என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீர் லாரிக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட திரிசூலம் அருகே உள்ள ஈஸ்வரி நகர் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு பைப்புகளில் தண்ணீர் வராததாலும், டேங்கர் லாரிகளில் நீர் சப்ளை இல்லாததாலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈஸ்வரி நகர் பகுதி மக்களின் ஒரே நம்பிக்கையாக அப்பகுதியில் உள்ள கிணறு உள்ளது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    நெரிசலை தடுப்பதற்காக பொதுமக்களே வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் வரிசை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் மட்டும் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் எடுக்கலாம்.

    இதற்காக கிணற்றை சுற்றி கம்பிகள் அமைத்து உள்ளனர். அதில் 13 கப்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

    தேர்ந்து எடுக்கப்படும் குடும்பத்தினரில் 60 பேர் காலை 6 மணிக்கும், 80 பேர் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த கிணறு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டது.

    நாங்கள் இந்த கிணற்றை தூர்வாரி பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிணற்றில் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர், அதிகாரிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
    மாமல்லபுரம்:

    நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.

    பார் நடத்தியதில் கோடிக்கணக்கான பணத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். மேலும் போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நெல்லையப்பனுக்கு 60 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் கொடுத்த பணத்தை கேட்டு அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம், அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் புகார் மனுவை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பின்னர் லஞ்ச பணம் 50 ஆயிரத்தை வீசிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி நெல்லையப்பன் தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக முகநூலில், எந்தெந்த போலீசார் மாதா, மாதம் லஞ்சம் வாங்கி தன் வாழ்க்கையை சீரழித்து தற்கொலை முடிவிற்கு தள்ளினர் என்ற விவரத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் பார் உரிமையாளர் தற்கொலை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் சம்பவம் நடந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு நேற்று வந்து விசாரணை நடத்தினார். அப்போது நெல்லையப்பன் 3 தண்ணீர் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கேனில் உள்ள பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளது தெரிய வந்தது. அதுகுறித்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

    மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    மேலும் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தற்கொலை வழக்கில் நெல்லையப்பன் குற்றம் சாட்டிய திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல் துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர் குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அனுமதி இன்றி இயங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடத்தி வந்த தையூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யாவு ‘சீல்’ வைத்தார்.

    இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். 
    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள் கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனிடம் மேல் வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு நெல்லையப்பன் வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லையப்பன் இறப்பதற்கு முன்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு காயத்ரிதேவியிடம் வாக்கு மூலம் அளித்தார்.

    அதில் பார் நடத்துவதற்கு 2 இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறி இருந்தார்.

    மேலும் நெல்லையப்பன் தனது பேஸ்புக்கிலும் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில், “பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதில் இதுவரை 7 வருடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ரூ.19 கோடிக்கு மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்து விட்டார். போலீசாருக்கு மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும். ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடுவார்கள்” என்று உருக்கமாக பேசி இருந்தார்.

    பணம் கொடுப்பது தொடர்பாக நெல்லையப்பனுக்கும், அ.தி.மு.க. பிரமுகர்- போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அவர் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்ததாக தெரிகிறது. இதன் பின்னரே அங்கு நெல்லையப்பன் தீக்குளித்து உள்ளார்.

    இதற்கிடையே மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    இதேபோல் போலீஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    அச்சிறுப்பாக்கம் பகுதியில் காரில் வந்து ஆடு திருடியது தொடர்பாக ஒருவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது, சாலையின் ஓரமாக கார் ஒன்று டயர் பஞ்சராகி நின்றது. அந்த காரின் வெளியே இருந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் பின்பகுதி கதவை திறந்து காட்டுமாறு கூறினர்.

    அதில் 18 ஆடுகள் இறந்த நிலையில் இருந்தன. உடனே, அங்கு நின்ற 3 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவன் பல்லாவரத்தை சேர்ந்த சாய் குமார் என்பது தெரிந்தது. அவர்கள் வந்தவாசி அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று ஆடுகளை திருடி காரில் கொண்டு வந்தது தெரிந்தது. வரும் வழியில் அச்சிறுப்பாக்கம் பகுதியிலும் அவர்கள் ஆடு திருடியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காருடன் ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு டெல்லி செல்கிறேன். பா.ஜனதா சார்பாக 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்ளகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொள்கிறார்கள். அதையும் தாண்டி பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய பட்டியல் அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியாது.

    பா.ஜனதா ஆட்சியில் தமிழ்நாடு என்றுமே புறக்கணிக்கப்படாது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை எடுத்து வர இருக்கிறோம். இனிமேலாவது பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச்சை திரித்து பேசி எதிர்க்கட்சிகள் லாபம் அடைய வேண்டாம். தமிழகத்திற்கு அதிகமான இடம் கிடைத்து இருந்தால் அதிக பலன் பெற்று இருப்போம் என்று சொன்னால், அதற்கு தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று தவறாக முகநூல்களில் பரப்பி வருகிறார்கள். கண்டிப்பாக பா.ஜனதாவினருக்கு தமிழகத்தின்மேல் அக்கறை உண்டு. திமுக-காங்கிரஸ் அல்லாத ஆட்சி காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக மக்களின் நீர் தேவையை போக்க இருக்கிறது.

    காங்கிரஸ் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுமை செய்தது என்றும், இலங்கை தமிழர்களை இந்திய தமிழர்களை பாதுகாக்கவில்லை என்பதை இன்னும் மக்களிடம் வலிமையாக எடுத்துச் சொல்வோம்.



