என் மலர்
மயிலாடுதுறை
- போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
- இறுதி போட்டியில் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதியதில் சீர்காழி அணி வெற்றி பெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவுபகலாக மின்னொளியில் நடை பெற்று வந்தது.
போட்டி க்கு பள்ளி தாளாளர் ராதாகிரு ஷ்ண ன்தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார்.போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில்தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சி.பி.எஸ்.இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.
- 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை.
- காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டூர், ஆளக்குடி, புளியந்துறை, மகேந்திரப்பள்ளி, முதலைமேடு ஆகிய ஐந்து ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவையும் போதிய அளவு வினியோகிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்களான காட்டூர் ஊராட்சி தலைவர் வடிவேல், மகேந்திரப்பள்ளி இளவரசிசிவபாலன், முதலைமேடு நெப்போலியன், அளக்குடி சாந்தினி, புளியந்துறை நேதாஜி மற்றும் அளக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவபாலன், 5 ஊராட்சி துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் கையில் காலி குடங்கள் மற்றும் நாமம் இட்ட மண்சட்டி ஏந்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக தினமும் தண்ணீர் வழங்க கோரியும், மின் தட்டுப்பாட்டை போக்க கோரியும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,005 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 41,949 விவசாயிகள் கண்றியப்ப–ட்டுள்ளனர். அவர்களில் 22,892 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 8,916 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மூலம் 9,78,007 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 10,86,963 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 5,43,066 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் 3,58,756 கிலோ யூரியா வழங்கப்பட்டுள்ளது. 3,98,688 கிலோ டிஏபி வழங்கப்பட்டுள்ளது. 1,99,241 கிலோ பொட்டாஷ் வழங்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கூறும்போது:-எனக்கு உள்ள 3 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன். இதனை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம், அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் கூறும்போது:-
எனக்கு உள்ள 4 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார்.
மறையூர் மேலத்தெரு ராஜசேகர் கூறும்போது:-
எனக்கு உள்ள 2 ஏக்கர் நிலத்தில் மறையூர் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் எனக்கு 1 ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 24 கிலோ பொட்டாஷ் இலவசமாக பெற்றேன் என்றார். இதேப்போல் பலன் அடைந்த அனைத்து விவசாயிகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
- வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.
வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் சிவபழனி பேரணியை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
- விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு குறித்து ஓவியங்களாக வரைந்தனர்.
- சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முரளிதரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் சங்கர், முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், பாஸ்கரன், சோலை, சாமி.செழியன், செயலர் வசந்தகுமார் பட்டேல், கணேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு, முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காமராஜரின் படங்களை ஓவியங்களாக வரைந்தனர்.
சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் காமராஜரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக, சிறப்பாக பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.
- சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
- போட்டி–யில் கலந்து கொண்ட மயிலாடுதுறை வாலிபால் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.
சீர்காழி:
தமிழ்நாடு ஸ்டேட் வாலிபால் அசோசியேஷன் நடத்திய கிழக்கு மண்டலங்களுக்கான சீனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டு முதல்முறையாக போட்டி–யில் கலந்து கொண்ட வாலிபால் விளையாட்டு வீரர்கள் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினரை மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பொன்செந்தில், எடின்.ராகுல், ரவீந்திரபாரதி, வாஞ்சிநாதன், சரவணன், வளவன், பழனிவேல், முரளிதரன், பாரி, அணிமேலாளர் சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாட மயிலாடுதுறை அணி தேர்வாகியுள்ளது.
- 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
- குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் .
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலி யார் இந்து மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் "என் குப்பை என் பொறுப்பு " என்ற தலை ப்பில் மாணவர்களுக்கு நெகிழி பையின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் போட்டித் தேர்வு நடை பெற்றது,சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் துவக்கி வைத்த இப்போட்டியில் 1983 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் சீர்காழி நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் ஒத்துழைத்தால் குப்பை இல்லா நகரமாக மாற்ற இயலும் எனவே ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நமது சீர்காழி நகராட்சி தூய்மையான முதன்மை நகராட்சியாக மாறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயிலில் நான்கு வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு தேரோடும் நான்கு வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
சாலையின் தரத்தினை சோதித்து ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரியிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர்கள் பழனி, அகோரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சீர்காழி ஈசானிய தெருவில் அக்னிபுரீஸ்வரர் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்க விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் அக்னிபுரீஸ்வரர் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கதை ஆர்ப்பாக்கம் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து இதே பகுதியில் இயங்கி வருகிறது. இந்த வழியாகத்தான் ஆர்ப்பாக்கம், புளிச்சக்காடு, கொப்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு வரும் மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு சாலையிலேயே அரை நிர்வாணமாக விழுந்து கிடப்பதால் பள்ளி கல்லூரி மாணவிகள், கோவிலுக்கு வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் மது அருந்துபவர்கள் தனது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வழியாக செல்லும் மினி பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்க விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடனடியாக பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு மதுபான கடையினை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது மேலும் இது குறித்து நாம் தமிழர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சாகுல் ஆமிது, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் புத்திரகொண்டான் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே மயிலக்கோயில் கிரா மத்தைச் சேர்ந்த அன்புதா சன் என்பவரின் மகன் பாண்டி யராஜன் (35) என்பவருக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 வருடம் ஆன நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து இலக்கியாவின் தந்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன், கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் இலக்கியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
- அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு ஊராட்சி ராஜேந்திரன் வாய்க்காலையொட்டி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் மணலை அள்ளி தனியார் செங்கல் சூளைக்குக்கும் தனியாருக்கும் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணலை அள்ளுவதால் சுற்றியுள்ள மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, குரங்குபுத்தூர், கருவி, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடிநீர் உப்பு நீராவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் இமயம் சங்கர், கிளைச் செயலாளர் வீரகுமார், பொறுப்பாளர் விஜயபாலன், திமுக கிளை செயலாளர் பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மீண்டும் மணல் எடுத்ததால் ஆக்கூர் முக்கூட்டு வழயாக வந்த லாரிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. மணல் குவாரிகளை வலியுறுத்தப்பட்டது.
- குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மயிலாடுதுறை:
வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான பெயரில் கணக்குகளை வைத்திருக்கும், பொதுமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் பணமோசடிக்கான முயற்சிகள் தற்பொழுது நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்படுள்ளது.
எனவே பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கவனமாக இருப்பதுடன் போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.






