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை வரை கணவன்- மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவரும் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருவாடுதுறை மடத்துத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி விஜயலெட்சுமி (வயது38). இவர் கடந்த 7-ந்தேதி நள்ளான் சாவடி அருகே மொபட்டில் தன் குழந்தையுடன் சென்றபோது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்கமுயன்றனர்.

    விஜயலெட்சுமி செயினை இருக்க பிடித்து கொண்டதில் 3½ பவுன் செயின் மட்டும் பாதியாக அறுந்ததில் அதனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து விஜயலெட்சுமி வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சீர்காழி பைபாஸ் சாலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சீர்காழி ராதாநல்லூர் பெரியார் தெரு குற்றாலீஸ்வரன் (21), சீர்காழி கச்சேரி ரோடு வீராசாமி மகன் விக்னேஷ் (21), சீர்காழி ராதாநல்லூர் கோவில் தெரு ராமமூர்த்தி மகன் கருணாமூர்த்தி(22) ஆகிய 3 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

    இதில் 3 பேரும் விஜயலெட்சுமியிடம் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நாகப்பட்டினம் அருகே காதலை கைவிட மறுத்த ஆத்திரத்தில் மகளை தீ வைத்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.

    இதுபற்றி கேள்விப்பட்ட பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இதற்கிடையே காதலை கைவிட மறுத்து காதலனுடன் வெளியூருக்கு செல்ல முயன்ற மகளை பெற்றோர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனை சந்தித்து மகள் பேசிக் கொண்டிருந்ததை உமா மகேஸ்வரி பார்த்தார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு மகளிடம் உமா மகேஸ்வரி கேட்டார். அப்போது தாய் பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசியதால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி மண்எண்ணையை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தனது உடலிலும் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் உடல் கருகி இருவரும் அலறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தாய்- மகள் இருவரையும் மீட்டு நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மகள் இறந்தார்.

    இதற்கிடையே தாய் உமா மகேஸ்வரி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலை கைவிட மறுத்த மகளை தாயே எரித்து கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தரங்கம்பாடி அருகே காரில் கடத்திய 2000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் சிலர் கடத்தலுக்கு உதவி புரிவதால் மது கடத்தல் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் நண்டலாறு சோதனை சாவடியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ராஜீவ்புரம் பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதில் உஷாரான போலீசார் அந்த வழியாக வந்த சொகுசு காரை மடக்கினர். அதிலிருந்து ஒருவர் கீழே குதித்து தப்பி சென்று விட்டார். காரில் இருந்த மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது40) என்பவர் பிடிபட்டார். காரை போலீசார் சோதனை செய்த போது அதில் 40 அட்டை பெட்டிகளில் 2000 குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    அதனை கடத்தி வந்தது தொடர்பாக கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த மது பாட்டில்களும், கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    போலீசாரின் விசாரணையில் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    நாகூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த கொத்தரங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராதிகா (29) என்ற மனைவியும், சந்தோஷ் (4), சைலேஷ் (2) என்ற மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் ராதிகா நேற்று வடகுடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். நேற்று மாலை வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த சைலேஷ் வீட்டில் அருகே உள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் சென்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உள்ளான். இதை அறியாத ராதிகா குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளார்.

    அப்போது சைலேஷ் குளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தகவலறிந்த நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.1½ கோடி கடன் உதவியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் டாம்கோ குழுக்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் கடன் உதவி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. நாகை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிர் கடன், நகை கடன், கூட்டு பொறுப்பு குழு கடன், சுய உதவிக்குழு கடன், வீட்டு வசதி கடன்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

    2019-20-ம் ஆண்டிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.206 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 25 ஆயிரத்து 371 விவசாயிகளுக்கு ரூ.133 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் இதுவரை பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 79 ஆயிரத்து 237 விவசாயிகளுக்கு ரூ.193 கோடியே 34 லட்சம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 அம்மா மருந்தகங்களில் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சலுகை விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை தொடர்ந்து மாவட்ட அளவில் சிறந்த 26 கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசுகளையும், பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் முன்னிலையில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவனிடம் சட்டப்பூர்வ நிதி ரூ.36 லட்சத்து 69 ஆயிரத்து 380-க்கான காசோலையை வழங்கினார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுமதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், துணைப்பதிவாளர்கள் ஜெகன்மோகன், கனகசபாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்
    பொறையாறு அருகே எதிரே வந்த காருக்கு வழிவிடும் போது எதிர்பாரத விதமாக வயலில் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
    பொறையாறு:

    காரைக்காலில் இருந்து சிதம்பரத்தை நோக்கி நேற்று காலை ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பொறையாறு அருகே நண்டலாறு சோதனைசாவடியை கடந்து சென்றபோது எதிரே வந்த காருக்கு வழிவிட பஸ்சை டிரைவர் ஒதுக்கி உள்ளார் அப்போது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரங்கள் மீது மோதியது. இதில் பனை மரங்களுடன் பஸ் வயலில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சாலையில் சென்றவர்கள் பயணிகளை மீட்க முயற்சி செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து பொறையாறு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை வீரர்கள் விரைந்து சென்று போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

    பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன் (வயது 39) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் பயணிகள் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் பொறையாறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கண்டக்டர் அன்பரசன் காயமின்றி தப்பினார். கவிழ்ந்த பஸ் பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

    இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் சென்னை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×