search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லாவரத்தில் குடிநீர் தட்டுப்பாடு - கிணற்று நீரை நம்பி இருக்கும் மக்கள்
    X

    பல்லாவரத்தில் குடிநீர் தட்டுப்பாடு - கிணற்று நீரை நம்பி இருக்கும் மக்கள்

    பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீர் லாரிக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட திரிசூலம் அருகே உள்ள ஈஸ்வரி நகர் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு பைப்புகளில் தண்ணீர் வராததாலும், டேங்கர் லாரிகளில் நீர் சப்ளை இல்லாததாலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈஸ்வரி நகர் பகுதி மக்களின் ஒரே நம்பிக்கையாக அப்பகுதியில் உள்ள கிணறு உள்ளது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    நெரிசலை தடுப்பதற்காக பொதுமக்களே வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் வரிசை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் மட்டும் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் எடுக்கலாம்.

    இதற்காக கிணற்றை சுற்றி கம்பிகள் அமைத்து உள்ளனர். அதில் 13 கப்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

    தேர்ந்து எடுக்கப்படும் குடும்பத்தினரில் 60 பேர் காலை 6 மணிக்கும், 80 பேர் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த கிணறு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டது.

    நாங்கள் இந்த கிணற்றை தூர்வாரி பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிணற்றில் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    Next Story
    ×