search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் இல்லம் ஓரிரு நாட்களில் மூடப்படும் - அதிகாரி தகவல்
    X

    பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் இல்லம் ஓரிரு நாட்களில் மூடப்படும் - அதிகாரி தகவல்

    உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் இல்லம் ஓரிரு நாட்களில் மூடப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்தார்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தாசில்தார் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தங்கி உள்ள முதியோர்களிடம், இங்கு தங்க விரும்புகிறீர்களா? அல்லது வெளியேற விரும்புகிறீர்களா? என்று கேட்டனர்.

    முதல் கட்டமாக வெளியேற விரும்புவதாக கூறிய 32 முதியோர்களை உடனடியாக வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 16 பேர் மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் துரைசாமி சமுதாய கல்வி மையத்துக்கும், மீதம் உள்ள 16 பேர் அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு அடுத்த திருபேர்கண்டிகை கிராமத்தில் உள்ள பேர்டு தொண்டு நிறுவனத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முதியோர் இல்லத்தில் நேற்று மாலை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த முதியோர் காப்பகம் 2017-க்கு பிறகு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். இங்குள்ள 255 பேரில் 86 பேர் நல்ல நிலையில் உள்ளார்கள். அவர்களை அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    122 பேர் மனநலம் குன்றியவர்கள், 38 பேர் படுத்த படுக்கையாக உள்ளனர். 9 பேர் உடல் ஊனமுற்றோர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இங்குள்ள அனைவரும் இடம் மாற்றம் செய்யப்படுவர். இந்த கட்டிடமே முறையான அனுமதி இல்லாமல் உள்ளதால் ஓரிரு நாட்களில் முதியோர் இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகனும் முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அனுமதியின்றி செயல்படும் இந்த முதியோர் இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள், ஆதரவற்றோரை அரசு அனுமதி பெற்ற காப்பகத்துக்கு மாற்ற வேண்டும். அனுமதியின்றி செயல்படும் இந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  #tamilnews
    Next Story
    ×