என் மலர்
கன்னியாகுமரி
- இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.
- விசாரணையில் இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், தினேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
- எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள்.
- சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் தி.மு.க. ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சுசீந்திரம், சாமிதோப்பு, மயிலாடி பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மயிலாடியில் அதிகபட்சமாக 126.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கடல், இரணியல், கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.47 அடியாக இருந்தது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணைக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.05 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் பஸ்கள் காலை 7.30 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
- அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் ஓரளவு நிரம்பி உள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் பயிர் நடவு பணி நடந்து வருகிறது.
அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை நீடித்தது.
திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.96 அடி யாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடியாக உள்ளது. அணைக்கு 307 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வடசேரி, வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்களில் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), தெங்கம்புதூர், ராஜாக்க மங்கலம் உபமின் நிலையங்களில் 5-ந்தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாகர்கோவில், பெரு விளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, கல்லூரி சாலை, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தடிக்காரன்கோணம், தேரேக்கால்புதூர், கோதைகிராமம், அப்டா, திரவியம் ஆஸ்பத்தரி பகுதி, சடையன்குளம், நாவல்காடு, எறும்புகாடு, தம்மத்துக்கோணம், இருளப்பபுரம், அனந்தநாடார்குடி, பட்டகசாலியன்விளை, கலை நகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன்விளை மற்றும் புன்னைநகர் ஆகிய பகுதிகளிலும்,
5-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையர்புரம், புத்தளம், அளத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
- சுப்பிரமணிய சாமி மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியிடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. தக்கலை, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, சுருளோடு பகுதியிலும் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 35.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையிலில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேசிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 2,049 கனஅடி தண்ணீர் உபரி நீராகும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 871 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,050 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைக்கு நேற்று ஒரே நாளில் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் மழைக்கு இந்த மாதத்தில் இதுவரை 55 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 18 வீடுகளும், கல்குளம் தாலுகாவிலும் 9 வீடுகளும், விளவங்கோடு தாலுக்காவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 11 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 3 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் 15 மின்கம்பங்களும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டது.
- P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் நடத்தும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டி ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி இன்று P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி வாள் விளையாட்டு கழக செயலாளர் அமிர்தராஜ், சுந்தர்ராஜ், இணைச்செயலாளர் ஜோபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாள் விளையாட்டு கழக இணைச்செயலாளர் செல்வி இலக்கியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக தலைவர் சிந்துகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS முன்னிலை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகைகத்பட், மேயர் மகேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

"கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குமரி மாவட்டத்தில் 60,702 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைகள் உள்ளன. 2 லட்சத்து 30 ஆயிரத்து 662 நபர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பி.எச்.எச். குடும்ப அட்டைகளை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 286 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறை திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம்,
நாகர்கோவில்:
கன்னியாகுமரிதுணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (25-ந் தேதி) நடக்கிறது.
எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், கோழிக்கோட்டுப் போத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ் மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளர்.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்ததால் 'குளுகுளு' சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை வரை மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீர் திடீரென மழை பெய்தது.
கன்னியாகுமரி பகுதியிலும் மழை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொட்டாரம், மயிலாடி, இரணியல், குழித்துறை, தக்கலை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு திரளாக வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.71 அடியாக இருந்தது. அணைக்கு 874 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 477 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.04 அடியாக உள்ளது. அணைக்கு 745 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 20.50 அடியாக உள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும் கரை திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 41, பெருஞ்சாணி 47.6, சிற்றார்1-55.4, சிற்றார் 2-46.6, கொட்டாரம் 26.6, மயிலாடி 2.6, நாகர்கோவில் 13, ஆரல்வாய்மொழி 4, முக்கடல் 5.8, பாலமோர் 12.2, தக்கலை 11, குளச்சல் 14, இரணியல் 8, அடையாமடை 12.4, குருந்தன் கோடு 11, கோழிப்போர்விளை 8, மாம்பழத்துறையாறு 26.6, ஆணைக்கிடங்கு 25, களியல் 40, குழித்துறை 10.8, புத்தன் அணை 42.8, சுருளோடு 34.2, திற்பரப்பு 48.6, முள்ளங்கினாவிளை 6.4.
- எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
- அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு, "சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அ.தி.மு.க." என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த போர்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வின் 54-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.வினரை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அப்போது சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட சம்பவத்தால் நாகர்கோவில் வடசேரியில் பரபரப்பு ஏற்பட்டது.






