என் மலர்tooltip icon

    மதுரை

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
    • மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    மதுரை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 98 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பஸ் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அதிமுக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் (9-ந் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் இதர தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்ததால் மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.


    இந்த நிலையில் போக்குவரத்து பணிமனை முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் பணிமனைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல்.
    • தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
    • மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர்.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை 9-ந்தேதி (இன்று) முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.

    அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்திருந்தனர்.

    அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது. எனவே இந்த வழக்கை நாளை ஒத்திவைக்குமாறு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு (10-ந்தேதி) ஒத்திவைத்தனர்.

    • மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம்.
    • கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?

    மதுரை:

    பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும், ரூ.1000 ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?

    மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம். கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?

    அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
    • அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    மதுரை:

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

    இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

    • காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
    • அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப் பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், டி.எஸ்.பி. பாலசுந்தரம், யூனியன் ஆணையாளர் பிரேமராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல் படி சீரும் சிறப்புமாக நடைபெறும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.


    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடு பிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும்.

    கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு, தங்க நாணயம், கட்டில் பீரோ, உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாடு பிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

    காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ரூ.44 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும். தமிழக முதல்வர் திறந்து வைப்பார். இன்னும் ஓரிரு நாட்களில் அரங்கம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.
    • அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.


    ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    இதன்பின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் 23 அல்லது 24-ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.
    • நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

    மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள்.

    நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

    நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சிபெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

    நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜனதா.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதல்-அமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

    நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அ.தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

    வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன.
    • ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான்.

    மதுரை:

    மதுரை பாண்டிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ஜனதா இளைஞர் அணி, விவசாய அணி, பட்டியல் அணி, மகளிர் அணி, ஓ.பி.சி. அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறை தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்பாத காரணத்தால் 6 ஆயிரம் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 800 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கியது என்றுதான் கூறவேண்டும். எனவே, தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை ஏற்படுத்த வேண்டும்.

    மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை.

    ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள்தான். இந்த நிலையில் கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் என பெயர் வைக்க இருக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களின் பெயரை வைக்க, பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைஞர் பெயர்தான் வைப்பேன் என கூறுவதை தி.மு.க. கைவிட வேண்டும்.

    பத்திரப்பதிவுத்துறையில் பணம் கொடுத்தால் 6 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடக்கிறது. பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை கொடுத்த பின்னரும், கூடுதலாக ரூ.5,500 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் மட்டுமே உள்ளது. பா.ஜனதா சார்பில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களுக்கு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

    லஞ்ச ஒழிப்புத்துறையினர், தினசரி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினால் கோடி கோடியாக பணம் சிக்கும். அதன் மூலம் தமிழகத்தின் பாதி கடனை அடைத்துவிடலாம். இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தல், மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை.

    இந்தியாவை போல தமிழகத்திலும் மண்டல வாரியாக வரிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பேசுவாரா?.

    ஏற்கனவே துபாய், சிங்கப்பூர் சென்று வந்ததன் மூலம் எவ்வளவு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை கூற வேண்டும். தேர்தலுக்காக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி நாடகமாடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
    • சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டியில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக கரும் பாறை முத்தையாவை வழிபட்டு வருகின்றனர். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவி லில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


    இந்த ஆண்டு திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்டு 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 85 மூடை அரிசியை கொண்டு 2 ஆயிரம் கிலோ சாதம் சமைத்து பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது. கம கம கறி வாசனையுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

    சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவி லிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவது வழக்கமாக .

    மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழா விற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன. 

    • மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆலம்பட்டியை சேர்ந்த சிலர் ஏ.டி.எம். மையம் உள்ள பகுதிக்கு சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ள பெட்டியை திறக்க முடியாமல் கொள்ளை திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா? என தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எம். மைய நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது குறித்து தெரியவரும். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த பின்பு தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×