    தமிழக மக்களுக்காக தான் தமிழக பா.ஜனதா இருக்கிறது. தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டம் கொண்டு வர வேண்டுமோ அதை கொண்டுவரக்கூடிய முதன்மை கட்சியாக தமிழக பா.ஜனதா இருக்கிறது. ஆனால் இவர்கள் தமிழ், தமிழ் என்று தமிழர்களை ஏமாற்றி வந்தார்கள். தமிழகத்திற்கு ஆதரவான திட்டங்கள் இல்லை என்றால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லும் துணிச்சலும் எங்களிடம் உண்டு.

    தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பதை என்னால் சொல்ல முடியாது. அது பிரதமர் மோடியின் முடிவு. இந்தக் கூட்டணியில் பல பேர் வெற்றி பெற்றிருந்தால் அதை என்னால் சொல்ல முடியும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரிவினை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது என்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் பா.ஜனதாவினர்.

    தூத்துக்குடி தவிர வேறு எங்கு சென்றாலும் ஜெயித்து இருப்பேன் என்ற மனநிலை எனக்கு கிடையாது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் என்றுமே நன்றியுள்ளவளாய் இருப்பேன். அடுத்த வாரம் அங்கு ஒரு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா வருகிற ஜூலை 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 1979-ம் ஆண்டு இந்த விழா நடந்தது.

    இப்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெற உள்ளது. விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும், 24 நாட்கள் படுத்த கோலத்திலும், பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளையும், குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பொன்னையா முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கூட்டினார். இதில் தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்தரரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ந.தனபால், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் க.ரமணி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தின் கீழே தான் அத்திவரதர் சிலை உள்ளது. அந்த குளத்தில் இருந்து அத்தி மரத்தால் ஆன அத்திவரதரை வெளியே எடுக்க உள்ளனர்.

    அதற்கு முன்பாக குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற உள்ளனர். இதற்காக மின் மோட்டார் எந்திரங்கள், குழாய்கள் கோவிலுக்கு வந்துள்ளன. விரைவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீர் இதன்மூலம் வெளியேற்றப்படும். அதன்பின்னர் சிலை வெளியே கொண்டு வரப்படும்.
    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் அ.தி.மு.க. பிரமுகரும், போலீசாரும் பணம் பறித்ததாக குற்றம்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமதி (30) என்ற மனைவியும், ருஜன்யா (7) என்ற மகளும், கந்தசாமி என்ற ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் ஒரு ஓட்டலில் ரூ.30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தேன். பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதால் இதுவரை என்னிடம் அ.தி.மு.க. பிரமுகர் 7 வருடத்தில் ரூ.19 கோடிக்கும் மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்துவிட்டார். எவ்வளவு காசு கொடுத்தாலும் அவருக்கு பத்தாது. போதாக்குறைக்கு போலீசாருக்கும் மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும்.

    ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடிவிடுவார்கள். ஏண்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்று பலமுறை நான் வருந்தி உள்ளேன். தமிழகத்தில் மதுவை ஒழிக்க ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகிய தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் மதுவை ஒழித்தால் 1 கோடி பெண்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நான் இறப்பதற்கு முன் இப்பதிவை வெளியிடுகிறேன்.

    இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நெல்லையப்பன் பேசி பதிவிட்டுள்ளார்.

    மேலும் அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்த நெல்லையப்பனை போலீசார் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தன் தற்கொலைக்கான முழு காரணத்தையும் அவர் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்தது மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. அமைப்பு செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவி ஏற்பு விழாவில் நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக ஆதாரமற்ற தகவலை சொன்னால் எப்படி?.



    ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் விழாவில் பங்கேற்பது குறித்து தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் சுபாஷ் சந்திரபோஸ் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன்(வயது 60). இவரது வீட்டில் உள்ள கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.

    தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பாழடைந்த அந்த கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி கண்ணப்பனின் மகன் சந்தோஷ்(30), அவரது நண்பர்கள் அன்பழகன் (32), காளிதாஸ்(34) ஆகியோர் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றனர்.

    இதற்காக சந்தோஷ், முதலில் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதைகண்ட அன்பழகன், காளிதாஸ் ஆகியோர் சந்தோசை மீட்க கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த சேகர்(34), ராஜு(35), கோவிந்தசாமி(34) ஆகியோர் ஓடிவந்து கிணற்றில் விழுந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, கிணற்றில் விஷவாயுவை போக்க ‘ஸ்பிரே’ அடித்தனர். பின்னர் உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்தபடி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த 6 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன், காளிதாஸ் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். சேகர், ராஜு, கோவிந்தசாமி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னைக்கு வந்த சவுதி விமானத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தலைமறைவான முன்னாள் குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.

    இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.

    அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.

    7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.

    விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
    ஆதம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், சாந்தி நகரை சேர்ந்தவர் லாவண்யா. தனியார் இணைய தள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர், இரவு பணிக்கு செல்வதற்காக ஆதம்பாக்கம், மோகனபுரி தெருவில் காருக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாவண்யா வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

    இதில் லாவண்யாவிடம் செல்போன் பறித்தது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், பாலாஜி, விக்னேஷ் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பிடிபட்டவர்களில் சஞ்சய் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.

    பாலாஜி கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். விக்னேஷ் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்.

    உல்லாச செலவு செய்ய அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதே போல் அவர்கள் வேறு எந்த இடங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி காலை டெல்லி செல்கிறார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில் பா.ஜனதா கட்சி மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த முறையை போலவே இந்த முறையும் பா.ஜனதா கட்சி கூட்டணி மந்திரிசபையை அமைக்க முடிவு செய்துள்ளது.  பிரதமராக நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அன்று இரவு 7 மணிக்கு இதற்கான விழா நடைபெறுகிறது.


    பிரதமருடன் மந்திரிகள் சிலரும் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பா.ஜனதா கூட்டணி தலைவர்களும், பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். இதற்கு 30-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் டெல்லி செல்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அவரும் அன்றே புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது பயண திட்டம் பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
    ×