என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து முதல் கட்டமாக தொழுப்பேடு, வில்லுவராயநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 86 முதியோர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு காய்கறி மூட்டைகள் ஏற்றப்பட்ட வேனில் ஆணின் சடலம் எடுத்துவரப்பட்டது. அதனுடன் 2 முதியோரும் அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை, வருவாய்த்துறை போலீசார் உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர்கள் இறப்பது தெரிந்தது. இது பற்றிய அறிக்கை மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் கலெக்டரின் உத்தரவுப்படி நேற்று 3-வது முறையாக கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் அதிகாரிகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காப்பக நிர்வாகி தாமசிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில் முதியோருக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருந்த பலர் வெளியேற ஆர்வமாக இருந்ததால் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக தொழுப்பேடு, வில்லுவராயநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 86 முதியோர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தொழுநோய், மனநலம் பாதித்த 126 ஆதரவற்றோர், படுத்தபடுக்கையாக உள்ள 38 முதியோர், ஊனமுற்ற 9 பேருக்கு காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அவர்கள் இன்று அல்லது நாளை வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

    இதற்கிடையே இன்றும் கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கியது. அதிகாரிகள் முதியோர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அ.நூர்முகமது நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த காப்பகம் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வந்துள்ளது. அரசு விதிமுறைகள் பின்பற்றபடவில்லை. இங்கு இருப்பவர்கள் பலர் அரசு உதவி பெற்று இயங்கி வரும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    முறையான விசாரணைக்கு பிறகு காப்பகத்தை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தான் விசாரணையை தொடங்கி உள்ளோம்.

    விசாரணையின் முடிவில் காப்பக உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    திருப்போரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாள தெரியாத வாகன மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

    திருப்போரூர்:

    மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமம் குண்ணப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் கெங்காதரன். இவருடைய மகன் கணபதி (வயது 25) பிளம்பராக வேலை பார்த்து வந்தார். அவர் சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் வேலை செய்துவிட்டு நண்பர் மூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் பழையமாமல்ல புரம் சாலை வழியே வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

    திருப்போரூரை அடுத்த காலவாக்கம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளின் மீது மோதி சென்று விட்டது. நிலை தடுமாறிய 2 பேரும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விழுந்தனர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினம் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மூர்த்தி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கணபதியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் இல்லம் ஓரிரு நாட்களில் மூடப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்தார்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தாசில்தார் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தங்கி உள்ள முதியோர்களிடம், இங்கு தங்க விரும்புகிறீர்களா? அல்லது வெளியேற விரும்புகிறீர்களா? என்று கேட்டனர்.

    முதல் கட்டமாக வெளியேற விரும்புவதாக கூறிய 32 முதியோர்களை உடனடியாக வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 16 பேர் மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் துரைசாமி சமுதாய கல்வி மையத்துக்கும், மீதம் உள்ள 16 பேர் அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு அடுத்த திருபேர்கண்டிகை கிராமத்தில் உள்ள பேர்டு தொண்டு நிறுவனத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முதியோர் இல்லத்தில் நேற்று மாலை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த முதியோர் காப்பகம் 2017-க்கு பிறகு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். இங்குள்ள 255 பேரில் 86 பேர் நல்ல நிலையில் உள்ளார்கள். அவர்களை அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    122 பேர் மனநலம் குன்றியவர்கள், 38 பேர் படுத்த படுக்கையாக உள்ளனர். 9 பேர் உடல் ஊனமுற்றோர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இங்குள்ள அனைவரும் இடம் மாற்றம் செய்யப்படுவர். இந்த கட்டிடமே முறையான அனுமதி இல்லாமல் உள்ளதால் ஓரிரு நாட்களில் முதியோர் இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகனும் முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அனுமதியின்றி செயல்படும் இந்த முதியோர் இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள், ஆதரவற்றோரை அரசு அனுமதி பெற்ற காப்பகத்துக்கு மாற்ற வேண்டும். அனுமதியின்றி செயல்படும் இந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  #tamilnews
    முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்பதை பாரதிய ஜனதா பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டுள்ளார் என்று நாராயணசாமி கூறினார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மாநிலத்துக்கு நேற்று வருகை தந்தார். அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்றார்.

    நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்து 1½ வருடம் தான் ஆகிறது. அதற்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அதில் பா.ஜனதா கூட்டணி வைத்து இருந்தது. முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்பதுசரிதான். அதை பா.ஜனதா பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுச்சேரி மாநிலத்துக்கு பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தரமான கல்வி, மருத்துவம், இலவச அரிசி, வறட்சி நிவாரணம், விவசாயிகளுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடி அவரது கட்சிக்காரர்கள் சொல்வதை வைத்து பேசி விட்டு சென்று இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தின் உண்மையான நிலவரம் அவருக்கு தெரியவில்லை.


    புதுச்சேரி மாநிலத்துக்கான பல புதிய திட்டங்களை மோடி அறிவிப்பார் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். ஆனால் பிரதமர் எந்த திட்டத்துக்கான அறிவிப்பும் வெளியிடவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு முறையான நிதி வழங்க வேண்டும். அது வழங்கப்படவில்லை. புதுச்சேரி விமான நிலையத்தில் ஓடு பாதை அகலப்படுத்துவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது போன்றவற்றை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வந்தேன்.

    அது குறித்து எதுவும் சொல்லாமல் மேடையில் அரசியல் குறித்து பேசி விட்டு சென்று இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை திட்டுவதற்கு ஒரு பிரதமர் வந்தார். வருகிற ஜூன் 18-ந்தேதிக்கு பிறகு என்னை தவிர (நாராயணசாமியை தவிர) பேச காங்கிரஸ் முதல்-அமைச்சர் இருக்க மாட்டார் என கூறியிருக்கிறார்.

    எனது பெயரை 7 முறை சொல்லி இருக்கிறார். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். கர்நாடகம், மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். தனது தகுதியை மீறி காங்கிரசை பிரதமர் விமர்சித்து இருக்கிறார். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். இதுகுறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு வழக்கில் இன்று காலை காஞ்சீபுரம் 1-வது நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஸ்தபதி முத்தையா ஆஜர் ஆனார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5¾ கிலோ தங்கத்தில் புதிதாக சோமாஸ்கந்தர் உற்சவ சிலை செய்யப்பட்டது. இந்த சிலையின் தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை செய்த தலைமை ஸ்தலபதி முத்தையா, மற்றும் கோவில் செயல் அலுவலர் முருகேசன் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஸ்தபதி முத்தையா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை தடுப்பு பிரிவு அதிகரிகள் முன்னிலையில் 10 நாட்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பாஸ்போர்ட்டை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தி இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் 1-வது நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஸ்தபதி முத்தையா ஆஜர் ஆனார்.

    அப்போது தனது பாஸ்போர்ட்டை அவர் கோர்ட்டில் ஒப்படைத்தார். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். #tamilnews

    பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இருப்பவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு காய்கறி மூட்டைகள் ஏற்றி சென்ற வேனில், இறந்த ஆணின் உடலுடன் 2 முதியோர்கள் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வருவாய்த் துறை, சமூக நலத்துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கருணை இல்ல நிர்வாகி தாமசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 முதியோர் இறந்து இருப்பதும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 பேர் வவை இறப்பதும் தெரிந்தது. இது தொடர்பான அறிக்கையை 6 துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் சமர்ப்பித்தனர்.

    எனினும் சர்ச்சைக்குள்ளான முதியோர் இல்லம் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மருத்துவதுறை வல்லுனர்களை கொண்டு குழு ஒன்றினை அமைத்து முழுமையான விசாரணை நடத்தி விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    அதன் பிறகு அந்த இல்லத்தில் விருப்பமில்லாமல் இருக்கும் ஆதரவற்றவர்களை வேறு இடத்திற்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்கு 20 முதியோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களை வேறு தொண்டு நிறுவனத்துக்கு மாற்ற உள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடலை எடுத்து வரப்பட்டது.



    அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்டிஓ தலைமையிலான குழுவினர் இன்று பாலேஸ்வரம் காப்பகம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, காப்பகத்தில் இருந்து, வெளியேற விருப்பம் தெரிவித்த சுமார் 20 முதியோர்களை, மதுராந்தகத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  #tamilnews
    ஜெயலலிதாவின் உருவச் சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது என்று சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #JayalalithaaStatue
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் உருவச் சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் கொடுத்து இருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.


