search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூடான் தீவிபத்தில் பலியான ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ள காட்சி
    X
    சூடான் தீவிபத்தில் பலியான ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ள காட்சி

    சூடான் நாட்டு தீ விபத்தில் நாகை வாலிபர் பலி - குடும்பத்தினர் சோகம்

    சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபர் தீ விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் காட்டூமின் புறநகர் பகுதியான பாக்ரியில் இயங்கி வரும் பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் இந்தியர்கள் 68 பேர் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே மிகப்பெரிய டேங்கரில் வைக்கப்பட்டிருந்த திரவ பெட்ரோலிய கியாசை சிறுசிறு சிலிண்டர்களில் மாற்றும் பணிகளில் இந்தியர்கள் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த கியாஸ்டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது, இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதன் அருகில் தீப்பிடிக்கும் பொருட்கள் ஏராளம் குவித்து வைக்கப்பட்டிருந்தால் அவற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆலை முழுவதும் பல அடி உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் தமிழர்கள்.

    மேலும் 130க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் இந்தியர்கள் எனவும், அதில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்தனர். பின்னர் விபத்து ஏற்பட்ட ஆலையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 34 பேரை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு ஆலையின் விடுதியில் தங்க வைத்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த தீ விபத்தில் இறந்த 3 தமிழர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த வாலிபரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள ஆலங்குடிச்சேரி மேலதெருவில் வசித்து வரும் ராமலிங்கம்-முத்துலட்சுமி மகன் ஆகியோரின் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டில் உள்ள இந்த தொழிற்சாலையில் பிரஸ் இன்சார்ஜ் ஆக பணிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இந்த தீவிபத்தில் இறந்த 3 தமிழர்களில் ராம கிருஷ்ணணும் ஒருவர் என அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ராம கிருஷ்ணனின் தந்தை ராமலிங்கம் கூறியதாவது:-

    நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலைக்கு ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றார். அங்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் அவருடைய விருப்பப்படி வெளிநாட்டுக்கு ஏதாவது ஒருவேலைக்கு அனுப்பி வைப்போம் என அனுப்பிவைத்தோம். ஆனால் இப்படி ஒரு கோர சம்பவத்தில் எனது மகனை பறிகொடுப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என கண்ணீர் மல்க கூறினார்.

    எங்கள் மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
    Next Story
    ×