என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
    • கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர். பெரியவர்கள் மட்டு மின்றி குழந்தைகளும் ஏராளமானோர் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். இதை யடுத்து 12 சிவாலயங்களிலும் கூட்டம் அலைமோதியது.


    குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு வழிநெடு கிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 12 சிவாலயங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

    அனைத்து சிவாலயங்க ளிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடைபெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பக்தர்கள் இரவில் பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஓட்டி அனுப்பினார்கள்.

    சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித் தது.

    இன்று காலையில் நிர்மால்ய தரிசனமும், 10 மணிக்கு நறுமண பொருட் களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்பா ளும் திருத்தேரில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதேபோல் வடசேரி தழுவிய மகாதேவர் கோவில், சோழராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. 

    • மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை
    • இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்று சிறுமி ஜாக்லின் ரோஸ் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனையடுத்து, கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

    இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஜாக்லின் ரோஸ் ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    "எனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை மகிழ்வோடு அனுப்புகிறேன்" என்று சிறுமி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசிய சிறுமி, "வணக்கம் என் பெயர் ஜாக்லின் ரோஸ், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். குமாரி மாவட்டத்தை சேர்ந்தவள். அநாதை மொழியான இந்தி மொழி எம் ஆதி மொழியான தமிழை ஆழ்ந்து நிற்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழே ஆறாம் தமிழே உயர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ என்னுடைய சிறு சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்" என்று பேசியுள்ளார்.

    • மரணப் பாறை' அருகே செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.
    • கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    அவர்களில் விஜய் (வயது 27) என்ற இளைஞர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலாப் பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

    இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கலைக்கல்லூரியை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் மற்றும் 3 பேராசிரியர்கள் ஆனந்தமாக சென்ற சுற்றுலா சோகத்தில் முடிந்து உள்ளது.

    கேரள மாநிலம் மூணாறுக்கு அவர்கள் சென்ற பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பலியானதே இந்த சோகத்திற்கு காரணம்.

    மூணாறு வட்டவடை பகு தியை பார்வையிட சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அஞ்சுகிராமம் கனகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகள் வேனிகா (வயது 19), திங்கள் சந்தை அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த ராமு மகள் ஆத்திகா (18) சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

    35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் ஒரு மாணவர் இறந்து விட்டார். அவரது பெயர் சுதன் (19).

    இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தின ரிடையே மட்டுமின்றி அவர்கள் படித்த கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலா முடிந்து சந்தோஷமாக ஊருக்கு வருவார்கள் என பெற்றோர் நினைத்திருந்த நிலையில், அவர்களது மரணச் செய்தி வந்தது பலியான மாணவ-மாணவிகளின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அவர்கள் தங்கள் குழந்தைகளின் தோழிகள் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. இதற்கிடையில் கல்லூரியில் இருந்து விபரம் கிடைக்கப் பெற்று பலியான மாணவிகளின் பெற்றோர் இங்கிருந்து புறப்பட்டு மூணாறு விரைந்தனர்.

    அவர்கள் தங்கள் மகள்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மூணாறு ஆஸ்பத்திரியில் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் 2 மாணவிகளின் வீடுகளிலும் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் திரண்டனர். அவர்கள் சோகத்துடன் கண்ணீர் வடித்தபடி அங்கிருந்தனர்.

    பலியான ஆதிகாவின் தந்தை ராமு, திருவிழா கடையில் மிட்டாய் செய்யும் தொழிலாளி. இவரது மற்றொரு மகள் மணவாளக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தனது கஷ்டமான சூழ்நிலையிலும் மகள்களை ராமு நன்றாக படிக்க வைத்துள்ளார்.

    இதனை தற்போது நினைவு கூர்ந்த உறவினர்கள், ஆத்திகாவின் கல்லூரி படிப்பு இன்னும் ஓராண்டில் முடிந்து விடும். அதன்பிறகு வேலைக்குச் சென்று குடும்பத்தின் கஷ்டம் தீர உதவியாக இருப்பார் என அனைவரும் நினைத்த நேரத்தில், பஸ் விபத்தில் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் இடியாக விழுந்துள்ளது எனறனர்.

    விபத்தில் பலியான மற்றொரு மாணவி வேனிகாவும் ஏழ்மையான குடும்ப த்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ரமேஷ், கட்டிட தொழிலாளி. இவரும் தனது 3 குழந்தை களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். இதில் மூத்தவர் தான் பலியான வேனிகா. படிப்பில் திறமையான இவர், அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பழகுவார் என உறவினர்கள் வேதனையுடன் கூறினர்.