    பிரதமர் மோடி சொல்லித்தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஓ.பி.எஸ். கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள். அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது.

    அ.தி.மு.க. தனித்தே தான் ஆட்சி செய்து இருக்கிறது. மத்திய அரசுக்கும் ஒத்துழைப்பு தந்து வருகிறது. இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான்.

    புதுச்சேரியில் பிரதமர் மோடி பேசும் போது, “2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் முதல்- அமைச்சராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார்” என்று சொல்லி இருப்பது காங்கிரஸ் கட்சியை மட்டும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கூடுவாஞ்சேரி-பொத்தேரி இடையே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்வே ஊழியர்கள் வந்து சரி செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. மறைமலைநகர் - பொத்தேரி இடையே வந்த போது சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மின்சார ரெயில் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த அனைத்து மின்சார ரெயில்களுக்கும் தெரிவிக்கப்பட்டதும் அந்தந்த ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    சுமார் 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணி அளவில் சிக்னல் சரிசெய்யப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #tamilnews #Signalfailure #electrictrains 

    பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பது குறித்து போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.

    அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் இறந்து இருப்பதும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர் வரை மர்மமாக இறப்பதும் தெரிந்தது.

    மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரிய சுவரில் அடுக்கடுக்கான பெட்டிகள் போன்ற இடமும் இருந்தது.

    இந்த அடக்க முறையானது கேரள மாநிலத்திலும், இத்தாலி நகரிலும் உள்ளதாக கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறி உள்ளார்.

    இந்த முறையில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    மேலும் இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட முதியோர்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை இங்கு அழைத்து வர இடைத்தரகர்கள் எவரேனும் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    கருணை இல்லத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இறந்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு அவர்கள் யார்- யார்? என்பது பற்றிய தகவல் இதுவரை அதிகாரிகளுக்கு தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.

    இதற்கிடையே கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து 6 துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

    இதுபற்றி கலெக்டர் பொன்னையாவிடம் கேட்ட போது கூறியதாவது:-

    கருணை இல்லம் தொடர்பாக முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி கருணை இல்லம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து பொது மக்கள் கூறும்போது, கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் ஆய்வு விபரங்கள் முழுமையாக வெளியிட மறுக்கின்றனர்.

    எனவே இந்த இல்லத்தில் தற்போது சுய நினைவுடன் உள்ளவர்களை வெளிப்படையாக அழைத்து வந்து விசாரணை செய்தால் தான் கருணை இல்லத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா இல்லையா? என்பது தெரியவரும்.

    இந்த கருணை இல்லத்திற்கு தாம்பரம், வேலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எல்லாம் அரசினால் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும் தெரியவில்லை’ என்றனர்.
    வழிப்பறியில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மீண்ட என்ஜினீயர் லாவண்யா கூறினார்.
    சோழிங்கநல்லூர்:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயரான லாவண்யா சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    தாழம்பூரில் தங்கி இருந்த லாவண்யா கடந்த 13-ந் தேதி நள்ளிரவு வேலை முடிந்து மொபட்டில் ஒட்டியம்பாக்கம் அரசன் கழனி-காரணை சாலையில் சென்ற போது 3 கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் அவரது தலையில் பலமாக அடித்தனர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரிடம் இருந்த நகைகள், செல்போன், மொபட், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

    சாலையோரத்தில் கிடந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சுயநினைவு திரும்பியது. குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.

    லாவண்யாவை தாக்கி நகை பறித்த கொள்ளையர்களான செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, நாராயண மூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி மாலைமலர் நிருபரிடம் லாவண்யா கூறியதாவது:-

    சம்பவம் நடந்த இரவு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். இரவு நேரம் என்பதால் அதிகளவில் வாகனங்கள் செல்லவில்லை. சாலை காலியாக இருந்தது.

    அப்போது 3 பேர் மொபட்டை வழிமறித்து என் கையில் அணிந்திருந்த தங்க பிரேஸ்லேட்டை பிடுங்க முயற்சித்தனர். உடனே நான் என்னை எதுவும் செய்யாதீர்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை நானே தருகிறேன் என்று கூறினேன். ஆனாலும் அவர்கள் என்னை தாக்க முயன்றனர். இதனால் நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பின்னால் இருந்து ஒருவர் இரும்பு கம்பியால் தலையில் அடித்தார். நிலைதடுமாறி சாலையில் கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்தேன்.

