என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளா"

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினாலும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அவை தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.

      இப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற பயமுறுத்தும் சம்பவம் நாகர்கோவில் பள்ளி விளையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

      நாகர்கோவில் பள்ளி விளை குடோனின் எதிர்புறம் உள்ளது பால்பண்ணை தெரு. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை வழக்கம் போல் தங்கள் பணிகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தபோது அவர்களுக்கு போட்டியாக காட்டு மிளா அங்கு வந்தது. அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

      காட்டில் ஜாலியாக திரிந்த மிளா, இங்கு மக்களை கண்டதும் மிரள தொடங்கியது. ஆபத்து என கருதி அந்த மிளா சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதற்கிடையில் மிளாவின் நடவடிக்கையை கண்டு, பயந்து போன மக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      சாலையில் ஓடிய மிளா அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் படிக்கட்டில் ஏறி நின்றது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அந்த வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் மிளா இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது.

      இதற்கிடையில் மிளா ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மிளாவை பார்த்து அச்சத்தில் இருந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மிளாவை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

      இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். மிளா நின்ற வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கயிற்றை வீசி மிளாவை பிடிக்க முயன்றனர். வீசப்பட்ட கயிறு மிளாவின் கழுத்தில் விழுந்தாலும், அதனை லாவகமாக மிளா கழற்றி விட்டு விட்டது.

      இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையில் மிளாவும் அங்கிருந்து நகர்ந்து சாலைக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து அது ஓட்டம் எடுக்க, தங்களை முட்டி தாக்கி விடுமோ என்ற பயத்தில் மக்களும் அலறி யடித்து ஓட அந்த பகுதி பதட்டத்திற்குள்ளானது. சாலையில் ஓடிய மிளா, அங்குள்ள மத்திய அரிசி கிட்டங்கியின் முன்பு சென்று ஓய்வெடுத்தது.

      அதனை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வலையை வீசி மிளாவை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களது வலையில் சிக்காமல் மிளா போக்கு காட்டியது. இருப்பினும் முயற்சியை கைவிடாத தீயணைப்பு வீரர்கள், சுற்றி வளைத்து வலைக்குள் மிளாவை சிக்க வைத்தனர். பின்னர் அதனை வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

      அவர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று மிளாவை விட்டனர். இந்த மிளா ஆலம்பாறை மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 3 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்திய மிளா பிடிபட்டதும் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

      குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் மிளாக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தோட்ட பயிர்களை மிளா தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொற்றையடி, தக்கலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தோட்ட பயிர்களை மிளா சேதப்படுத்தி வருகிறது. மிளாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • வனத்துறையினர் விசாரணை
      • 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு பகுதியில் சுற்றித்திரிந்தது

      கன்னியாகுமரி:

      குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 கடமான் (மிளா) குட்டிகள் நின்று கொண்டிருந்தன. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது செல்போனில் அந்த மிளா குட்டிகளை படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

      தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தும்பாக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர்.அதற்குள் மிளா குட்டிகள் மாயமாகி விட்டது. இதனால் வனத்துறை ஊழியர்கள் திரும்பி சென்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதி வாழைத்தோட்டத்தில் இரவு இது போல் மிளா சுற்றித்திரிந்தது என அப்பகுதியினர் மண்டைக் காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

      பின்னர் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      இதனை யாரேனும் சட்ட விரோதமாக வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்தார்களா? மாயமான கடமான் குட்டிகள் அப்பகுதி தோட்டத்தில் பதுங்கி உள்ளதா?எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.
      • வனத்துறையினர் மிளா மானை மீட்டு விளாத்திகுளம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை நண்டு வலை வைப்பதற்காக சென்றனர். அதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த நண்டை எடுப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றனர்.

      கடல் தொழில் முடிந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏதோ தத்தளித்துக் கொண்டி ருந்ததை பார்த்த சக மீனவர்கள் அருகில் சென்று பார்த்த போது மிளா வகை மான் என்று தெரிய வந்தது.

      இதனை தொடர்ந்து கரை பகுதிக்கு வந்து மேலும் 2 பேரை அழைத்து சென்று அந்த மானை பத்திரமாக பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அங்கே அது தப்பி ஓட நினைத்ததால் அதை கால் பகுதியை கட்டி வைத்திருந்தனர்.

      பின்பு வனத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விளாத்திகுளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த அரியவகை மானை அப்பகுதி மீனவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

      இதுகுறித்து மீனவர் ஜேரோன் (பைபர் போட் உரிமையாளர்) கூறுகையில், நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நண்டு வலையை எடுத்து நண்டுபிடித்து வரும்போது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பகுதியில், கடலில் பறவைகள் கூட்டமாக மானை தூரத்தி கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே நாங்கள் 4 பேர் சேர்ந்து அதனை மீட்க முயன்றோம். ஆனால் அதன் எடை அதிகமாக இருந்ததால் எங்களால் அதனை மீட்க முடியவில்லை. பின்னர் கரைக்கு வந்து கூடுதலாக 2 பேரை அழைத்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளாவின் கொம்பில் கயிற்றை கட்டி கரைக்கு இழுத்து வந்து வனசரகத்திற்கு தகவல் கொடுத்தோம். பின்பு அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதியில் விட்டனர் என்றார்.

      ×