search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை படத்தில் காணலாம்.
    X
    சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை படத்தில் காணலாம்.

    சீர்காழி அருகே இடி-மின்னல் தாக்கி 4 பேர் மயக்கம்

    சீர்காழி அருகே இன்று காலை இடி-மின்னல் தாக்கி 4 பேர் மயக்கம் அடைந்தனர். 125 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

    சீர்காழி:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சீர்காழி பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை சீர்காழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி- மின்னலுடன் மழை பெய்தது.

    அப்போது கொள்ளிடம் அருகே உள்ள மேல வல்லம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 54) என்பவரின் வீட்டை இடி தாக்கியது.

    இதில் வீட்டில் இருந்த சுந்தரமூர்த்தி, மற்றும் அவரது மனைவி எழிலரசி, மகள்கள் சுருதி (18), நிஷாந்தி (16) ஆகியோர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுந்தர மூர்த்தி வீட்டில் இடி தாக்கியதில் வீட்டில் இருந்த மின்அடுப்பு, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமானது.

    கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் பகுதியிலும் இன்று காலை இடியுடன் மழை பெய்தது.

    இதில் அப்பகுதியில் உள்ள 125 வீடுகளில் மின்சாதன பொருட்கள் கருகி எரிந்து சேதமானது. இதேபோல் அப்பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தையும் இடி தாக்கியது.

    இதில் கோவில் சுவர்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. மேலும் அங்குள்ள மின்வயர்களும் சேதமானது. இடிதாக்கியதில் கோவிலில் சுவர் பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    சீர்காழி பகுதியில் இடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×