search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை இல்லத்தில் இருப்பவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை - கலெக்டர் தகவல்
    X

    கருணை இல்லத்தில் இருப்பவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை - கலெக்டர் தகவல்

    பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இருப்பவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு காய்கறி மூட்டைகள் ஏற்றி சென்ற வேனில், இறந்த ஆணின் உடலுடன் 2 முதியோர்கள் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வருவாய்த் துறை, சமூக நலத்துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கருணை இல்ல நிர்வாகி தாமசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 முதியோர் இறந்து இருப்பதும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 பேர் வவை இறப்பதும் தெரிந்தது. இது தொடர்பான அறிக்கையை 6 துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் சமர்ப்பித்தனர்.

    எனினும் சர்ச்சைக்குள்ளான முதியோர் இல்லம் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மருத்துவதுறை வல்லுனர்களை கொண்டு குழு ஒன்றினை அமைத்து முழுமையான விசாரணை நடத்தி விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    அதன் பிறகு அந்த இல்லத்தில் விருப்பமில்லாமல் இருக்கும் ஆதரவற்றவர்களை வேறு இடத்திற்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×