என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோவில் ஒன்றியம் காளஹஸ் திநாதபுரம் கிராமம் உமையாள் புரத்தை சேர்ந்தவர் பரமசிவன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது27). எலெக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மின்வாரியத்தினர் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்திருந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது வயலில் உள்ள பழுதான மின்மோட்டாரை பழுது நீக்க சென்றார்.
மோட்டாரை அவர் சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் வந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியனை மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சீர்காழி மெயின்ரோடு சேந்தன்குடியில் அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் தரங்கம்பாடி தாலுகா மேலையூர் மேலத்தெருவை சேர்ந்த சிவராஜ் (வயது 38) என்பதும், அவர் திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததும் தெரியவந்தது.
மேலும் சிவராஜ், மயிலாடுதுறை தற்காலிக பஸ் நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று, அதனை மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் அகரகட்டு ஆய்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் அந்தோணி வியாகப்பன். இவரது மகன் மரிய அந்தோணி ஸ்டாலின் (வயது32). இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குணராமநல்லூரில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி மரிய அந்தோணி ஸ்டாலின் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மரிய அந்தோணி ஸ்டாலின் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அவரை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி கடலோர காவல்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சண்முகசுந்தரம் (40). விவசாயி. இவர் கடந்த 11-ந் தேதி அங்குள்ள கடையில் பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மெயின் ரோட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வேதாரண்யத்திலிருந்து கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் (27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் வேதாரண்யம் மெயின்ரோட்டில் தேத்தாகுடி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களது குழந்தையின் உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிந்தன் மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் சுனாமி நகரைச் சேர்ந்தவர் பிரவீன். மீனவர். இவரது மனைவி மோனிஷா(21). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு மண்ணெய் ஊற்றி மோனிஷா தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மோனிஷா உயிரிழந்தார். பூம்புகார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி பெரியகுத்தகை பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி விவசாயி. இவரது மகன் குருதர்ஷன் (வயது2). நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுவாசலில் குருதர்ஷன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளான்.
இதையடுத்து கலிய மூர்த்தி உடனடியாக கரியாப் பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷபூச்சி கடித்துள்ளதாக கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி குருதர்ஷன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குருதர்ஷனை விஷபாம்பு கடித்துள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களின் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் பாதையாக திருச்சி-காரைக்கால் ரெயில் பாதை விளங்கி வருகிறது. இந்த வழி தடங்களில் தஞ்சை பெரிய கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், வேளாங்கண்ணி, நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் திருச்சி- காரைக்கால் இடையே உள்ள ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீட்டர் ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு செய்து வருகிறது. முதல் கட்டமாக தஞ்சை-திருச்சி இடையே இரு வழிப்பாதையில் 2 வழி தடத்திலும் மின்மயமாக்கல் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இந்த பாதையில் ஒரு வழிபாதைக்கு தலா 1200 உயர் மின் கம்பம் என 2,400 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 2-ம் கட்டமாக தஞ்சை- திருவாரூர் இடையே நடைபெற்ற பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து திருவாரூரில் இருந்து நாகைக்கு மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பங்கள் நடுவதற்காக அடித்தளமிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில் திருவாரூரில் இருந்து சிக்கல் வரை மின்கம்பங்கள் நடும் பணி முடிந்து விட்டது. தொடர்ந்து துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் திருச்சி- காரைக்கால் வழி தடத்தில் மின்சார ரெயில்கள் சேவை நடைபெறும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சம் ஆகும். சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும். அதே போல் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
இதுகுறித்து ரெயில்வே துறை மின்மயமாக்கல் பிரிவுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருச்சி-காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருச்சி-தஞ்சை இடையே பணிகள் முடிவடைந்துள்ளது. அடுத்தபடியாக தஞ்சை-திருவாரூர் வழித்தடத்தில் துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூர்- நாகை வழி தடத்தில் மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த பகுதியில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகை ரெயில் நிலையம் அருகே மின்கம்பம் நடுவதற்காக அடித்தளமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகை பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமா இருப்பதால், தளவாட பொருட்களை கொண்டு வந்து வைப்பதற்கு இடம் இல்லை. இதனால் நாகை ரெயில் நிலையத்தில் ஜல்லிக்கல், சிமெண்டு, மண், மின்கம்பம் உள்ளிட்டவற்றை கொண்டு மொத்தமாக வைக்கிறோம். அங்கிருந்து கிரேன் மூலம் சுமைத்தூக்கும் ரெயிலில் கொண்டு செல்கிறோம். 1 கிலோ மீட்டருக்கு 22 என்கிற கணக்கில் மின்கம்பங்கள் நடப்படும். பருவமழைக்காரணமாக மின்கம்பங்கள் நடும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் ஜனவரிக்குள் கரைக்கால் வரை அடித்தளமிடும் பணி முடிக்கப்படும். அதன் பின்னர் துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடைபெறும் என்றார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் காட்டூமின் புறநகர் பகுதியான பாக்ரியில் இயங்கி வரும் பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் இந்தியர்கள் 68 பேர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே மிகப்பெரிய டேங்கரில் வைக்கப்பட்டிருந்த திரவ பெட்ரோலிய கியாசை சிறுசிறு சிலிண்டர்களில் மாற்றும் பணிகளில் இந்தியர்கள் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த கியாஸ்டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது, இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதன் அருகில் தீப்பிடிக்கும் பொருட்கள் ஏராளம் குவித்து வைக்கப்பட்டிருந்தால் அவற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆலை முழுவதும் பல அடி உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் தமிழர்கள்.
மேலும் 130க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் இந்தியர்கள் எனவும், அதில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்தனர். பின்னர் விபத்து ஏற்பட்ட ஆலையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 34 பேரை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு ஆலையின் விடுதியில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் இறந்த 3 தமிழர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த வாலிபரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள ஆலங்குடிச்சேரி மேலதெருவில் வசித்து வரும் ராமலிங்கம்-முத்துலட்சுமி மகன் ஆகியோரின் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டில் உள்ள இந்த தொழிற்சாலையில் பிரஸ் இன்சார்ஜ் ஆக பணிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த தீவிபத்தில் இறந்த 3 தமிழர்களில் ராம கிருஷ்ணணும் ஒருவர் என அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராம கிருஷ்ணனின் தந்தை ராமலிங்கம் கூறியதாவது:-
நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலைக்கு ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றார். அங்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் அவருடைய விருப்பப்படி வெளிநாட்டுக்கு ஏதாவது ஒருவேலைக்கு அனுப்பி வைப்போம் என அனுப்பிவைத்தோம். ஆனால் இப்படி ஒரு கோர சம்பவத்தில் எனது மகனை பறிகொடுப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என கண்ணீர் மல்க கூறினார்.
எங்கள் மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.






