என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி ஆட்சியில் புதுவை வளர்ச்சி அடையவில்லை என்று பிரதமர் ஒப்புக் கொள்கிறார்- நாராயணசாமி
    X

    ரங்கசாமி ஆட்சியில் புதுவை வளர்ச்சி அடையவில்லை என்று பிரதமர் ஒப்புக் கொள்கிறார்- நாராயணசாமி

    முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்பதை பாரதிய ஜனதா பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டுள்ளார் என்று நாராயணசாமி கூறினார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மாநிலத்துக்கு நேற்று வருகை தந்தார். அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்றார்.

    நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்து 1½ வருடம் தான் ஆகிறது. அதற்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அதில் பா.ஜனதா கூட்டணி வைத்து இருந்தது. முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்பதுசரிதான். அதை பா.ஜனதா பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுச்சேரி மாநிலத்துக்கு பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தரமான கல்வி, மருத்துவம், இலவச அரிசி, வறட்சி நிவாரணம், விவசாயிகளுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடி அவரது கட்சிக்காரர்கள் சொல்வதை வைத்து பேசி விட்டு சென்று இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தின் உண்மையான நிலவரம் அவருக்கு தெரியவில்லை.


    புதுச்சேரி மாநிலத்துக்கான பல புதிய திட்டங்களை மோடி அறிவிப்பார் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். ஆனால் பிரதமர் எந்த திட்டத்துக்கான அறிவிப்பும் வெளியிடவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு முறையான நிதி வழங்க வேண்டும். அது வழங்கப்படவில்லை. புதுச்சேரி விமான நிலையத்தில் ஓடு பாதை அகலப்படுத்துவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது போன்றவற்றை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வந்தேன்.

    அது குறித்து எதுவும் சொல்லாமல் மேடையில் அரசியல் குறித்து பேசி விட்டு சென்று இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை திட்டுவதற்கு ஒரு பிரதமர் வந்தார். வருகிற ஜூன் 18-ந்தேதிக்கு பிறகு என்னை தவிர (நாராயணசாமியை தவிர) பேச காங்கிரஸ் முதல்-அமைச்சர் இருக்க மாட்டார் என கூறியிருக்கிறார்.

    எனது பெயரை 7 முறை சொல்லி இருக்கிறார். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். கர்நாடகம், மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். தனது தகுதியை மீறி காங்கிரசை பிரதமர் விமர்சித்து இருக்கிறார். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். இதுகுறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×