search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
    X

    சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

    • நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை.
    • நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

    மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள்.

    நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

    நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வந்தேன். ஆனால் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சிபெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

    நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜனதா.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதல்-அமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

    நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அ.தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

    வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×