search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரம் ஆதீனம்
    X
    தருமபுரம் ஆதீனம்

    தருமபுரம் ஆதீனம் மரணம்

    தருமபுரம் ஆதீனம் மரணம் அடைந்தார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 450 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில், திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட 27 புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.

    இந்த ஆதீன மடத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்தார். கடந்த 1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார். தருமபுர ஆதீனத்தில் வித்வான் பட்டம் பெற்றுள்ளார். அங்கு கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 49 ஆண்டுகள் குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார். அவருக்கு 93 வயது ஆகிறது.

    இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக குருமகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2-ந் தேதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.40 மணிக்கு குருமகா சன்னிதானம் மரணம் அடைந்தார். இதனையடுத்து உடன் சென்றிருந்த தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மரணம் அடைந்த குருமகா சன்னிதானத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு கொண்டு வந்தார்.

    மாலை 5.40 மணிக்கு குருமகா சன்னிதானத்தின் உடல், கொலுபீடத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆதீனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருமகா சன்னிதானத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று(வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்து குருமகா சன்னிதானத்திற்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இன்று மாலை 4 மணி அளவில் குருமகா சன்னிதானத்தின் உடலை சிவிகை பல்லக்கில் எழுந்தருள செய்து தருமபுரம் மேலவீதியில் உள்ள மேலகுருமூர்த்தத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் குருமகா சன்னிதானத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×