என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
- கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
- கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
தென் கடலோர மாவட்டங்களை வடகிழக்கு பருவமழை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமடையும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக உள்ளது. முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி பகுதி வெள்ளப்பெருக்காக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீடுகளில் இருந்து கடை மற்றும் பல்வேறு பணிகளுக்கு வெளியில் வந்தவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பகலில் பெய்த மழை இரவிலும் நீடித்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பேச்சிப்பாறையில் 37.6 மில்லி மீட்டரும், சிற்றாறு-1 அணை பகுதியில் 32.6 மில்லி மீட்டரும் பாலமோரில் 31.6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தும் இந்த சப்பாத்து பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்பு வேலி அமைத்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது போன்று ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலானவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கினர்.
இந்த சூழலில் இன்று காலையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் இருந்தது. காலை 8 மணியில் இருந்து பல பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் ஓட்டமும் நடையுமாக வீதிகளில் சென்றனர். மழை காரணமாக பல்வேறு மாவட்டங்க ளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் விடுமுறை எதுவும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொட்டாரம் 17, மயிலாடி 14.2, நாகர்கோவில் 10.2, கன்னிமார் 10.6, ஆரல்வாய்மொழி 16.2, பூதப்பாண்டி 18.2, முக்கடல் அணை 13.2, பாலமோர் 31.6, தக்கலை 7.8, குளச்சல் 3.6, இரணியல் 6, அடையாமடை 15.4, குருந்தங்கோடு 11.6, கோழிப்போர்விளை 16.2, மாம்பழத்துறையாறு 18.2, ஆணைக்கிடங்கு 17.8, சிற்றாறு 1-32.6, சிற்றாறு 2- 26.2, களியல் 25.2, குழித்துறை 10.2, பேச்சிப்பாறை 37.6, பெருஞ்சாணி 16.8, புத்தன்அணை 15.6, சுருளகோடு 15.4, திற்பரப்பு 18, முள்ளங்கினாவிளை 12.8.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.51 அடி யாக இருந்தது. அணைக்கு 1404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 240 கன அடி நீர் மதகுகள் வழியாகவும், 1008 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.15 அடியாக இருந்தது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
சிற்றார்1அணை நீர்மட்டம் 11.02 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாகவும் உள்ளது.






