search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

    மணல்மேடு அருகே, அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

    மணல்மேடு அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மணல்மேடு:

    நாகை மாவட்டம், மணல்மேடு அருகே பொன்மாசநல்லூரில் நேற்று பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென மயிலாடுதுறை-சேத்தூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 2018-19-ம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். ஆனந்ததாண்டவபுரத்தில் இருந்து சேத்தூர் வரை 5 கி.மீ தொலைவில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். பொன்மாசநல்லூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதனை தொடர்ந்து சிறைப்பிடித்த அரசு பஸ்சை விடுவித்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×