என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தருமபுரம் ஆதீனம் மரணம் அடைந்தார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 450 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில், திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட 27 புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.

    இந்த ஆதீன மடத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்தார். கடந்த 1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார். தருமபுர ஆதீனத்தில் வித்வான் பட்டம் பெற்றுள்ளார். அங்கு கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 49 ஆண்டுகள் குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார். அவருக்கு 93 வயது ஆகிறது.

    இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக குருமகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2-ந் தேதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.40 மணிக்கு குருமகா சன்னிதானம் மரணம் அடைந்தார். இதனையடுத்து உடன் சென்றிருந்த தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மரணம் அடைந்த குருமகா சன்னிதானத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு கொண்டு வந்தார்.

    மாலை 5.40 மணிக்கு குருமகா சன்னிதானத்தின் உடல், கொலுபீடத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆதீனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருமகா சன்னிதானத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று(வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்து குருமகா சன்னிதானத்திற்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இன்று மாலை 4 மணி அளவில் குருமகா சன்னிதானத்தின் உடலை சிவிகை பல்லக்கில் எழுந்தருள செய்து தருமபுரம் மேலவீதியில் உள்ள மேலகுருமூர்த்தத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் குருமகா சன்னிதானத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    நாகையில் நகைக்கடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் மெயின் சாலையில் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் காயத்துடன் இறந்து கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை ஓ.எஸ்.எம் நகரை சேர்ந்த ரிக்கப்சந்த் மகன் ஜித்தேந்திரகுமார்(வயது34) என்பதும், இவர் திருமருகல் சந்தைப் பேட்டையில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் திருமருகலில் உள்ள நகைக் கடை மற்றும் அடகு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து ஜித்தேந்திரகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் அவரது கடை சாவி, பணப்பை, கழுத்தில் அணிந்திருந்த நகை ஆகிய எந்த பொட்களும் இல்லை. ஜித்தேந்திரகுமாரின் சாவில் மர்மம் இருப்பதாக, அவருடைய சித்தப்பா அஜித்குமார் திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே தொடந்து நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் துளசியாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஹாஜா (வயது 50). மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டில் உள்ளவர்களிடம் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஹாஜாவை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஹாஜா இறந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டி மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட கோரி மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு ஆகிய பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    மயிலாடுதுறை நகரில் காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பஸ் நிலையம், கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் கடைகள் அடைக்கபட்டு இருந்தன. இதனால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் சீர்காழி நகரிலும் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். சீர்காழி பஸ் நிலையம், மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜவுளி கடைகள், நகை கடைகளும் மற்றும் பெரிய வணிக நிறுவன கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் மணல்மேடு பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இன்று ஒரே நாளில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மயிலாடுதுறையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வழியாக வேதாரண்யத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை வடுவூர் சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் உள்ளிட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வேனில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மூட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்து நாகை ‘கியூ’ பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன் (வயது33), செந்தில்குமார் (33), மதுரையை சேர்ந்த அரிவேந்திரன் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

    சோதனையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மொத்தம் 700 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது. கஞ்சா கொண்டு செல்லப்பட்ட வேனுக்கு முன்பாக ஒரு காரில் கடத்தல் கும்பல் வழிகாட்டி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் செட்டிபுலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 85). இவர் நேற்று மருதூர் வடக்கு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று உள்ளார். நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி கால் கழுவியுள்ளார். அப்போது தவறி குளத்திற்குள் விழுந்துள்ளார்.

    சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் சென்று பார்த்த அவரது மகள் வீரம்மாள் குளத்தில் விழுந்து இறந்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குளத்தில் இறந்து கிடந்த வீரம்மாள் உடலை மீட்டனர். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அகல்விளக்கு செய்யும் பணி முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, செட்டிபுலம், செம்போடை ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்டம் மற்றும் அகல் செய்து வருகின்றனர்.