    என்னிடமிருந்த செல்போன், தங்க நகை மற்றும் மொபட்டை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அங்கு நான் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்தாலும் நான் மனதைரியத்துடன் மீண்டு எழுந்து எதிரே புதியதாக கட்டிவரும் வரும் கட்டிடத்திற்கு ரத்தம் வழிய வழிய நடந்து சென்று சிறிது நேரம் அங்கு தூங்கினேன். அதன் பின் மக்கள் இருக்கும் பகுதிக்கு சென்றால் உதவி கிடைக்கும் என்று நினைத்தேன்.

    முகம் மற்றும் கைகளில் கத்தியால் வெட்டியும் எனக்கு சிறிதும் வலியானது தெரியவில்லை. ஏனென்றால் என் அப்பா ஏற்கனவே ஒரு மகளை இழந்துவிட்டார். மீண்டும் என்னை அவர் இழக்ககூடாது என ஒரே வெறியுடன் நான் இருந்ததால் எனக்கு வலியானது தெரியவில்லை.

    சுமார் 2 மணிநேரம் கழித்து அந்த சாலையில் வந்த ஒரு வாகன ஓட்டியை பார்த்தேன். அவர் மூலம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். போலீசார் என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    என்னை தாக்கியவர்களை எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசார் துரிதமாக கண்டுபிடித்தது பாராட்டத்தக்கது. என்னை தாக்கிய மூவரின் பெற்றோர்கள் வளர்ப்பு சரியில்லை. 3 குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் என்னிடத்தில் காட்டி இவர்கள்தான் வழிபறியில் ஈடுபட்டவர்களா என்று உறுதி செய்தனர்.

    ஆனால் நான் அவர்களின் முகத்தை பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களை நான் வாழ்வில் மறுபடியும் பார்க்கக்கூடாது என்றும் அவர்களுடயை முகம் எனக்கு நினைவில் வந்து காயப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதால் நான் பார்க்கவில்லை என்று கூறினேன்.

    வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து தண்டனை வழங்கும் போலீசார் அவர்களின் புகைப்படத்தை பொது மக்களுக்கு தெரியும் அளவிற்கு விளம்பரம் செய்ய வேண்டும். எனக்கு இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளது. அதை நான் குணமடைந்த பின்பு அரசு எனக்கு உதவினால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். ஐ.டி. அமைச்சர் மருத்துவ மனைக்கு வந்து என்னுடைய ரிப்போட்களை பார்த்தார். அதேபோல் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தினந்தோறும் எனது நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டார். எனக்கு மறு பிறவியை காவல்துறை கொடுத்தது.

    அதேபோல் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவரும் என்னை அக்கறையாக பார்த்துக் கொண்டனர். தமிழக மக்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டதுதான் என்னை பிழைக்க வைத்தது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து என்னிடம் நலன் விசாரித்தது மகிழ்ச்சி அளித்தது. எனது பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 4-வது பிள்ளையாக பள்ளிக்கரணை  ஆய்வாளர் சிவக்குமாரை எங்கள் குடும்பம் பார்க்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சிற்ப பட்டறைக்குள் அரசு பஸ் புகுந்த விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    மாமல்லபுரம்:

    பூம்புகாரில் இருந்து சென்னைக்கு பாண்டிச்சேரி டிப்போ அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கடலூரை சேர்ந்த டிரைவர் ராஜி ஓட்டி வந்தார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று அதிகாலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிற்ப பட்டறைக்குள் புகுந்தது. பின்னர் அருகில் இருந்த பழைய இரும்பு கடைக்குள் புகுந்து நின்றது.

    கடைக்குள் படுத்திருந்தவர்களும், பயணிகளும் அலறினார்கள். டிரைவரும், நடத்துனரும் சுதாரித்து பஸ்ஸின் அவசர வழியை திறந்து பயணிகளை வெளியேற்றினர். விபத்து நடந்த கடைக்குள் படுத்திருந்த அப்பாஸ் கால் ஒடிந்து உயிருக்கு போராடிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    டிரைவர் கண்ணாடி துகள்கள் பட்டு காயமடைந்தார். அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் பஸ் மோதாததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×