    இதேபோல் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவர் சுதன் உடலும் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடலை வாங்கிய உறவினர்கள், சொந்த ஊரான ஏர்வாடிக்கு புறப்பட்டனர்.

    • புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
    • 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிகளில் ரூ.11 கோடியே 54 லட்சத்து 44 ஆயிரம் செலவில் புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

    இதன் திறப்பு விழாவும், ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் நாசர் விழாவில் பங்கேற்று, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு திட்டப் பணிகளை வழங்கினார்.


    பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாம் மற்றும் ராஜாக்கமங்கலம் பழவிளை முகாமில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் 172 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1.23 கோடி கூடுதலாக நிதி ஓதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன.

    ரூ.7 கோடியே 55 லட்சத்து 37ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள 90 வீடு களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், அகஸ்தீசு வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூ ராட்சி தலைவர் செல்வகனி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. நிர்வாகி கள் தாமரை பிரதாப் தமிழன் ஜானி, பொன்ஜா ன்சன், வினோத், இலங்கை தமிழர் முகாம் நிர்வாகி ஞானமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது.
    • ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று காலை "திடீர்" என்று பயங்கர கடல் சீற்றம் ஏற்ப ட்டது.

    இந்திய பெருங்கடல், வங்ககடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் கொந்தளிப்பாக காணப்பட்டது. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு சென்றன.

    மேலும் அவை கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அவசர அவசரமாக கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றனர். ஆபத்தை அறியாமல் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி கிடந்தது. சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.
    • பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.

    இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில், "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.

    கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

    • சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் டிரைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி சூப்பிரண்டு லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    வெளியூர்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் துணை டிரைவர்களை மதுபோதையில் செல்கிறார்களா என பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வந்தது. அந்த பஸ்சை போலீசார் சைகை காட்டி நிறுத்தினர். பின்னர் டிரைவர் மதுபோதையில் உள்ளாரா என கண்டுபிடிப்பதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் மீது குடிபோதை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த வழியாக குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன டிரைவர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து போலீசாரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

    • 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
    • பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும்.

    நாகர்கோவில்:

    சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பள்ளியில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 15 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

    பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்சனைக்கு பிறகே பெற்றோருக்கு தெரியவருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்சனைகள் குறித்து உடனடியாக பெற்றோர், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதிக புகார் வருவது நல்லது. இதனால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட வெளிவரும்.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல் வருகிறது. செல்போன் போன்ற பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

    அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை வாய் சவடால் பேசுகிறார். பொதுவாக அவர் ஏதேனும் பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. இவர்போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.

    மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க.வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லது. மக்களோடு மக்களாக பயணித்தால் தான் மக்கள் பிரச்சனைகளை அறிய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
    • கிராமப்புற மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் அது நமது தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் இன்று அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை.

    இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற வழிகாட்டு தலை விட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.

    குறிப்பாக கிராமங்களில் இந்த குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இந்தியாவின் 50 சதவிகித மருத்துவமனைகளில் குடி நீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம். அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதி களை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டா யத்தில் நமது மக்கள் உள்ள னர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
    • பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ. போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சம்மேளன தலைவர் சவுந்தர்ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் 300 பணிமனைகள் உள்ளன. தேவையான கட்டமைப்பு அரசு போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்த விதமான பஸ்களாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகமே அதை இயக்க வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பிற அரசு துறைகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டு 9 மாத காலம் அவகாசம் என கூறப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை.

    எனவே முதலமைச்சர் உடனடியாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் பதிவு மற்றும் அவர்களுக்கு கேட்பு மனுக்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் குளறுபடி உள்ளது. 75 லட்சம் தொழிலாளர்களின் பதிவு, சர்வரில் அழிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மற்ற துறைகளில் எல்லாம் சர்வர்கள் முறையாக இயங்கும்போது முறைசாரா தொழிலாளர்கள் பதிவில் மட்டும் சர்வர் எப்படி அழிந்தது என்பது தெரிய வில்லை. எனவே உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    அதன்படி விடுமுறை நாளான இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். காலை 8 மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்கும் என்ற நிலையில் அதிகாலையிலேயே படகுதுறையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி கூண்டு பாலம்வழியாக நடந்து சென்று, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை திடீரென அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×