    இவர்கள் அகல்விளக்கு, சட்டி, பானை, குடம், பூந்தொட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு உள்ள மண்பாண்டங்கள், கும்பாபிஷேக கலயங்கள் செய்து விற்பனை செய்கின்றனர். மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு மாட்டு வண்டி களிமண் லோடு ரூ.1,500 விலைக்கு வாங்கி மண்பாண்டங்களை செய்கின்றனர். இந்தாண்டு பண்டிகை காலமான கார்த்திகை, பொங்கல் ஆகியவற்றிற்கு மண்பாண்டங்கள் செய்ய தயாரானபோது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது. மழையிலும் கார்த்திகைக்கு அகல்விளக்கு செய்யும் பணி சிறிதளவு நடைபெறுகிறது. மழையால் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விளக்குகள் செய்யும் ஒரு குடும்பத்தினர் சுமார் ஆயிரம், 2 ஆயிரம் விளக்குகளே செய்துள்ளனர்.

    இதனால் தொழிலில் லாபம் இருக்காது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு உற்பத்தி செய்த சட்டி, பானைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இத்தொழிலில் மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு என்று சரியான சூளை வசதிகூட இல்லாமல் உள்ளனர்.

    இப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வங்கிகடனோ, அரசு உதவியோ கிடைக்கவில்லை. மின் எந்திரங்கள் இல்லாமல் திருவையிலேயே வைத்து செய்வதால் பெரிய அளவில் தொழில் செய்ய முடியவில்லை.

    நவீனமாக மெழுகில் செய்யும் விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் மண் விளக்குகளுக்கு இன்றும் மவுசு குறையாமல் விற்பனை நன்றாக உள்ளது. தற்போது எவர்சில்வர் அலுமினிய பாத்திரங்கள் உபயோகத்திலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மண்பாண்ட சமையலுக்கு திரும்பி வருகின்றனர்.

    அதனால் வரும் காலங்களில் மண்பாண்டம் விற்பனை நன்றாக இருக்கும். எனவே அரசு எங்களுக்கு வங்கி மூலம் கடன் கொடுத்து உதவினால் மின் உபகரணங்கள் வாங்கி உற்பத்தியை பெருக்கி அதிகலாபம் பெறமுடியும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம் அருகே குளத்தில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது60). கூடை பின்னும் தொழிலாளி. மனைவி இறந்து விட்டார். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

    சோமு கரியாப்பட்டினம் ரெயில்வே ஸ்டேசன் அருகே குடிசை அமைத்து அதில் தனியே தங்கி வந்தார். இரண்டு நாட்களாக அவரை காணவில்லையாம்.

    நேற்று கரியாப்பட்டினம் ரெயிலடி குளத்தில் சோமு பிணமாக மிதப்பது கண்டு அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து இறந்த சோமு உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
    மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மல்லியம் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25) கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் இருந்து மல்லியத்துக்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து  மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சித்தர்காடு என்ற இடத்தில் வந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் ரமேஷ்  பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான ரமேஷ், கார்த்திக் ஆகிய இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
    வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே மருதூர் வடக்கு தெற்கு கட்டளையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் முத்துகுமார்(வயது 33).இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்து வந்தார்.

    இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் வீட்டில் டி.வி.யில் கேபிளை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி பலியான முத்துகுமாருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

    மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில், பொறையார் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போயின.

    இந்நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை உதவி கண்காணிப்பாளர் அண்ணா துரை பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையாராஜா, ஏட்டு நரசிம்மபாரதி, செந்தில், அசோக், சிகாமணி உள்ளிட்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த ஒருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அவர் சீர்காழி தாலுகா மெய்யன்தெரு பெருந்தோட்டத்தை சேர்ந்த சாமிதுரை மகன் சுந்தர் (23) என தெரிய வந்தது.

    இவர் மீது சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார் கோயில், பொறையார், காரைக்கால் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு வழக்கு உள்ளதென தெரியவந்தது. இதையடுத்து சுந்தர் திருடி பதுக்கி வைத்திருந்த 20 பைக்கை பறிமுதல் செய்து சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே செம்மனார் கோவில் அடுத்த வள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கு என்ற சீனிவாசன் (வயது44). இவர் அருகில் உள்ள கிராமத்துக்கு செல்லும் போது 3-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமிக்கு சீனிவாசன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதனையடுத்து இந்த வழக்கு மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

    இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ×