search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

    வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

    வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வழியாக வேதாரண்யத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று அதிகாலை வடுவூர் சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் உள்ளிட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வேனில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மூட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்து நாகை ‘கியூ’ பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன் (வயது33), செந்தில்குமார் (33), மதுரையை சேர்ந்த அரிவேந்திரன் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

    சோதனையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மொத்தம் 700 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது. கஞ்சா கொண்டு செல்லப்பட்ட வேனுக்கு முன்பாக ஒரு காரில் கடத்தல் கும்பல் வழிகாட்டி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×