என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே அமைதி பூங்கா பின்புறம் சின்ன வேட்டுவ பாளையம் செல்லும் வழியில் சுமார் 20 ஏக்கரில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை ஈரோடு சக்தி மசாலா நிதி உதவியுடன், தூர் வாருவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சக்தி மசாலா நிறுவனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து குளம் தூர்வாருவதற்கான மராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தாசில்தார் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் கிருஷ்ணன், கணேசன், அக்னி ஸ்டீல்ஸ் சின்னச்சாமி, வி.ஐ.டி செந்தில்நாதன், ஆண்டாள் பேப்பர்ஸ் சுப்பிரமணி, கொங்கு பள்ளி தாளாளர் சென்னியப்பன், சண்முகம்.
ம.தி.மு.க. கந்தசாமி, த.மா.கா. நகர செயலாளர் திரு மூர்த்தி, பல்லவி பரமசிவம், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், அவைத்தலைவர் சந்திர சேகரன், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், அருள்ஜோதி செல்வராஜ், நகர செயலாளர் கல்யாண சுந்தரம், கே.எம்.பழனிச்சாமி, துரைராஜ், கேபிள் துரை, ஏ.வி.பால கிருஷ்ணன், பி.சுப்பிரமணியம், ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ரவி, சண்முகம், சங்கர், மோகன்குமார், கருப்புசாமி, தங்கமுத்து, பழனிச்சாமி, தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த மாரனூரை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் எடுத்தார். பணத்தை அவர் ஒரு பையில் வைத்து வெளியே வந்தார். இதை நோட்டமிட்ட ஒரு மர்ம ஆசாமி அவரை பின் தொடர்ந்து உள்ளான்.
சத்தி ஈஸ்வரன்கோவில் அருகே தான் வந்த ஸ்கூட்டரின்சீட்டின்அடியில் வைத்து பூட்டி அங்கு தனது நண்பரை பார்க்க சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமி ஸ்கூட்டரின் பூட்டை லாவகமாக பட்டப்பகலில் உடைத்து உள்ளே இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை திருடி தப்பி சென்று விட்டான்.
மீண்டும் ஸ்கூட்டரை எடுக்க வந்த சண்முகம் அங்கு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கி அருகே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வைக்காதே வைக்காதே தன்மானத்தை அடகு வைக்காதே... வைக்காதே வைக்காதே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைக்காதே...” என்று கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி “இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி ஈரோடு காளைமாடு சிலை அருகே வரும் 20ஆம் தேதி ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ராணி (வயது 50).
நேற்று இரவு ராணி அரிசி மாவு அரைப்பதற்காக கிரைண்டரை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே அவரது பேரன் ஜெயபிரகாஷ் ( வயது 6) நின்று கொண்டு இருந்தான்.
ராணி கிரைண்டரை தொட்ட போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. அவருடன் நின்று கொண்டிருந்த பேரன் ஜெயப்பிரகாசையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்தனர்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது மனைவியும் பேரனும் கிரைண்டர் அருகே சுயநினைவின்றி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிரைண்டரில் அரிசி அரை பட்ட நிலையில் ஓடாமல் நின்று இருந்தது . சந்தேகப்பட்டு ரவிக்குமார் கிரைண்டரை தொட்ட போது சாக்கடித்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்த டாக்டர் ராணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். ஜெயபிரகாசுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப்போன்று அவல்பூந்துறையை சேர்ந்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி இறந்தார். இது பற்றிய சம்பவம் வருமாறு:-
ஈரோடு அடுத்த அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38) .எலக்ட்ரீசியன்.
தியாகராஜன் நேற்று மாலை கள்ளுக்கடை மேடு சீனிவாசா வீதியில் ஒரு வீட்டில் எலக்ட்ரீசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
தியாகராஜன் மோட்டார் கம்ப்ரசரை ரிப்பேர் சரி செய்ய வேண்டி சுவிட்சை போட்டுவிட்டு மோட்டாரில் உள்ள வால்வு அடைப்பதற்காக கையை வைக்கும் போது மோட்டாரை தொட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தியாகராஜன் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் தியாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வழியிலேயே தேவராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் வடவள்ளி வேடர் காலனியை சேர்ந்தவர் கபில்தேவ் வயது 34. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா, கவிதா, சுனிதா என்ற 3 மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஆனது. இதில் மனைவி கோபமுற்று வெளியே சென்றதால் மனமுடைந்த கணவன் வீட்டில் தனியாக இருக்கும்போது மது அருந்திக்கொண்டு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று கபில்தேவின் உடலை கைப்பற்றினார்கள். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் பவர் டெக் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வந்தன.
இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தையும் மீறி விவசாய நிலங்கள் வழியாக உயர் மீன் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
1885 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி கம்பங்கள் அமைக்கும் சட்டத்தின் அடிப்படையில் விவசாய விளைநிலங்களை வருவாய் துறையினர் கையகப்படுத்தி மின்வாரியத்திற்கு வழங்கி வருகின்றனர்.
எனவே இந்த தந்தி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதோடு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் போராட்ட குழுவினர் சந்தித்தனர்.
ஈரோட்டில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர் .
ஆனால் திட்டமிட்டபடி தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதனால் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டவுன் டிஎஸ்பி ராஜு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கலெக்டர் அலுவலகம் வந்ததும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே பெருந்துறை ரோட்டில் வந்த விவசாயிகள் திடீரென சட்ட நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை கண்ட போலீசார் அங்கு ஓடி சென்று தீயை அணைத்து விவசாயிகளை கைது செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான முனுசாமி தலைமையில் 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
அந்தியூர்:
அந்தியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோர் கலந்து கொண்டு 1376 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று கல்வி துறை உள்பட ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வியக்கத்தகு பணிகள் நடந்து இந்தியாவே வியக்கும் வகையில் நடந்து வருகிறது.
மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
மேட்டூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் வருகிற போது அங்குள்ள ஏரி குளங்களில் அந்த நீரை நிரப்புவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
மேலும் ஆற்றங்கரையோரங்களில் தடுப்பணைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பள்ளிக்கு கட்டணம் செலுத்தவில்லை என அந்த மாணவியை வெளியே நிறுத்தி வைத்ததாக என் கவனத்துக்கு வந்தது.
உடனடியாக வெளியேற்றப்பட்ட மாணவியை கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் அந்த மாணவி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது போன்ற ஏதேனும் என் கவனத்துக்கு வருமேயானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்படி ஒரு தடவைக்கு இருதடவை மூன்று குறை வருமேயானால் கடும் நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பவானி:
பவானி அருகே உள்ள சன்னியாசிபட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வையாபுரி என்பவரின் மகன் சக்திவேல் (வயது 29).
சக்திவேல் இரு சக்கர வாகன மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். கல்பாவி மேல்கட்டிய கவுண்ட னூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் கிருத்திகா (20).
கிருத்திகா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து முடித்துள்ளார். இவருக்கும் மெக்கானிக் சக்திவேலுக்கும் காதல் அரும்பியது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டுவார்கள் என எண்ணினர்.
இதில் காதலன் வீட்டில் எதிர் பார்த்தது போல் பச்சை கொடி காட்டினர். ஆனால் பெண் வீட்டிலோ சிகப்பு கொடி தூக்கினர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் காதலர்கள் காதலை கைவிடவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
பிறகு காதல் ஜோடி கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று அங்கு மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பிறகு காதல் தம்பதியினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பாதுகாப்பு கேட்டு மனுவும் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் வினோதினி இருவரது பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்த வரவழைத்தார். இதில் பட்டதாரி பெண் கிருத்திகாவின் பெற்றோர் இந்த காதல் திருமணத்துக்கு சம்மதிக்கவே இல்லை. இதை ஏற்று கொள்ளவே மாட்டோம் என கூறினர்.
இதனால் போலீசார் காதல் தம்பதியை மணமகன் வீட்டில் ஒப்படைத்தனர். பெற்றோரை பிரிந்து கிருத்திகா தனது காதலனின் பெற்றோரிடம் சென்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 40.2 மி.மீ. மழை கொட்டியது.
இதனால் ரோட்டோரம் மழை தண்ணீர் ஓடியது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் பவானி கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதே போல் அணைப்பகுதிகளான கொடிவேரி அணை, வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் மழை பெய்தது. குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.
பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் நகர் வீதியில் உள்ள அண்ணா பெரியார் நினைவகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே.வி .ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, சிவ சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் அரும்பணி காரணமாகவே திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றி நிலைத்துக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் பல்வேறு பணிகளை தமிழகத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த அரசு மக்களுக்குச் செய்கின்ற சேவைகள் இன்னும் மேலும் மேலும் தேவையான பணிகளை ஆற்றுவதற்கு இந்த நாளில் அத்தனை பேரும் சூளுரை ஏற்று பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல். இந்த அரசின் சார்பாக அப்படிப்பட்ட நிலை எதுவும் இல்லை. பழைய முறையே தொடரும். ஏற்கனவே உள்ள நிலையில் தொடர்ந்து பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு தான் எடுக்க வேண்டும். அதை நான் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி அருகே உள்ள ஒற்ற கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நிர்மலா தேவி (வயது 30).
நிர்மலாதேவி ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வந்தார். இதில் அவர் பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த நிர்மலாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து விட்டார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.






