என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    • பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

    மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

    இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.

    நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    நாகர்கோவில்:

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

    அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.

    நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார்.

    கன்னியாகுமரி:

    மத்திய தொழில் பாதுகாப்புப்படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

    "சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இதன் முக்கிய நோக்கம். வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

     

    இந்த பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அவை தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.

      இப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பயமுறுத்தும் சம்பவம் நாகர்கோவில் பள்ளி விளையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

      நாகர்கோவில் பள்ளி விளை குடோனின் எதிர்புறம் உள்ளது பால்பண்ணை தெரு. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்கள் பணிகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தபோது அவர்களுக்கு போட்டியாக காட்டு மிளா அங்கு வந்தது. அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

      காட்டில் ஜாலியாக திரிந்த மிளா, இங்கு மக்களை கண்டதும் மிரள தொடங்கியது. ஆபத்து என கருதி அந்த மிளா சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதற்கிடையில் மிளாவின் நடவடிக்கையை கண்டு, பயந்து போன மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      சாலையில் ஓடிய மிளா அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் படிக்கட்டில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அந்த வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் மிளா இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது.

      இதற்கிடையில் மிளா ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மிளாவை பார்த்து அச்சத்தில் இருந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மிளாவை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

      இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மிளா நின்ற வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கயிற்றை வீசி மிளாவை பிடிக்க முயன்றனர். வீசப்பட்ட கயிறு மிளாவின் கழுத்தில் விழுந்தாலும், அதனை லாவகமாக மிளா கழற்றி விட்டு விட்டது.

      இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையில் மிளாவும் அங்கிருந்து நகர்ந்து சாலைக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து அது ஓட்டம் எடுக்க, தங்களை முட்டி தாக்கி விடுமோ என்ற பயத்தில் மக்களும் அலறி யடித்து ஓட அந்த பகுதி பதட்டத்திற்குள்ளானது. சாலையில் ஓடிய மிளா, அங்குள்ள மத்திய அரிசி கிட்டங்கியின் முன்பு சென்று ஓய்வெடுத்தது.

      அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வலையை வீசி மிளாவை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது வலையில் சிக்காமல் மிளா போக்கு காட்டியது. இருப்பினும் முயற்சியை கைவிடாத தீயணைப்பு வீரர்கள், சுற்றி வளைத்து வலைக்குள் மிளாவை சிக்க வைத்தனர். பின்னர் அதனை வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

      அவர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிளாவை விட்டனர். இந்த மிளா ஆலம்பாறை மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்திய மிளா பிடிபட்டதும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

      குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மிளாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தோட்ட பயிர்களை மிளா தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொற்றையடி, தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோட்ட பயிர்களை மிளா சேதப்படுத்தி வருகிறது. மிளாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.
      • யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அனுபாமா என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையை நேற்று காலையில் பாகன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் யானையின் உரிமையாளர் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் யானைக்கு தென்னை ஓலை மற்றும் அதற்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

      இந்தநிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து தூங்கினார். அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் என தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.

      இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து அப்பகுதியினர் அருமனை போலீசுக்கும், களியல் வனச்சரகத்துக்கும் தகவல் தொிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், வனச்சரக அலுவலர் அப்துல் காதர் முகைதீனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானையின் உரிமையாளருக்கு தகவல் தொிவித்து அவரும் வரவழைக்கப்பட்டார்.

      இதையடுத்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர் இறங்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்து தெளிந்த பாகனை கீழே இறக்கினார்கள். இதையடுத்து வனத்துறையினரும், யானை உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாகனை விட்டுவிட்டு யானை வாகனத்தில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

      இதைதொடர்ந்து யானையை அண்டுகோடு பகுதியில் இருந்து அருமனை வழியாக திற்பரப்புக்கு நடத்தி கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் யானையும் பாகனும் முன்னே நடந்து செல்ல வனத்துறையினரும், உரிமையாளரும் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக யானையை திற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



      • ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
      • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

      அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

      இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்.
      • படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் பெய்த மழையின் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

      இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

      இதற்கிடையில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தும் காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதனால் படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையின் காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து உள்ளது.

      இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழை காரணமாக கன்னியாகுமரி கடற்கரை மட்டும் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

      • தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.
      • தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

      கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

      நேற்று மக்களவையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார். மேலும் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாராளுமன்ற சபை என்று கூட பாராமல் அவதூறுகளை கூறினார். ஒரு மத்திய அமைச்சருக்கு இது ஒருபோதும் பொருந்தாத ஒன்று.

      அவரது சொற்கள் தமிழகத்தின் வாக்காளர்கள் மீதான தாக்குதல். தமிழ்நாடு மீது மத்திய அரசு கொண்டுள்ள பாரபட்சமான நிலைப்பாடு மீண்டும் தெரிய வந்துள்ளது.

      தமிழக மக்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிரதமர், தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் அவர்கள் தமிழக மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

      • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
      • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

      கன்னியாகுமரி:

      சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த கூட்டம் அதிகமாக உள்ளது.

      அதன்படி இன்று கன்னியாகுமரியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

      கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டனர். அதன் பிறகு அங்குள்ள கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றும் மகிழ்ந்தனர்.

      மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

      இதனால் விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

      ×