என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார்.
    • விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அவர் தனது சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். அங்கு விஜய்யின் சுற்றுப் பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பிரசாரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    அது மட்டுமின்றி முதல் நாள் பிரசாரத்தின்போது திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலும் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரமாகி விட்டதால் பெரம்பலூர் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய செல்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.

    சுற்றுப்பயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்வதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    குமரி மாவட்டத்திற்கு அடுத்தமாதம் (அக்டோபர்) 11-ந் தேதி விஜய் வருகை தர உள்ளார். அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வருகை தரும் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு விஜய் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லை பகுதியில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    குமரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட குழித்துறை சந்திப்பு, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அழகிய மண்டபம் சந்திப்பு பகுதிகளில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நாகர்கோவில் மாநகர பகுதியில் விஜய் பேசுவதற்கான இடத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்துள்ளனர்.

    டெரிக் சந்திப்பு, செட்டி குளம் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, நாகராஜா கோவில் திடல் பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணத்தின்போது 3 இடங்களில் பேசுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

    போலீசார் எந்த இடத்தில் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்களோ அந்த இடத்தில் விஜய் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.

    • உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான்.
    • தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

     

    கையெழுத்து இயக்கத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி பேசுகையில், உலகிலேயே தேர்தல் வாக்கு திருட்டு நடப்பது நமது இந்தியாவில் தான், மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்து இருப்பது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க.வினர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி காண நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை நீக்கி மோசடி செய்யும் அரசை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பின்படி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்துகள் வாங்கிடவேண்டும் என்றார்.

     

    இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மகேஷ் லாசர், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ், மண்டல தலைவர்கள் சிவபிரபு, ஐரின் சேகர், மகளிரணி சோனிவிதுலா, கவுன்சிலர்கள் சந்தியா, அனுஷாபிரைட் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.
    • ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் (வயது 29). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த ஆனந்த் (26) என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது அவருடன் ஆனந்துக்கு நட்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசரின் தாயார் ரெஜி (63) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருடைய தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணத்தை கேட்ட போது, கழிவறையில் தான் திடீரென மயங்கியதாகவும், பிறகு கண் விழித்த போது தான் அணிந்திருந்த நகை, கம்மல் உள்பட 11 பவுன் நகையை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உடனே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் நகை பறித்தது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பி.இ. படித்து விட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் இருந்ததால் பெயிண்டிங் வேலை செய்து வந்தேன். ஒரு பெண்ணை காதலித்தேன். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் போதுமான பணம் இல்லை. இந்தநிலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டிற்கு சென்றபோது அவரது தாயார் கழிவறையில் மயங்கி கிடந்தார். மேலும் நகை, கம்மல் அணிந்திருந்தார். இதனை பார்த்ததும் எனது எண்ணம் தவறான பாதைக்கு மாறியது. அந்த நகையை பறித்து காதலிக்கு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி 11 பவுன் நகையை பறித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.

    • ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
    • விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.

    நாகர்கோவில்:

    ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.

    அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.

    அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.

    அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா.
    • கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள், தி.மு.க. வை, த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து தாக்கி பேசி வருவதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    புதிதாக யார்அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால் தான் அவர்கள் எப்போதும் எங்களை விமர்சிப்பார்கள்

    தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனை போக்கை அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா. அவரது கருத்துக்களின் வழி நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

    திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடல் நீர்மட்டம் இன்று திடீரென தாழ்வாக காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும், பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.
    • குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    நாகர்கோவில்:

    மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஒணம். இந்த பண்டிகை நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.

    அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பூக்களால் அத்தபூ கோலம் வரையப்பட்டது. பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தார்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. இதேபோல் மட்டி, கதலி வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    • அழகப்பபுரம் பேரூராட்சியில் காமராஜர் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது.
    • விஜய் வசந்த் எம்.பி. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சியில் நேற்று காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

     

    இந்த நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன்,மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், கிழக்கு மாவட்ட வர்த்தக தலைவர் டாக்டர் சிவகுமார், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குநர் பாண்டியராஜ், அழகப்பபுரம் செயல் அலுவலர் பூதப்பாண்டி, அழகப்பபுரம் இளநிலை பொறியாளர் ஹரிதாஸ் உட்பட அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம்.
    • குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது அங்கு கிடந்தவர் இறக்கவில்லை என்பதும் சுய நினைவின்றி கிடப்பதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை 108-ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகவல் கொடுத்தவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் சுய நினைவற்று கிடந்தவர் வார இறுதி நாள் விருந்தில் பந்தயம் கட்டி மது அருந்தியதில் மயங்கி சாய்ந்தவர் என தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த திருமணமாகாத 40-வயதான தொழிலாளி ஒருவர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம். நேற்று அது போல் மது விருந்தில் அவர் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்கள் வைத்த பந்தய பணத்திற்காக விபரீதத்தை உணராமல் பெரிய பாட்டில் மதுபுட்டியை திறந்து அப்படியே குடித்துள்ளார். அதனால் தான் சுய நினைவு இழந்து மயங்கி சரிந்துள்ளார்.

    இதனை கண்டு நண்பர்கள் பயந்து விட்டனர். மயங்கியவரை இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடி உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் அச்சத்தில் போலீசாருக்கு தொழிலாளி இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
    • மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் படத்திற்கு மரியாதை.

    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.

    இந்நிலையில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு ரொக்க பரிசு தொகை விஜய்வசந்த் எம். பி வழங்கி சிறப்பித்தார்.
    • வெயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நிழல் தரும் பெரிய குடைகள் வழங்கினார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் 5-வது ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க கூட்டம் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு தொகை விஜய்வசந்த் எம். பி வழங்கி சிறப்பித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் புகழ் வணக்க கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாகோடு பேரூராட்சி தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன் கிளிட்டர்ஸ், பால்ராஜ், சதீஷ், கிறிஸ்டோபர், அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், தமிழக மீனவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோர்தான் உள்ளிட்டோர் அமரர் எச். வசந்தகுமார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் விதத்தில் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் எச். வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

    அந்த போட்டி ஆறாம் வகுப்பு முதல் கல்லூரிநிலை வரையிலான மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பரிசாக ரூ.5000-ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3000-ரொக்கமும்,

    மூன்றாம் பரிசாக ரூ.2000-ரொக்கமும் வழங்கப்பட்டது.

    மேலும், வசந்த் அன் கோ சார்பில் சாலையோரம் வெயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நிழல் தரும் பெரிய குடைகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதீஷ்குமார், கிள்ளியூர் மேற்கு மாவட்ட வட்டார தலைவர் என்.எ. குமார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட சேவா தள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், குழித்துறை நகர் மன்ற உறுப்பினர் ரீகன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத் தலைவர்கள் அஜிகுமார், ஜிஜி, வர்த்தக பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல், துணைத் தலைவர் ஆமோஸ், மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சாலின், முன்னாள் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஞானசௌந்தரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தோஷ், ஜெகதீசன், விஜயகுமார், டேவிட், தர்மலிங்கம் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

    ×